ஈழத்தமிழர்கள் படும் அவலங்களால் சீர்காழி காங்கிரஸ் வட்டாரத் தலைவர் தீக்குளிப்பு: அவர்களுக்கு என் உயிரை காணிக்கையாக்குகிறேன்; மருத்துவமனையில் நீதவானிடம் ரவிச்சந்திரன் வாக்குமூலம்

in_7_2_09_1நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சீர்காழி வட்டார காங்கிரஸ் கட்சித் தலைவர்  ரவிச்சந்திரன் (45 வயது) இன்று சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கமிட்டபடி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

இதுபற்றி தெரியவருவதாவது:-

சீர்காழி மணல்மேடு பகுதியில் உள்ள சர்க்கரை ஆலை ஒன்றில் வேலை பார்க்கும் ரவிச்சந்திரன் அதிகாலை 2.30 மணிக்கு திடீரென தன் வீட்டிற்கு வெளியே வந்து, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கங்கள் இட்டபடியே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

ரவிச்சந்திரனின் உரத்த குரலை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரைக் காப்பாற்ற முயற்சித்தனர். ஆனாலும் அதற்குள் ரவிச்சந்திரனின் உடல் 65 சதவீதம் தீக்காயங்களுடன் கருகி விட்டது.

தீக்குளித்த ரவிச்சந்திரனின்  உயிரைக் காப்பாற்ற மயிலாடுதுறை அரசு மருத்துவமனிக்கு கொண்டு சென்றனர். அப்போது, ஈழத்தில் தினந்தோறும் அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் தமிழர்களுக்காகவும் அவர்களுக்கு எதுவும் உதவாத தன் கட்சியை கண்டித்தும் இந்த தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டதாக சொல்லியிருக்கிறார் ரவிச்சந்திரன்.

ரவிச்சந்திரனின் தாயார் சாரதாவும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தான். அவர் மகளிர் காங்கிரஸ் பிரிவு உறுப்பினர்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ஒருவர் தீக்குளித்திருப்பது அந்த பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

ரவிச்சந்திரன் வாக்குமூலம்

தீக்குளித்த ரவிச்சந்திரன் உயிரைக் காப்பாற்ற மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு ரவிச்சந்திரன் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். ரவிச்சந்திரன் உயிர் பிழைப்பார் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கவில்லை. உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில் மயிலாடுதுறை மாஜிஸ்திரேட்டிடம்  வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அந்த வாக்குமூலத்தில் நேற்று இரவு டி.வி.பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஈழத்தமிழர்களின் அவலங்களை பார்த்து நெஞ்சு பதைத்தேன்.  இத்தனை அவலத்திற்கு உள்ளாகியிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு உதவ என் கட்சியினர் முன்வரவில்லையே என எனக்கு ஆதங்கமாக இருந்தது.

இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும்.   அங்கே அப்பாவித்தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.  இந்தியா நினைத்தால் இலங்கை தமிழர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முடியும். ஆனால் அதற்கான முயற்சியில் இறங்காதது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.   ஈழத்தமிழர்களுக்காக என் உயிரை காணிக்கையாக்குகிறேன்’’ என்று தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

ரவிச்சந்திரன் வீட்டில் தீக்குளிப்பதற்கு முன்பு தினசரி  செய்தித்தாள் ஒன்றில்  ஈழத்தமிழர்கள் துயரம் தன்னை மிகவும் பாதித்ததாக எழுதி வைத்துள்ளார்.   கூடவே “தமிழீழம் வாழ்க” என்றும் “ராஜபக்ச ஒழிக” என்றும் முழக்கங்களையும் எழுதி வைத்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.