யுத்தத்தின் போது பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்பட்ட பெண்களது பட்டியலில் இலங்கையும்

slaflagயுத்த நடவடிக்கைகளின் போது பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்களது பட்டியலில் இலங்கைப் பெண்களது பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியா அதிர்ச்சித் தகவலொன்றை வெளியிட்டுள்ளது. நீண்டகாலமாக சிவில் யுத்தம் இடம்பெற்று வரும் நாடுகளில் பெண்கள் பெருமளவில் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் அடைக்கலம் கோரும் பெண்களில் குறிப்பிட்ட ஓரு வீதத்தினர் பாலியல் ரீதியான துஸ்பிரயோகம் செய்யப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
குறிப்பாக இலங்கை, எரித்திரியா, கொங்கோ, ஐவரிகொஸ்ட், சோமாலியா போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இவ்வாறு பாலியல் துன்புறுத்தல்களுக்கு இலக்காகியதன் பின்னர் பிரித்தானியாவில் அடைக்கலம் கோரியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
பாலியல் பலாத்காரம் காரணமாக ஏற்படும் கர்ப்பங்களின் எண்ணிக்கையும் உயர்வடைந்துள்ளதென தெரிவிக்கப்படுகிறது.
 
அரசியல் தஞ்சம் மறுக்கப்படும் பெண்கள் வேறும் பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
 
குறிப்பாக பாலியல் தொழில் போன்றவற்றில் ஈடுபட்டு தொடர்ச்சியாக பிரித்தானியாவில் வசிப்பதற்கு பாதிக்கப்பட்ட பெண்கள் முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்தப் பட்டியலில் இலங்கைப் பெண்கள் அடங்கியிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விடயம் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் பெண்களுக்கு பூரண பாதுகாப்பளிக்கக் கூடிய ஓர் நடைமுறை அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியம் என அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.