தமிழீழம் சாத்தியமா?! தமிழ் நாட்டிலிருந்து ஒரு கண்ணீர் மடல்

sad-eyeஅன்பான ஈழத்து தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.

தினமும் சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல் துடித்துக்கொண்டிருக்கும் தமிழ் நாட்டு உறவுகளில் நானும் ஒருத்தி.

மனம் திறந்து சில விடயங்களை விவாதிக்க வேண்டும் போல் தோணுகிறது

தமிழீழம் சம்பந்தமா பல கேள்விகள் இங்கே எழுகின்றன. தமீமீழம் கிடைக்குமா? இத்தனையாயிரம் உயிர்கள் பலியாகிய பின்னாலும் இது தேவையா ? இந்த இரண்டும் தான் நம்மளைப் போன்றவர்களுக்கு எழும் கேள்விகள்.

முதல் கேள்வியைவிட இரண்டாம் கேள்விக்கு விடை தெளிவாகத் தெரிகிறது. ஆம் நிச்சயம் தேவை. கிடைக்க வேண்டும். சிங்களனை நம்பி ஒரு தமிழன் நிம்மதியாக வாழமுடியாதுங்க. சமீபத்தில நடந்த அந்த துயராமான சம்பவத்தை நீங்கள் கேள்விப் பட்டிருப்பிங்க. மட்டக்களப்பு யுத்த பூமி அல்ல அங்கேயும் கூட எட்டு வயதுச் சிறுமி தினுஷிகாவை கடத்திக் கொன்றுவிட்டு கிணத்துல போட்டிருக்காணுங்க கொலைகாரப் பாவிங்க. கிழக்கு முழுமையா விடுவிக்கப் பட்டு அமைதி தவழ்கிறது என்று சிங்களம் அறிவிக்கிறது. அமைதியின் லட்சணத்தை பாருங்க.

தமிழீழத்தின் தேவையைத்தான் இது தெளிவாகக் காட்டுது. ஆனால் அது சாத்தியமா? சாத்தியம் என்றால் நாம என்ன செய்ய வேணும் இது சம்பந்தமா விவாதிக்க விரும்புறன். வெறும் விடுதலைப் புலிகளின் பிரச்சனை இல்லிங்க இது. உலகத்தமிழர் அனைவருக்கும் இதில் பங்கு இருக்கா? இல்லையா?

சும்மா தர்மம் வெல்லும் என்று மகாபாரதத் தனமா கூவிக்கிட்டு இருக்க முடியாதுங்க! வல்லவன் வாழ்வாங்கிறதுதான் உண்மை.

விடுதலை போராட்டம் தோற்காது என்று வீரவசனம் பேசுவது கூட சரியாப் படலேங்க. நமக்கு கியூபாவையும் வியட்நாமையுதான் தெரியும் எத்தனை நியாயமான விடுதலைப் போராட்டங்கள் கஷ்டப்பட்டு போராடியும் அழிக்கப் பட்டு இருந்த இடம் தெரியாமல் போய் இருக்கின்றன. தப்பா பேசுறேன்னு நினைக்காதிங்க அந்த நிலைமை உங்களுக்கு வரக்கூடாதுங்க! வரவே கூடாது!

சரி ஒரு முக்கியமான விசயம் சொல்றேன்.

எந்த ஒரு சாதகமாக சூழலும் இல்லாமல்தான் பிடல் கஸ்ட்றோ விடுதலை வாங்கியிருக்கிறார். கடுமையான போராட்டங்கள். நினைச்சே பார்க்க முடியாத அழுத்தங்கள். சளைக்காமல் போராடினார். வென்றார். காரணம் என்ன? ஒற்றுமை, ஒற்றுமை, ஒற்றுமை. அயர்லாந்து விடுதலைப் போராட்டம் சாதகமான சூழல் இல்லாமலே வென்றிருக்கிறது அதுக்கும் ஒற்றுமைதான் காரணம்.

ஆனால் தமிழீழ விடுதைலப் போராட்டத்தில் பல சாதகமான சூழல் இருந்திருக்கின்றன. நாமதான் அதைக் கெடுத்திருக்கின்றோம். அதற்கான காரணங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பழைய குப்பைகளை கிளறுவதாக நினைக்காதீங்க. விட்ட தவறுகளை மறுபடியும் மறுபடியும் விடக்கூடாதல்லவா அதற்காகத்தான்.

1.தமிழ் நாட்டு அரசியல்வாதிகள்.

