ஈகப்பேரொளி முருகதாசனின் 4ம் ஆண்டு நினைவு நிகழ்வும், 21 ஈகியர் நினைவுக்கல் நடுகையும்!

murugathasan4th_rem_day2013-ssஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்பாக தன் உடலில் தீயிட்டு இலங்கைத் தீவில் இனப்படுகொலை செய்யப்படும் தமிழர்களின் உயிரைக் காக்கக்கோரி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ‘ஈகப்பேரொளி” முருகதாசனின் நான்காம் ஆண்டு நினைவு நாளில் லண்டனில் நினைவுவணக்க நிகழ்வும், நினைவுக்கல் நடுகையும் 12.02.2013, நாளை நடைபெறவுள்ளது.

தமிழர்களின் உரிமைக்காய் தன் உடலில் தீயிட்டு 1995 ஆம் ஆண்டு வீரமரணம் அடைந்த ‘அப்துல் ரவூப்” தொடக்கம் 2012 ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தம்மை தியிற்கு இரையாக்கி வீரச்சாவைத் தழுவிய 21 ஈகியர்கள் நினைவாகவும் ‘நினைவுக்கல் நடுகை” இடம்பெறவுள்ளது. இவர்களில் அதிகமானோர் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் சிங்கள பேரினவாத அரசாலும், அரச படைகளாலும் தமிழினம் பல்லாயிரக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருந்த போது அதனைத் தடுக்கக் கோரி தமிழகத்திலும், மலேசியாவிலும், ஜெனீவாவிலும் தம் உடலில் தீயிட்டு உயிர்தியாகம் செய்து தம் உறவைக்காக்கக் கோரிய வீர மறவர்கள்.

‘ஈகப்பேரொளி” முருகதாசனின் 4ம் ஆண்டில் (12.02.2013) அவரது வித்துடல் விதைக்கப்பட்ட அதே இடத்தில் இந்த ’21 ஈகியர்கள்” நினைவாக அமைக்கப்பட்ட நினைவுக்கல் நடுகைசெய்யப்படவுள்ளது.

அப்துல் ரவூம், முத்துக்குமார், முருகதாசன், செங்கொடி உட்பட்ட 21 ஈகியர்களது பெயர்களும் பொறிக்கப்பட்டும், தேசிய அடையாளங்களை மிகவும் தற்றூபமாக உட்புகுத்தியும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ‘நினைவுக்கல்” பிரித்தானிய மண்ணில் நிறுவப்படுவதானது தமிழர் வரலாற்றில் முக்கிய பதிவாகவும் அமையவுள்ளது.

‘ஈகப்பேரொளி” முருகதாசனின் குடும்பத்தினரால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு எதிர்வரும் 12.02.2013 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 1:00 மணியில் இருந்து 2:30 மணிவரை ‘ஈகப்பேரொளி” முருகதாசனின் வித்துடல் விதைக்கப்பட்ட இடமான Hendon Crematorium, Holders Hill Road, NW7 1NB எனும் இடத்தில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்விற்கு அனைத்து மக்களையும் வந்து கலந்துகொண்டு ஈழத் தமிழர்களின் உரிமைக்காகவும், சுதந்திர வாழ்விற்காகவும் தங்கள் உயிரை ஆயுதமாக்கி உடலில் தீயிட்டு சர்வதேசங்களையும், உரங்கிக்கொண்டிருந்த தமிழர்களையும் விழிப்படையச்செய்த 21 ஈகியர்களுக்கும் மலர்தூவி மனம் நெகிழ்ந்து வணக்கம் செலுத்த வருமாறு ‘ஈகப்பேரொளி” முருகதாசனின் பெற்ரோர் அன்புடன் அழைப்புவிடுத்துள்ளனர்.

இவ் நினைவுக்கல் நடுகை தொடர்பில் தமிழ் மக்களுக்கு ‘ஈகப்பேரொளி” முருகதாசனின் தந்தையார் எழுதிய கடிதமும், நினைவுக்கல் பொறிக்கப்பட்ட அறிவிப்பு பதாகையும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

Copyright © 2004 - 2013 நெருடல். All rights reserved.