கலைந்து போன கனவுகள்
- கட்டுரைகள்| 10. 02. 2013, ஞாயிற்றுக்கிழமை, தமிழீழ நேரம் 17:26
கனவுகள் சில வேளைகளில் கலைந்து போகக் கூடியது. சில வேளைகளில் நிஜமாக நடக்கக் கூடியது. ஆனால் ஈழத்தமிழர்களின் கனவுகள் எந்த வேளைகளிலும் நிஜமானதாக தெரியவில்லை
“கடைசி சண்ட முடிஞ்சு வரேக்க என்ர அப்பா ஆமீட்ட சரணடைஞ்சவர் என்றோ ஒரு நாள் அப்பா வருவார்” என்று கூறிய பிஞ்சுக் குழந்தையின் ஆசைகள் இன்று நிறைவேறாத கனவு போல மாறிவிட்டது.
இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பிடுங்கப்பட்டு ஆயிரத்திற்கு மேற்பட்ட உயிர்கள், தங்களின் உணர்வுகள் அழிக்கப்பட்டாலும் பரவாயில்லை உயிர்களை காப்பாற்றுவோம் என்ற எண்ணத்தில் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் நிலமை இற்றை வரைக்கும் மறைக்கப்பட்ட உண்மையாகவே இருந்து வருகின்றது.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தற்போது முக்கியமான ஒரு செய்தியினை காணாமல் போன உறவிகளிடம் கூறியிருக்கின்றார். அதாவது வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது படையினரால் பதியப்பட்டு பொறுப்பேற்கப்பட்ட எவரும் காணாமற்போகவில்லை எனவும் அவ்வாறு இறுதிப்போரில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்தவர்கள், இந்திய வைத்தியசாலைகள் மற்றும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு ஆகியவற்றினூடாகவே வருகை தந்தனர். என்றுள்ளார்.
எனவே அவர்களிடம் போய்ச் சேர்ந்தவர்கள் காணாமல் போயிருந்தால் அது தொடர்பில் இந்தியாவும், ஐ.சி.ஆர்.சி.யுமே பொறுப்புக் கூற வேண்டும் என்ற கருத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.
இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட ரீதியிலே இவ் அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டமை யாவரும் அறிந்ததே. அத்துடன் சரணடைந்தவர்களில் ஒரு பகுதியினரே இவ்வாறு பதியப்பட்டதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் கோத்தாவின் கருத்து அனைவரையும் பல்வேறு கோணங்களில் சிந்திக்க வைக்கிறது.
இறுதிக் கட்டத்தில் சரணடைந்தவர்கள் அனைவரும் பதியப்பட்டு தான் பெறுப்பேற்கப்பட்டார்களா? அவ்வாறு தான் பதியப்பட்டு பொறுப்பேற்றதை இந்தியாவும் ICRCயும் ஏற்றுக் கொள்கின்றனவா? அவ்வாறு ஏற்றுக் கொண்டால் காணாமல் போன பல்லாயிரக்கணக்காக உறவுகள் எங்கே? என்ற கேள்விக்கு இந்த அமைப்புக்கள் தீர்க்கமான ஒரு பதிலினை காணாமல் போனவர்களின் உறவுகளிற்கு வழங்க வேண்டும்.
யுத்தம் தமிழ் மக்களை தின்று நான்கு வருடங்கள் முடிவடையப் போகின்றன. ஆனால் காணாமற்போன உறவுகளை மீட்டுத் தரும்படி எத்தனையோ போராட்டங்களை தமிழ் மற்றும் சிங்கள அரசியல் தலைவர்களும் இணைந்து நடத்திய போராட்டங்கள் அனைத்திற்கும் செவி சாய்க்காத அரசாங்கம் இன்று ஒரு புதுக்கதையினை தொடக்கி விட்டுள்ளது.
இறுதி யுத்தத்தில் எவரும் காணாமற் போகவில்லை என்று அரசு கூறினாலும் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஒவ்வொரு நாளும் தமிழர்கள் காணாமல் போயிலுள்ளனர் இவர்கள் உயிருடன் இருக்கின்றனரா? இல்லையா? என்ற கேள்வி மறுபுறத்தில் எழுந்துள்ளது.
