பாப்பரசர் பதவி விலக இருப்பதாக திடீர் அறிவிப்பு

indexபாப்பரசர் றற்சிங்கர் பெனடிக் 16 பதவி விலக இருப்பதாக திடீரென அறிவித்துள்ளார், தற்போது 85 வயதைத் தொட்டுவிட்ட அவர் மேற்கொண்டு பதவி வகிக்க உடல்நிலை இயலாமை காரணமாக இம்மாதத்துடன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

பொதுவாக பாப்பரசர் பதவியில் இருப்போர் இவ்வாறான அறிவித்தலை விடுத்து பாப்பரசர் அல்லாமல் வாழ்வது அரிதாகவே நடைபெறும் நிகழ்வாகும்.

சுமார் 600 வருட காலத்திற்குப் பின்னர் இப்படியொரு நிகழ்வு நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

ஜேர்மனியில் உள்ள மக்ற் அம் இன் என்ற சிறிய நகரத்தில் பிறந்த பாப்பரசர் போலந்து நாட்டை சேர்ந்த பாப்பரசர் யொகான்ஸ் போல் 2 மரணமடைய இப்பதவிக்கு வந்தவராகும்.

2005ல் பதவிக்கு வந்த இவர் கடந்த எட்டு ஆண்டு காலப்பகுதியில் கத்தோலிக்க திருச்சபை எதிர் நோக்கிய பல்வேறு மோசமான பிரச்சனைகளை உறுதியுடன் எதிர்கொண்டவராகும்.

கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த பல மதகுருக்களின் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பிரச்சனை, வத்திக்கான் இரகசியங்கள் அம்பலமாகி நூல்வடிவில் வந்தமை என்று குறுங்காலத்தில் பல்வேறு சிக்கல்களை தாங்கி நடந்தவர்.

மெக்சிக்கோ சென்று போதைவஸ்த்து மரணங்களினால் வீண்சாவு சாக வேண்டாம் என்று தெளிவாக தெரிவித்தவர்.

இவருடைய பணி ஜேர்மனிய நாட்டுக்கு பெருமை தருகிறது என்று குறிப்பிட்ட ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கல் அவருடைய உடல் ஆரோக்கியம் எதிர்கால வாழ்வுக்கு இடம் கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

வரும் மார்ச் மாதம் புதிய பாப்பரசர் பதவிக்கு வர இருக்கிறார், புதிதாக வருபவர் சீர்திருத்தத் தன்மை கொண்டவராக இருப்பார் என்றும், அதிகமாக இத்தாலியை சேர்ந்த ஒருவர் பாப்பரசராக வர வாய்ப்புக்கள் அதிகம் என்றும் முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் கனடாவிலிருந்து கார்டினல் மார்க் குவாலிற் (68 வயது) , இத்தாலியிலிருந்து ஆர்க் பிஷப் அங்கீலோ ஷோலா (71 வயது), கானாவிலிருந்து கார்டினல் பீற்றர் கொட்வோ அபியா ரூர்சன் (65 வயது) , ஆர்ஜன்டீனாவிலிருந்து கார்டினல் லினாடோ சன்ரி (67 வயது) ஆகிய நான்கு சக்திமிக்கவர்களுக்கு வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகின்றது.

பாப்பரசர் பெனடிக் இன்று பதவி விலகலை அறிவித்தாலும் கூட, வரும் 28ம் திகதிவரை அவருடைய பதவி நீடிப்புப் பெறும், மார்ச் மாதமே புதிய பாப்பரசர் பதவிக்கு வருவார்.

பாப்பரசரின் இந்த அறிவிப்பு சொற்ப நேரத்தில் உலகம் முழுவதும் பலத்த ஆச்சரிய அதிர்வலைகளை ஏற்படுத்தின, ஆனால் பாப்பரசர் மிகுந்த மனநிறைவோடு விலகிச்செல்கிறார் என்று வத்திக்கான் தொடர்பாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உட்பட உலகத்தின் முன்னணி தலைவர்கள் எல்லோரும் பதவி விலகவுள்ள பாப்பரசருடைய அரிய சேவையை மெச்சி வாழ்த்தியுள்ளார்கள்.

தனது காரியாலயத்தில் இருந்து ஆவணங்களை திருடி அம்பலப்படுத்திய சமையல்காரரை மன்னித்து, மகத்துவம் மிக்க மனிதராக, திருச்சபைக்கு உடல்வலுவுள்ள ஒருவர் வரவேண்டுமென வழிகாட்டியுள்ள அவருடைய செயல் பெருமதிப்பைப் பெற்றுள்ளது என்றால் அது மிகையாகாது.

Copyright © 2004 - 2013 நெருடல். All rights reserved.