ஈழத் தமிழர்களுக்காக இந்தியாவே கண்ணீர் விடுகிறது – குஜராத் முதல்வர் நரேந்திர மோடி

narendra-modiஇலங்கைத் தமிழர்களின் நிலையைப் பார்த்து நாடே கண்ணீர் விடுகிறது, வேதனைப்படுகிறது. ஆனால் இலங்கை தமிழர்களை காக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறினார்.

பாஜகவுக்கு ஆதரவாக நரேந்திர மோடி நேற்று தமிழகத்தில் பிரசாரம் செய்தார்.

முதலில் கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து அவர் நாகர்கோவிலில் பேசினார். அங்குள்ள நாகராஜா கோவில் திடலி்ல் நடந்த தேர்தல் பிரச்சார பொது கூட்டத்தில் பேசிய மோடி, பேச்சைத் தொடங்குவதற்கு முன்பு, பாரத நாட்டின் தென்கோடியில் வாழும் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு எனது வணக்கம் என தமிழில் பேசினார்.

பின்னர் மோடி பேசியதாவது…

குஜராத்தும், தமிழ்நாடும் கடற்கரையில் அமைந்துள்ளதால் ஆண்டவன் இரு மாநிலங்களுக்கும் நல்ல வளத்தை தந்தார். ஆனால் எங்கள் செயல்பாடுகள் காரணமாக குஜராத் பல மடங்கு உயர்ந்த நிலைக்கு சென்றுள்ளது.

குமரி மாவட்டத்தில் இருக்கும் குளச்சல், குஜராத்தில் இருந்திருந்தால் இந்நேரம் நாட்டின் மிகப்பெரிய துறைமுகமாக மாறியிருக்கும்.

பொதுத்துறையும், தனியாரும் சேர்ந்து செயல்பட்டதால் அங்கு 41 துறைமுகங்கள் உருவாகியுள்ளன. நாட்டில் உள்ள மொத்த சரக்குகளில் 80 சதவீதம் குஜராத் துறைமுகம் மூலம் கையாளப்படுகிறது.

சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் ஒரே கட்சி ஆட்சி செய்துள்ளது. இதில் 50, 52 ஆண்டுகள் ஒரு குடும்பம் ஆட்சி செய்தது. ஆனால் மக்களுடைய துயரங்கள் தீர்ந்ததா? சுத்தமான குடிநீர் கிடைத்தா? குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைத்ததா? ஏழை மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைத்தா? இளைஞர்களுக்கு வேலை கிடைத்ததா? இதற்கெல்லாம் காரணம் வாக்கு வங்கி அரசியல்தான்.

குடும்ப அரசியல் நாட்டை மோசமான நிலைக்கு கொண்டு சென்று விட்டது. டெல்லியை பார்த்து தமிழ்நாட்டிலும் குடும்ப அரசியல் நடைபெறுகின்றது.

தி.மு.க.வில் ஒரு பகுதியினர் டில்லியையும், சிலர் தமிழ்நாட்டையும் பார்த்துக்கொள்கின்றனர். அப்படியும் குடும்ப சண்டை தீராததால் தமிழ்நாட்டில் வடக்கை அவர் பார்த்துக் கொள்ளட்டும், தெற்கை இவர் பார்த்துக் கொள்ளட்டும் என்று பிரித்துக் கொண்டுள்ளார்கள்.

தமிழகத்தையே இவர்கள் பங்கு போட்டு கொள்ளையடித்து வருகிறார்கள். இதேபோல டெல்லியில் சோனியா காந்தி குடும்பத்தினர் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த அரசியல் முடிவுக்கு வரவேண்டும்.

இந்த வாக்கு வங்கி அரசில் குடும்ப அரசியலால் நமக்கு பல சிக்கல்கள் உள்ளது. நாடு முன்னேற வேண்டுமானால் இந்த வாக்கு வங்கி அரசியலையும், குடும்ப அரசியலையும் ஒழிக்க வேண்டும்.

ஈழத் தமிழர்களுக்காக நாடே அழுகிறது..

இலங்கையில் தமிழ் சகோதரர்கள் கொல்லப்படுவதை மத்திய அரசால் தடுக்க முடியவில்லை. இலங்கை தமிழர்கள் ரத்தமும், நம் ரத்தமும் ஒன்றுதான். இலங்கைத் தமிழர்களின் நிலையைப் பார்த்து நாடே கண்ணீர் விடுகிறது, வேதனைப்படுகிறது. ஆனால் இலங்கை தமிழர்களை காக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இலங்கை தமிழர்களுக்கு சமஉரிமையுடன் வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்றால் மத்தியில் பா.ஜ.க, ஆட்சி அமைய வேண்டும். அதற்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும்.

நான் பொன்ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டு கேட்டு வந்துள்ளேன். வெறும் ஓட்டு கேட்கும் அரசியல்வாதி நான் இல்லை. அது எங்கள் குஜராத் பாரம்பரியமும் கிடையாது.

கடந்த சுனாமியின் போது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு குஜராத்தில் இருந்து ரயில் முலம் அரிசி, மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கினோம். இப்போது குஜராத் மக்கள் சுனாமி வீடுகள் கட்டி கொடு்த்து கொண்டு இருக்கின்றனர்.

உங்கள் விரல் நுனியில் இருக்கும் சக்தி, பகவான் கிருஷ்ணனின் விரல் நுனியில் இருக்கும் சக்தியைவிட அதிக சக்தி வாய்ந்தது. உங்கள் விரல் நுனி மூலம் ஒருபட்டனை அழுத்தினால் ஒரு அரசையே ஆட்டி அசைக்கலாம் என்றார் மோடி.

கோவையில்..

பின்னர் கோவையில் பிரசாரம் செய்தார் மோடி. அங்குள்ள வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், திருப்பூர் மற்றும் கோவை மண்டலத்தில், ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை போயுள்ளது. மின்தடையால் தொழில் வளர்ச்சி குறைந்து போய் விட்டது. தொழிற்சாலைகள் பல மூடப்பட்டுள்ளன.

இதே நிலைதான் நாடு முழுவதும். நாட்டில் தற்போது கிட்டத்தட்ட ஒன்றரை கோடி பேர் வேலை இழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்கெல்லாம் காரணம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தவறான கொள்கைகள்தான்.

ஆனால் குஜராத்தில், நாங்கள் வருடத்திற்கு 365 நாட்களும் மின்சாரம் விநியோகம் செய்கிறோம். குஜராத்தில் எங்களால் சாதிக்க முடிந்தபோது ஏன் இந்தியாவில் சாதிக்க முடியாது, ஏன் தமிழகத்திலும் சாதிக்க முடியாது.

இங்கு என்னிடம் வர்த்தக சபையினர் 10 அம்ச கோரிக்கைகளைக் கொடுத்துள்ளனர். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் இதை நாங்கள் நிறைவேற்றுவோம்.

நாட்டில் தீவிரவாதம் பெருகி விட்டது. பிரிவினைவாதம் பெருகி விட்டது. இதைத் தடுக்க காங்கிரஸ் கூட்டணி அரசு தவறி விட்டது. தீவிரவாதிகளுக்கு அவர்களுக்குத் தெரிந்த பாஷையிலேயே பாடம் கற்றுத் தர வேண்டும்.

மும்பைத் தாக்குதல் தொடர்பாக மன்மோகன் சிங் அமெரிக்காவை நம்பிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக பாகிஸ்தானுக்கு போக வேண்டும். அங்கு மறைந்திருக்கும் தீவிரவாதிகளை பிடித்துக் கொண்டு வர வேண்டும் என்றார் மோடி.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.