அன்றைய கால கட்டத்தில் வீட்டிற்கு படையினர் வந்து கைது செய்தவர்களும் இனந்தெரியாதோரால் வெள்ளை வானில் கடத்தி செல்லப்பட்டவர்களும் சுற்றி வளைப்பு தேடுதல் என்ற போர்வையில் பயங்கரவாத முத்திரை குத்தி கைது செய்யப்படட்டவர்களும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை. இறுதிக் கட்ட யுத்த இறுதியை மட்டும் கூறி வரும் கோத்தபாய யுத்த முடிவுக்கு முன்னர் காணாமல் போனவர்கள் பற்றி என்ன பதிலைக் கூறப் போகிறார்கள்.
எத்தனையோ குடும்பங்கள் இன்று வரை தங்களது உறவுகள் உயிருடன் உள்ளனரா? இல்லையா? என்று கூடத் தெரியாமல் வாழ்க்கையை பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு யார் பதில் சொல்வார்கள்?
அத்துடன் மகிந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர் சர்வதேசமும் இறுதிக்கட்ட போரின்போது ஏராளமான தமிழர்கள் காணாமல் போயுள்ளனர் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அதை விட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் காணாமல் போனவர்களின் உறவுகள் சாட்சியமளித்துள்ளனர். இதனை இராணுவத் தரப்பினர் மறுக்கின்றமை முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போன்ற செயலாகும் என அவர் கோத்தாவுக்கு இடித்துரைத்துள்ளார்.
அது ஒருபுறமிருக்க ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளின் கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில் இந்த தொடரை குறிவைத்து தமது செயற்பாடுகளை இலங்கை அரசு தற்போது முன்வைக்கத் தொடங்கியுள்ளது.
அவ்வாறான வேலைகளை மேற்கொண்டு வரும் வேளையில் சர்வதேசத்திலிருந்து இலங்கைக்கு வரும் பிரதிநிதிகளை உள்வீட்டு விபரங்களை தலையிடக் கூடாதென்றும் வெளிநாட்டு சக்திகள் இங்கு உளவு பார்ப்பதற்கு வருகின்றனர் என்றும் மார்ச் மாத கூட்டத் தொடரில் போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு இலங்கையை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கே சர்வதேசம் பாடுபடுவதாக அரச கட்சிகள் பல கூறி வருகின்றன.
அத்துடன் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு சக்திகள் முன்வைக்கும் குற்றங்களை எதிர்கொண்டு வெல்வோமென மார்தட்டிக் கொண்டருக்கிறது அரசு.
இது இவ்வாறிருக்க நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்பத்தப்பட வேண்டும் என சர்வதேச நாடுகள் இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுத்துவரும் நிலையில்,
திடீரென ஆட்சியிலுள்ள மகிந்த தலைமையிலான அரசு தம்மால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இராணுவத் தளபதியினால் நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணைகள் சபையின் அறிக்கையினை பாதுகாப்பு செயலரிடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாகவும் ஒரு மாயையினை சர்வதேசத்திற்கு ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு காலத்திற்கு காலம் காட்டும் மாயையை நம்பி தமிழ் மக்களின் அபிலாசைகள் உணர்வுகள் என்பவற்றைக் காலங்காலமாக மறுத்து வரும் சர்வதேசம் இனியாவது தமது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், எமக்கான உரிமைகளை பெற்றுத் தரும் என ஈழத்தமிழர்கள் கனவு காண்கின்றனர்.
காணாமல் போன தங்களுடைய உறவுகளை சர்வதேசம் மீட்டுத் தரும் என எண்ணி நிற்கும் மக்களின் நம்பிக்கைக்கு சர்வதேசம் சரியான ஒரு பதிலை வழங்க வேண்டும்,
போரின் இறுதிக் கட்டத்தில் தாம் தவறுகளை விட்டு விட்டதாக ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச அமைப்புக்களும் கூறிவரும் நிலையில் சர்வதேச நாடுகள் இனிவரும் காலங்களிலாவது தம்மாலான பங்களிப்புக்களைச் செய்ய வேண்டும் என்பதே தமிழ் மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாகும். நன்றி :உதயன்.