அன்றும் சரி இன்றும் சரி. இவர்களின் போக்கே அருவருப்பா இருக்கு. ஈழவிடுதலைக்கு தமிழ் நாடு மிகப் பெரிய அனுகூலம். அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி மத்திய அரசை நிர்ப்பந்தித்து சரியான தீர்வை வாங்கிக் கொடுக்கத் தவறி விட்டார்கள். எம்.ஜீ. ஆர் ஒரு பக்கம் பார்த்தால் கருணாநிதி வேறு பக்கம் பார்ப்பார். இப்போ ஜெயலலிதாவிற்கும் கருணாநிதிக்கும் இதுதாங்க நடந்திட்டிருக்கு. இரண்டு பெரிய கட்சிகளும் இந்தப் பிரச்சனையில் ஒன்று சேர்ந்தால் அது எவ்வளவு பெரிய பலம். கேட்டால் அது எப்படி முடியும் என்பார்கள்? சிங்களனால் முடிகிறதே. SLFP மீது UNP எவ்வளவு விமர்சனங்களை வைத்தாலும் சிங்களனின் நலம் என்று வரும்போது எப்படிப் கைகோர்க்கிறானுங்க பாருங்க அதுவும் தமிழனுக்கு எதிராகச் செயல்படும் போது எப்படி எல்லாம் ஒண்ணாகிறானுங்க. JVP ஐய எடுத்துக்குங்க இலங்கை அரசாங்கத்தால் எப்படி எல்லாம் ஒரு காலத்தில் கொன்று குவிக்கப் பட்டார்கள். இப்போது பாருங்க தமிழர்களுக்கு எதிராக எப்படி எல்லாம் கைகோர்த்து இருக்கிறாங்க. தமிழர்களால் இனியாவது முடியுமா?

2.சகோதர யுத்தம்

தப்பாக எடுத்துக்காதீங்க, கலைஞர் கருணாநிதியைப் போல் பேசமாட்டேன். சாத்திரியின் வலைப் பதிவைப் பார்த்தேன். உண்மைதான் சாத்திரியின் கருத்தை 90 % ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அனைவருடமும் தவறுகள் இருந்திருக்கின்றன. சாத்திரி சில விடயங்களை மறைத்திருக்கிறார் போல தெரியுது. விடுதலை எனும் கொள்கையில் தெளிவாக இருந்திருந்தால் சாத்திரி குறிப்பிடும் இயக்கங்கள் தவறு செய்திருக்காதுகளே! இந்த இயக்கங்களை ஒன்றிணைக்காமல் தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் கட்சிக்கு ஒரு இயக்கத்தை ஆதரித்து இதிலும் தங்கள் அரசியலை காட்டியது வேதனையான விசயம்.

3.தமிழீழ அரசியல்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப் பெரிய பலம் விடுதலைப் புலிகளின் வீரமும் தியாகமும்தான் என்றால் மிகப் பெரிய பலவீனமாக இருப்பது அரசியலும் கருத்துப் பரப்புரையும்தான். மக்களை அரசியல் மயப் படுத்த புலிகள் தவறி விட்டார்கள் (நன்றி திரு. வழுதியின் கட்டுரை) என்றே நினைக்கத் தோணுது. மக்கள் விடுதலை இயக்கத்தின் மாபெரும் சக்திகள். மக்களின் நலம்தான் புலிகளின் நலம். மக்களை அவர்கள் உயிராக எண்ண வேண்டும். அதிலும் வன்னி மக்களை தெய்வங்கள் என்றே சொல்லலாம். *****

ஒரு விடயம் சொல்கிறேன் ரணில் விக்கிரமசிங்காவை தமிழ் மக்கள் நம்பியது கூட பாரவாயில்லை புலிகள் நம்பியது சற்று வருத்தமாகத்தாங்க இருக்குது. சரி நடந்தது நடந்து விட்டது. ரணில் குள்ள நரி வேலை பார்க்கிறார் என்று தெரிந்தவுடன் மிகவும் எச்சரிக்கையாக இருந்திருக்கலாம். என்ன சொல்ல வர்றன் என்றால் 2005 ஆம் ஆண்டு தேர்தலில் ரணிலையே ஜெயிக்க வைச்சிருக்கலாம். தமிழ் மக்கள் வாக்களித்திருந்தால் ரணில் நிச்சயம் ஜெயிச்சிருப்பார். இவ்வளவு அழிவு வந்திருக்காது. புலிகள் தங்களை இன்னும் பலப் படுத்தியிருக்கலாம். ஏற்கனவே ரணில் காலத்தில் எற்பட்ட அனுபவத்தை மனதில் வைத்து, அதே ரணிலுடன் ரொம்ப ஜாக்கிரதையா, பதிலுக்கு ரணில் மாதிரியே சாணக்கியத்தனத்தோட நடந்திருக்கலாமே. மற்றுமொரு பிரிவு ஏற்படாமல் தவித்திருக்கலாம். இவ்வளவு நடந்திருக்காதே. மக்களை ரொம்ப நல்லவே அரசியல் மயப்படுத்தி இருக்கலாம்.

