கடத்தல்கார கருணா கும்பலுடன் போராடி தனது மகனை மீட்ட வீரத் தாய்

karuna-groupஅம்பாறை பாண்டிருப்பு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை வெள்ளை வானொன்றில் மூன்று இளைஞர்கள் கடத்தப்பட்டதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதிக்க முற்பட்டதையடுத்து அந்த மூவரும் சில மணி நேரத்தினுள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இதுபற்றி மேலும் தெரியவருவதாவது;

பாண்டிருப்பு பிரதான வீதியில் தனியார் தொலைத் தொடர்பு நிலையமொன்றுக்கு முன்பாக நேற்றுக்காலை 10.30 மணியளவில் நான்கு இளைஞர்கள் நின்று கதைத்துக் கொண்டிருந்தனர்.

இவ்வேளையில் அப்பகுதிக்கு வெள்ளைவானொன்றில் வந்தவர்கள் நால்வரையும் இழுத்து வானுக்குள் ஏற்றியபோது அதிலொரு இளைஞனின் தாய் கடத்தல்காரர்களுடன் போராடி தனது மகனை வானுக்குள்ளிருந்து வெளியே இழுத்தெடுத்துவிட்டார்.

எனினும் அந்த வெள்ளைவான் ஏனைய மூவருடனும் கல்முனைப் பக்கமாகச் சென்று மறைந்துவிட்டது.

இந்தச் சம்பவம் நடைபெற்றபோது அவ்விடத்திலிருந்து சுமார் 25 மீற்றர் தூரத்தில் பொலிஸார் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். எனினும் கடத்தல்காரர்களிடமிருந்து அந்த இளைஞர்களை மீட்க அவர்கள் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதையடுத்து சம்பவம்பற்றி கடத்தப்பட்ட இளைஞர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் பொதுமக்களும் அவ்விடத்தில் திரண்டதுடன் கல்முனைப் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடும் செய்துள்ளனர். அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இந்த முறைப்பாட்டில் , அப்பகுதியில் நின்றும் எதுவித நடவடிக்கையும் எடுக்காத பொலிஸாரின் இலக்கத்தகட்டு எண்களையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேநேரம் இந்த மூன்று தமிழ் இளைஞர்களதும் கடத்தலுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் இறங்க முற்படவே பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் அவர்களை சமாதானப்படுத்தியதுடன் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.

இந்தநிலையில் கடத்தப்பட்ட மூன்று இளைஞர்களும் பிற்பகல் 2.30 மணியளவில் சம்மாந்துறை நயினாகாடு பகுதியில் விடுவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் தணிந்தது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.