வன்னி நிலைமை நாளுக்கு நாள் மோசமடையும் அபாயம்: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்

logo-icrcஅரசாங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையில் மோதல்கள் உக்கிரமடைந்து வருவதால் வன்னிச் சிவிலியன்களது நிலைமை நாளுக்கு நாள் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் சரசி விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

வன்னிச் சிவிலியன்கள் மிகவும் இக்கட்டான மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையிலிருந்து இடம்நகர்த்தப்பட்ட நோயாளிகள் முல்லைத்தீவு புதுமாத்தலன் பகுதியில் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சுகாதார அமைச்சு அதிகாரிகளும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உத்தியோகத்தர்களும் இணைந்து சிறந்த சேவையாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதுமாத்தலன் பிரதேசத்தில் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல் நிலவுவதாக சரசி விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

நோயாளிகளைப் பாதுகாப்பாக இடம்நகர்த்தவும், மனிதாபிமான நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்யவும் பாதுகாப்பான பாதை உறுதிப்படுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வாரம் முதல் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு எவ்வித மனிதாபிமான நிவாரணப் பொருட்களும் விநியோகிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரு தரப்பினருக்கும் இடையிலான யுத்தம் உக்கிரமடைந்து வருவதால் அப்பிரதேசத்தில் சிக்கியுள்ள சிவிலியன்கள் பெரும் அவலத்தை எதிர்நோக்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.