4.கருத்துப் பரப்புரை

வெறுமனவே எங்கள் தலைவன் பிராபாகரன், எங்கள் யுத்தம் தர்ம யுத்தம் என்று கோஷம் போடுறீங்க. இப்போது லண்டனில் நடக்கும் போராட்டம் போல முதல்லயே நடத்தியிருக்க வேணும். திரு. பிராபாகரன் அவர்களை நினைக்கும் போது உண்மையான தமிழர்களுக்கு பெருமித உணர்வு வரும். அதற்கு நானும் விதிவிலக்கு கிடையாது. ஆனால் அதையே வைத்து கோஷம் போடுவதால் மற்ற சமூகத்தை எந்த அளவிற்கு கவர முடியும்? தப்பா எடுக்காதீங்க! என்ன சொல்ல வருகிறேன் என்றால். தமிழீழத்தின் தேவையை உணர்ந்து அதை புலிகளால் பெற்றுத் தரமுடியும் என்று நம்புவதால், அவங்களை ஆதரிக்கிறோம். அதனை வழி நடத்துவதால் பிரபாகரனை ஆதரிக்கிறோம் என்று தெளிவாக பரப்புரையை மேற்கொண்டிருக்க வேணும். புலம் பெயர் தமிழர்களோட பல போராட்டப் புகைப் படங்களைப் பார்த்திருக்கிறோம். பிரபாகரன் அவர்களின் படங்கள் பல இருக்கின்றன. நல்ல விசயம் ஆனால் தமிழீழத்தின் படங்களை காணவில்லையே. தமிழீழத்திற்காகத்தானே நாம் அவரை நேசிக்கின்றோம். இது தான் நம்ம நாடு. நம்ம நாடு ஸ்ரீறிலங்கா கிடையாது. தமிழீழம்தான் என்பதை உலக அரங்கில் சத்தமாச் சொல்லணும். தற்போது நடக்கும் பரப்புரை ரொம்ப நல்லது. இதை முதலே செய்திருக்கலாமே.

ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினால் குறைந்தது 99 % தமிழர்கள் அங்கு கண்டிப்பா போகணும். அந்த இடமே ஸ்தம்பிக்கணும். லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டம் போல எல்லாவற்றிலும் எல்லா இடங்களிலும் நடக்கணும். குறிப்பாக தமிழ் நாட்டில் நடக்கணும் நாடே அதிரணும்

இன்னொரு ரொம்ப முக்கியமான விசயம்

தமிழ்நாட்டில் ஈழ ஆதரவை தொடங்கி மிகப் பெரிய அளவில பேச வைத்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதாங்க. ரொம்ப அற்புதமான கருத்துப் பரப்புரை. பெரிய எழுச்சி ஏற்பட்டது. நாங்களெல்லாம் ரொம்ப சந்தோஷப் பட்டோம். அப்புறம் என்ன நடந்தது தெரியுமா? சீமான் போன்றவர்கள் புலிகளின் வீர தீரங்களை பேசினார்கள் (தயவு செய்து தப்பா நினைக்காதீங்க, விடுதலைப் புலிகளைப் பற்றி சின்ன விமர்சனம் வைத்தாலே வேற மாதிரி பட்டம் கட்டப் பார்காதீங்க. நான் இங்கு விமர்சனம் கூட வைக்கவில்லை. நான் சொல்லவர்றதைக் கொஞ்சம் கேளுங்க). சீமான் போன்றவர்களின் உணர்வை மதிக்கிறோம். புலிகளையும் பிரபாகரனையும் ரொம்ப நல்ல மதிக்கிறோம். ஆனால் சில நேரங்களில் பேச வேண்டியதைப் பேசாமல் வெறுமனமே வார்த்தைகளைக் கொட்டுவதால், விளைவுகள் வேறமாதிரி போய்விடுது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. இடையில் சீமான் இந்த மாதிரி பேச, இதற்கென்றே காத்திருந்த நம்மளோட எதிரிகள் புலிகளையும் சீமான் போன்றவர்களையும் எதிர்த்துப் பேச, ஆக புலி ஆதரவு, புலி எதிர்ப்பு என்று பட்டிமன்றக் கணக்கா பிரச்சனை சூடு பிடித்தது. நடந்தது என்ன இந்தப் பட்டிமன்றச் சூட்டில் ஈழத் தமிழரோட சோகம் காணாமல் போய்விட்டது. கம்யூனிஸ்ட் கட்சி எதுக்காகப் போராடியதோ அந்த எழுச்சி சிதைக்கப் பட்டது. மறுபடியும் சிங்களனுக்கே வெற்றி. பேச்சுக்கு ஊடாக வரலாற்றை சொல்லுங்கள். தெளிவை ஊட்டுங்கள். அதன் பின் உங்களோட ஆதரவை வெளிப்படுத்துகள். யாராவது குறுக்கே கேள்விகள் கேட்டால் ஆத்திரப் படாதீங்க, நியாயமா விளக்கம் சொல்லுங்க. கேள்விகள் நியாயமா இருக்கலாம் அதற்கான பதில்களை கொடுத்தால் அந்தப் பதில்களும் நியாயமாத்தான் இருக்கும்

