இந்தியாவின் அடுத்த பிரதமர் மன்மோகன் சிங்கா? அத்வானியா?
-
இவ் விடயம் 13. 05. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 18:06க்கு பதிவு செய்யப்பட்டது
- கட்டுரைகள்
இந்திய நாடாளுமன்றத்திற்கு நடைபெறும் தேர்தலில் இப்போது இறுதிக்கட்டம் நெருங்கிவிட்டது. இன்னும் இரு தினங்களில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் எந்தக் கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்பது குறித்த பேச்சும் பரபரப்பும் அதிகரித்துள்ளது. காரணம், தமிழகத்தில் வெற்றி பெறும் அணிதான் இம்முறையும் இந்திய ஆட்சியாளர்களை தீர்மானிக்கப் போகிறது என்பது அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு.
காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரு தேசிய கட்சிகளின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணிகள் சந்தர்ப்பவாத கூட்டணி என்று இருதரப்பினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால் தேர்தலுக்குப் பிறகு இரு அணியிலுமே எந்தெந்த கட்சிகள் நீடிக்கும் என்பதை கணிக்க முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. தேசிய அளவில் மட்டுமல்லாது, மாநில அளவில் அமைந்துள்ள எல்லா தேர்தல் கூட்டணிகளின் நிலையும் இதேதான்.
கருத்துக்கணிப்புகளும் குதிரைப்பேரமும்
இதுவரை என்.டி.டி.வி உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களும், பல்வேறு பிரபல பத்திரிகைகளும் நடத்தியுள்ள கருத்துக்கணிப்புகளின்படி பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் தலைமையிலான கூட்டணிகளுக்குமே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரியவந்துள்ளது. அதிலும் இவ்விரு தேசிய கட்சிகளும் சுமார் 180 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் வழக்கம்போல் தேர்தலுக்குப் பின்னர் குதிரைப்பேரம் நடந்து, இவ்விரு கட்சிகளின் தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய மாநிலக் கட்சிகள் பல்வேறு கோரிக்கைகளையும் நிபந்தனைகளையும் முன்வைத்து, இறுதியில் பல கட்சிகள் அணி மாறக்கூடிய சூழ்நிலைதான் தற்போது காணப்படுகிறது.
தேர்தலுக்குப் பின்னர் மாநிலக் கட்சிகளின் நிலைப்பாடு
அ.தி.மு.க. வெற்றி பெற்றால் காங்கிரஸுக்கு உதவலாம் அல்லது பா.ஜ.க.வுக்கும் தோள் கொடுக்கலாம். வாய்ப்பு இருப்பின் வேறொரு கட்சியை சேர்ந்தவர் பிரதமர் ஆவதற்கும் ஜெயலலிதா சம்மதம் தெரிவிக்கலாம். ஆனால் பா.ஜ.க, காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியைச் சேர்ந்தவர் பிரதமராவது என்பது இன்றைய நிலையில் அவ்வளவு எளிதான விஷயமல்ல. காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க அ.தி.மு.க உதவி தேவைப்படுகிற நிலை ஏற்பட்டால், தி.மு.க.வின் பாடு திண்டாட்டம்தான். “தமிழகத்தில் தி.மு.க. அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற்றால்தான் மத்தியில் ஆதரவு அளிக்க முடியும்’ என்று அ.தி.மு.க. நிபந்தனை விதிக்கும் வாய்ப்புண்டு. ஒருவேளை பா.ஜ.க. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்க அ.தி.மு.க.வின் ஆதரவை எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டால், ஜெயலலிதா அதற்கும் தயங்கமாட்டார் என்பதுதான் அரசியல் நிபுணர்களின் கணிப்பாக உள்ளது. மேலும் தற்போது காங்கிரஸுடன் இணைந்துள்ள மம்தா பானர்ஜி (திரிணாமூல் காங்கிரஸ்), மூன்றாவது அணியில் உள்ள சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம்) ஆகியோரின் ஆதரவும் பா.ஜ.க.வுக்கு கிடைக்கக்கூடும். மேலும் தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க. அணியிலிருந்து விலகிய ஒரிசாவின் பிஜு பட்நாயக்கும் மீண்டும் அதே அணிக்கு திரும்பலாம். காரணம் ஒரிசா சட்டமன்றத்திற்கும் தற்போது தேர்தல் நடந்துள்ளது. அங்கு ஆட்சியமைக்க பட்நாயக்குக்கு பா.ஜ.க. உதவி தேவைப்படலாம். பிரதமர் ஆகவேண்டும் எனும் கனவுடன் இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரும்கூட தேர்தலுக்குப் பின்னர் பா.ஜ.க. அணிக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். காரணம் எந்த மாநிலக் கட்சியுமே கொள்கை அடிப்படையில் காங்கிரஸுடனும் பா.ஜ.க.வுடனும் கூட்டணி அமைக்கவில்லை.
