ஈழத்தமிழர்களைக் காக்க தவறிய ஐ.நா அலுவலகம் இன்று முற்றுகை: வைகோ அறிவிப்பு

VAIKO1இலங்கையில் ஈழத்தமிழர்களை நீதி கிடைக்கவேண்டுமென வலியுறுத்தி அறப்போர் நடைபெற உள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

சுதந்திரத் தமிழ் ஈழ விடியலை நோக்கி வீரத்தியாகி முருகதாசன் நினைவு நாளான இன்று, லண்டன் மாநகரில் இருந்து மானமும் தியாக உணர்வும் கொண்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர், மனித குலத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப தியாகப் பயணத்தினை ஆரம்பிக்கின்றனர்.

நெஞ்சைப் பிளக்கும் ஈழத் தமிழர் படுகொலை அவலக் காட்சிகள் காணொளிகளாக, உள்ளத்தை உருக்கும் புகைப்படங்களாக மக்கள் விழிகளையும் உள்ளங்களையும் கண்ணீரோடு ஈர்க்கும் வகையில் பரப்புரை செய்கின்றனர்.

பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, நெதர்லாந்து நாடுகளின் 54 நகரங்களில் ஈழ விடியலுக்கான கருத்துப் பரப்புரை செய்தவாறு சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவுக்குச் செல்கின்றனர்.

இனப் படுகொலை செய்த ராஜபக்ச கூட்டத்தை, அனைத்துலக நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தவும், சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பினை அனைத்துலக நாடுகள் நடத்திடவும், அந்த வாக்கெடுப்பில் புலம்பெயர் ஈழத் தமிழ் மக்கள் அந்தந்த நாடுகளில் பங்கேற்கவும், அதற்கு முன்னதாக சிங்களக் குடியேற்றங்களும், சிங்கள இராணுவமும் தமிழ் ஈழத் தாயகத்திலிருந்து வெளியேற்றப்படவும் இலக்காகக் கொண்டு தமிழ் ஈழ மக்களும் உலகெங்கும் உள்ள தன்மானத் தமிழர்களும் ஒருசேரக் குரல் எழுப்ப வேண்டியது தமிழ்க் குலத்தின் தலையாய கடமையாகும்.

எனவே, தியாகி முருகதாசன் நினைவு நாளில் மாலை 6 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில், அண்ணல் காந்தியார் சிலை அருகில் ஈழத் தோழமைச் சுடர் ஏந்திட தமிழ் ஈழ விடுதலைக்காக இன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்கும், தீக்குளித்து உயிர்களை ஈகம் செய்த தியாகிகளுக்கும், சிங்களவன் நடத்திய இனக்கொலையால் பலியான தமிழ் மக்களுக்கும் வீரவணக்கம் செலுத்தவும் கடல் அலைகளில் மலர்களைத் தூவவும், ஈழத் தமிழ் உணர்வாளர்களும், தமிழ்ப் பெருங்குடி மக்களும் கடமையாற்ற வாரீர்!

இதேவேளை, சென்னையில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை ஈழத்தமிழர்களைக் காக்க தவறியதைக் கண்டித்தும், வரும் நாட்களில் ராஜபக்ச அரசின் மீது சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரியும், முற்றுகையிடும் போராட்டம் காலை 11 மணி அளவில் நடத்திட, மே 17 இயக்கம் அறிவித்துள்ளமையால், அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள் அதில் பங்கேற்குமாறு ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த அறப்போரிலும் பங்கேற்க தோழர்களை அழைக்கிறேன். ஜெனீவாவில், ஐ.நா.வின் மனித உரிமை பேரவையில் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க மார்ச் 4ம் திகதி அன்று மாபெரும் மக்கள் கூடல் நிகழ்வு நடைபெற இருக்கிறது.

அதில் லட்சக்கணக்கான தமிழர்கள் திரள இருக்கிறார்கள். அதே நாளில், தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் சிங்கள அரசை எதிர்த்து கறுப்புக்கொடி ஏந்தி அறப்போர் நடத்தவும், அதே நாளில் தலைநகர் சென்னையில் இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் அறப்போரை நடத்தவும், கடந்த பெப்ரவரி 2ம் திகதி அன்று மக்கள் நல்வாழ்வு இயக்கம் அறிவித்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திடவும், கட்சிகளின் அடையாளங்கள் இன்றி கறுப்புக் கொடிகளை ஏந்திடவும் தமிழ்ப் பெருமக்களை, இளம் தலைமுறையினரை அன்போடு வேண்டுகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

Copyright © 2004 - 2013 நெருடல். All rights reserved.