இப்போது மறுபடியும் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது நல்ல முறையில் போகணும்

5.துரோகிகள்

தனிப் பட்ட முறையில் புலிகள் மீது மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம் ஆனால் சிங்களனோடு சேர்ந்து போராட்டத்தைக் கொச்சைப் படுத்துபவர்களை துரோகி என்று கூறாமல் பட்டுக் கம்பளமா விரிப்பார்கள்.

தேனி என்றொரு வெப்சைட். நினைக்கவே காறித்துப்பணும் போல இருக்கு. இவ்வளவு எழுதுறாங்களே சிங்கள இராணுவத்தால் ஈவு இரக்கமின்றி கொல்லப்படும் மக்களைப் பற்றி ஒரு வரி எழுதுறாங்களா?! இவங்க எல்லாம் மனுஷப் பிறவிதானா? ஷோபாசக்தி போன்றவர்களிடம் காணப்படும் நேர்மை கூட இவர்களிடம் இல்லை. இவங்க துரோகிங்க இல்லாம வேறு யார்?

அதில ஆனந்த சங்கரியோட கடிதத்தை அடிக்கடி போடுறாங்கள். சங்கரி கேக்கிறார்! எப்படி? யானைப் பசிக்கு கோழிக் குஞ்சு கணக்கா கேக்கிறார்!

ஐயா சங்கரியாரே! உங்களோட ஒரு வார்த்தையையாவது சிங்களம் கேட்குமா? நட்போடு இருப்பது வேறு ஆனால் நக்கித் திரியாதீங்க. ஆனால் இந்த நேரத்தில் நட்போடு சிங்கள அரசோடு இருந்தாலே அவன் ஈனசாதி நாய்தான் அப்படின்னா நீங்க யார்?

புலி ஆதரவா எதிர்ப்பா என்கிற பிரச்சனை இல்லீங்க இது! தமிழரோட உயிர் பிரச்சனை ஒட்டு மொத்த தமிழன் தமிழச்சியோட தன்மானப் பிரச்சனை. அதே நேரம் விடுதலைப் புலி ஆதரவாளர்களே ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் ஒரு சில சம்பவங்களால் கவலை காரணமா விடுதலைப் புலிகளை எதிர்த்தால், தமிழீழத்தின் நியாயங்களை சொல்லி புரிய வையுங்க. எடுத்த உடனையே அவர்களையும் எதிர்த்து விரோதியாக்கிக் கொள்ளாதீங்க. துரோகிகள் வேறு இவர்கள் வேறு.

