காயமடைந்தவர்களில் பலருக்கு எரிகாயங்கள்: பிரான்ஸ் மருத்துவக் குழு அம்பலப்படுத்தியது

afpவவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருபவர்களில் சிலர் எரிகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அவ்வைத்தியசாலையில் பணியாற்றும் பிரான்ஸ் வைத்தியர்கள் கூறியிருப்பதாக ஏ.எவ்.பி. செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச சட்டங்களுக்கு அமையத் தடைசெய்யப்பட்ட இரசாயணக் குண்டுத் தாக்குதல்களால் ஏற்பட்ட எரிகாயங்களாக இது இருக்கலாமென அந்தச் செய்திச் சேவை தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த இரண்டு கிழமைகளில் 72 வைத்தியர்கள் மற்றும் தாதிமாரைக் கொண்ட வைத்தியக் குழு இடம்பெயர்ந்த 700 பேருக்குச் சிகிச்சையளித்திருப்பதுடன், இவர்களில் 100 பேர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக ஏ.எவ்.பி. தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களின் தோல்கள் மற்றும் தசைகளைப் பார்க்கும்போது இடம்பெயர்ந்த மக்கள் அரசாங்கத்தால் கூறப்படும் மீட்பு நடவடிக்கைக்காக எவ்வளவு விலைகொடுத்துள்ளார்கள் என்பது தெரிகிறது என பிரான்ஸ் நாட்டு வைத்தியர் ஒருவர் ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார்.

துப்பாக்கிச் சூடுகள், ஷெல்தாக்குதல்கள், விமானத் தாக்குதல்கள் போன்றவற்றுக்கு ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என்ற வேறுபாடின்றி மக்கள் எவ்வாறு முகம்கொடுத்துள்ளார்கள் என்பது அவர்களின் காயங்களைப் பார்க்கத் தெரிவதாக அந்த வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

“காயமடைந்தவர்களின் உடல்களிலிருந்து பல தன்னிணைப்புத் துப்பாக்கிகளின் சன்னங்கள் மற்றும் கூர்மையான சன்னங்களை வெளியேற்றினோம்” என பிரான்ஸ் நாட்டு சத்திரசிகிச்சை நிபுணர் டானியல் கயொக்ஸ் ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார்.

“10 நாட்களில் நாங்கள் 30 சன்னங்களை மக்களின் உடல்களிலிருந்து மீட்டுள்ளோம். அவற்றில் 10 சன்னங்கள் சிறுவர்களின் கால்கள் மற்றும் கைகளிலிருந்து மீட்கப்பட்டவை. முதியவர் ஒருவரின் முழங்காலிலிருந்தும் ஒரு சன்னத்தை நாம் மீட்டிருந்தோம்” என மற்றுமொரு பிரான்ஸ் சத்திரசிகிச்சை நிபுணரான ப்ஃரெட்ரிக் வாவிடின் அந்தச் செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாதுகாப்பு வலயத்தில் விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்தினருக்குமிடையில் தொடர்ச்சியான மோதல்கள் நடைபெற்று வருவதாகத் தெரியவருகிறது.

கடந்த 24 மணித்தியாலங்களில் இராணுவத்தினர் நடத்திய ஷெல் தாக்குதல்களில் 378 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பாதுகாப்பு வலயத்திலுள்ள வைத்தியர்களை மேற்கோள்காட்டி பி.பி.சி. செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களைவிட 1.122 பேர் காயமடைந்திருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

பாதுகாப்பு வலயத்தின் மீது இராணுவத்தினர் தாக்குதல்களை நடத்துவதில்லையென பாதுகாப்புத் தரப்பினர் கூறிவரும் நிலையிலேயே இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றிருப்பதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்தே ஷெல் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக வைத்திய அதிகாரிகளை மேற்கோள்காட்டி பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.