மாடுகள் கொல்லப்படுவது குறித்து, பேசும் அரசாங்கத்தின் கூட்டணியில் உள்ளவர்கள், வடக்கில் மக்கள் கொல்லப்படுவது குறித்து ஒரு வார்த்தைக்கூடப் பேசுவதில்லை – கிரியல்ல

2079kiriella-jஎதிர்க்கட்சித் தலைவர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விஜயம் செய்வது, அரசாங்கத்தை போல் சர்வதேசத்திடம் பிச்சை கேட்பதற்கு அல்ல எனவும் அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்த விடயங்களை முன்வைப்பதற்காகவே அவர் அங்கு விஜயம் செய்வதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் பணிமனையில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகத்திற்கும், ஊடக சுதந்திரத்திற்கும், மனித உரிமைகளுக்கும், சட்டம் மற்றும் சமாதானத்திற்கும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

அத்துடன் அரசாங்கம் அரசியல் சாசனத்தை மீறி செயற்பட்டு வருகின்றது. யுத்தத்தை காரணம் காட்டி அரசாங்கம் மீறிவரும் ஜனநாயக, ஊடக சுதந்திரம், மனித உரிமை மீறல் மற்றும் சட்டம் ஒழுங்கு மீறல்கள் குறித்து ஐரோப்பிய நாடுகளுக்கு தெளிவுப்படுத்தவும், அவற்றை மீண்டும் உறுதிப்படுத்தும் நோக்கத்திலேயே ரணில் விக்ரமசிங்க ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்வதாகவும் லக்ஷ்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.

சன்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையின் பின்னர் வெளிப்படையாகியுள்ள ஊடக சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் பற்றியும் ரணில் விக்ரமசிங்க சர்வதேச சமூகத்திற்கு விளக்க உள்ளார். 20 ஆயிரம் கோடி ரூபா நிதியை வழங்குமாறு கோரி, மகிந்த ராஜபக்ஷ, சர்வதேச நாடுகளுக்கு பிச்சை கேட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்கவும் ஐக்கிய தேசிய கட்சியும் தேசிய மற்றும் சர்வதேசிய சட்டங்களை மதித்து, ஒழுக்கமான நடந்து கொண்டதன் காரணமாக சர்வதேச சமூகம் அப்போது 45 ஆயிரம் கோடி ரூபாவை தருவதற்கு இணங்கியதாகவும் கிரியல்ல கூறியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து, ஐக்கிய நாடுகள் சபை விவாதம் ஒன்றை கோரியுள்ள நிலையில், பல்வேறு நாடுகளை பயன்படுத்தி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க செய்து, விவாதத்தை அரசாங்கம் ஏன் தவிர்க்க முயற்சிகிறது என லக்ஷ்மன் கிரியல்ல கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசாங்கம் கூறுவது போல், தம்மீது தவறில்லை, நியாயமானது என்றால், ஏன் விவாதத்திற்கு பயப்பட வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச சமூகம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்ககூடிய திரணியற்ற அச்சம் காரணமாகவே அரசாங்கம் விவாத்தை தவிர்த்துள்ளது எனவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

அதேவேளை வட பகுதிக்கு விஜயம் செய்து, இடம்பெயர்ந்துள்ள மக்களின் சுக துக்கங்களையும் அவர்களின் தேவைகள் குறித்து அறிய நாடு நிலையான ஊடக நிறுவனங்களையும், ஊடகவியலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்குவதில்லை. எனினும் அரசாங்கத்திற்கு நெருங்கிய. மடிக் கணனிகளை கொள்ளையிடும் ஊடகவியலாளர்கள் என தம்மை இனங்காட்டி கொள்hபவர்களுக்கு அனுமதி வழங்குகிறது.

சீ.என்.என், அல்ஜசீரா, பீ.பீ.சி ஊடகங்களில் தகவல்களின்படி வடக்கில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர்.

வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் அரசியல் தீர்வு முன்வைக்க முடியாத காரணத்தினாலேயே, இந்த பிரச்சினை சர்வதேச மட்டத்திற்கு சென்றுள்ளது. மாடுகள் கொல்லப்படுவது குறித்து, பேசும் அரசாங்கத்தின் கூட்டணியில் உள்ள சிலர், வடக்கில் மக்கள் கொல்லப்படுவது குறித்து ஒரு வார்த்தைக்கூட பேசுவதில்லை எனவும் இது மிகவும் வருந்ததக்க விடயம் எனவும் லக்ஷ்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தை இலங்கைக்கு வருமாறு அரசாங்கம் அழைப்பு விடுக்குமாயின், இலங்கை நிலைமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு எனவும் லக்ஷ்மன் கிரியல்ல கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.