புலி எதிர்ப்பாளர்களே! (சிங்கள அடிவருடிகள் அல்ல அவர்கள் மன்னிக்க முடியாதவர்கள்) உங்களுக்கு ஒரு கண்ணீர் வேண்டுகோள். இது தனிப்பட்ட ஒரு இயக்கத்தின் பிரச்சனை அல்ல. தமிழினத்தின் உயிர்ப் பிரச்சனை. தங்களின் சுயலாபங்களுக்காக அவர்கள் போராட வில்லை. பிரபாகரன் நினைத்திருந்தால் எப்பேர்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம்! தனது மக்களுக்காக எந்தளவு பெரிய பொறுப்பை தாங்கிப் போராடுகிறார். தவறுகள் நடந்திருக்கின்றன, மறுக்கவில்லை. மாகாத்மா காந்தியின் அஹிம்சைப் போராட்டத்திலேயே தவறுகள் இருக்கும் போது ஆயுதப் போராட்டத்தில் இல்லாமல் போகுமா? அதையே திரும்பத் திரும்பப் பேசாமல் உங்க தனிப்பட்ட எதிர்ப்பை தூக்கிப் போட்டு விட்டு தமிழினத்தின் எதிர்காலத்திற்காக தமிழுணர்வாளர்களுடன் கரம் சேருங்க.

6. ஊடகங்கள்

மக்கள் தொலைக் காட்சியை தவிர மற்றவற்றை நினைத்தாலே வயிறு எரியுது. இவற்றை ஈழத் தமிழர்களும் பார்த்துத் தொலைக்கிறார்களே என்று நினைத்தாலே தலை சுத்துது. தமிழனின் பிணம் குவியுது. இவனுங்க மானாட மயிலாட ஆடுறானுக. ஈழத்தமிழர் பிரச்சனை மட்டுமில்லீங்க எந்த ஒரு தமிழனோட எந்த ஒரு பிரச்சனையையும் இவனுங்க கவர் பண்ணுறதே கிடையாது. ஈழத் தமிழர்களே! உங்களுக்கு ஈரம் இருப்பது உண்மையானால் சன் டிவி, கலைஞர் டிவி போன்றவற்றை சுத்தமா விட்டுத் தள்ளுங்க.

சுவிட்சர்லாந்திலிருந்து எனது தோழி ஒருத்தி நடந்த சம்பவத்தைக் கூறினாள்

அது ஈழத் தமிழர் ஒருத்தரோட டெலிக்காட் கம்பனி. லைக்காடெல்லோ ஏதோ ஒண்ணு. சன் மூவீசோட அயன் படத்தைப் பார்க்கிறதுக்காக அத்தனை பேருக்கும் வருடாந்த போனஸா டிக்கட் எடுத்துக் கொடுக்கப் போறாங்களாம். அங்கு வரும் மற்ற ஆடியன்ஸ் காக ஸ்டால் போட்டு தங்களை விளம்பரப் படுத்தப் போறாங்களாம். எனது தோழியே இதை என்னிடம் கூறினாள். இது என்ன கொடுமை இப்படியும் ஈழத் தமிழரா?

ஈழம் எரியுது. வேலை ரொம்பவே இருக்கிறது. தமிழீழம் சாத்தியமா? இது வெறும் விவாதம் கிடையாது. கற்பில் சிறந்தவள் கண்ணகியா மாதவியா என்கிற பிரச்சனை கிடையாது, வாழ்கைக்கு உகந்தது காதல் திருமணமா நிச்சயிக்கப் பட்ட திருமணமா என்பது போன்ற பட்டி மன்ற விவாதம் கூட இல்லீங்க.

இதில தர்மம் வெல்லும் போன்ற ஆன்மீகச் சொற் பொழிவுகள் வைக்காமல் விஞ்ஞான ரீதியாக விவாதியுங்க. நடமுறைச் சாத்தியமான விஷயங்களை முன்வையுங்க. அது மட்டுமல்லாமல் உடனே செய்ய வேண்டிய பணிகளையும் குறிப்பிடுங்க. வழுதியோட கருத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தயவு செய்து அனைவரும் விவாதத்திற்கு வாருங்கள். சாத்திரி, தமிழச்சி, சபேசன், இளங்கோ, (எங்கே காணாம போயிட்டீங்க) நெடுக்காலபோவான், நாரதர், கறுப்பி, தூயா (உங்களின் நானும் ஈழமும் ரொம்ப நல்ல முயற்சிங்க), பருத்தியன் (உங்களின் வலைப் பதிவு நெகிழ்வாக இருந்தது), நிலாமதி, கலைஞன், இன்னும் பலரிடம் பல கருத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. சிவா சின்னப்பொடி, வ.ஐ.ச.ஜெயபாலன் போன்றவர்களும் யாழில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். உலகெங்கும் தமிழர்களிடம் ஏற்பட்டுள்ள இந்த உணர்ச்சையை அணையாமல் பார்க்கணும் அதை பல மடங்கு பெருக்கணும்.

என்னோட கருத்துகள்ள தவறு இருந்தால் தெரியப் படுத்துங்க

நன்றி

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.