தமிழகத்தில் யாருக்கு வெற்றி கிட்டும்?
தமிழகத்தைப் பொறுத்தவரையில் முன் எப்போதும் இல்லாத வகையில் இலங்கைப் பிரச்சினை இந்தத் தேர்தலின் பிரசாரக் களத்தில் முக்கிய இடம்பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இலங்கைப் பிரச்சினையை சரிவரக் கையாளவில்லை எனும் குற்றச்சாட்டு வலுத்துள்ளது. ஏறத்தாழ மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே இதுவிஷயத்தில் காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் இலங்கை அரசு தமிழர் பகுதிகளில் வீசும் குண்டுகள் தாய்த்தமிழகத்திலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வருவது மறுக்க முடியாத உண்மை. ஆனால் தி.மு.க. காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே, இலங்கைப் பிரச்சினை தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்காது என்று ஒப்புக்கு கூறி வருகிறார்கள். தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதியோ அவ்வப்போது, “தனி ஈழம் அமைக்கப் பாடுபடுவோம்’ என்று சொல்லத் தவறுவதில்லை. இதன் மூலம் ஈழத் தமிழர் விவகாரம் எங்கே தங்களது வெற்றியைப் பாதித்துவிடுமோ எனும் கவலை அவருக்கு ஏற்பட்டிருப்பது தெட்டத் தெளிவு. இதை உணர்ந்துதான் இதுநாள் வரையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும், இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் பேசி வந்த அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா, “இராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைக்கப் பாடுபடுவேன்’ என்று அதிரடியாக ஓர் அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
கலைஞரின் உண்ணாவிரதம் வெற்றியா? தோல்வியா?
இலங்கை விவகாரம் மாநிலத்தில் விசுவரூபம் எடுத்துள்ள நிலையில், இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டார் கலைஞர். இதன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்க்க முடியும், தி.மு.க.வின் மீதான களங்கத்தை துடைக்க முடியும் என்கிற அவரது எதிர்பார்ப்பு முற்றிலும் நிறைவேறியதா என்றால் சந்தேகம்தான். காரணம் காலையில் தொடங்கிய உண்ணாவிரதம் மதியம் வரை கூட நீடிக்கவில்லை. ஈழத் தமிழர் விவகாரங்களை தொடர்ந்து தினந்தோறும் வெளியிட்டு வரும் பல்வேறு இணையதளங்களில் பெயரளவுக்குக் கூட கலைஞரின் இந்த உண்ணாவிரதம் குறித்த செய்திகளோ, புகைப்படங்களோ இடம்பெறவில்லை. மாறாக தினந்தோறும் அனைத்துலக தமிழர் அமைப்புகள் ஜெயலலிதாவிற்கு ஆதரவும் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. இதனால் அதிமுக தரப்பு உற்சாகத்தில் உள்ளது. ஆக, இலங்கைப் பிரச்சினையைப் பொறுத்தவரையில் அ.தி.மு.க. சாதுரியமான கோணத்தில் காய்களை நகர்த்தியுள்ளது என்பதே உண்மை. இதற்கு மாநிலத்திலும் மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க வரவேற்பு கிடைத்துள்ளது.
மாநிலப் பிரச்சினைகளின் தாக்கம்?
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் தேர்தல் வாக்குறுதிகளை வரிசையாக நிறைவேற்றி வருகிறது. இலவச வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கியது, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, குழந்தைகளுக்கான சத்துணவில் வாரந்தோறும் மூன்று முட்டைகள் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மாநில அரசுக்கு நற்பெயரை ஈட்டித் தந்துள்ளன. ஆனால், கடுமையான மின்சார வெட்டு, கேபிள் டிவி விவகாரத்தை அரசு கையாண்ட விதம், கலைஞரின் பேரன் தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் ராசா இடையிலான மோதல், மாநில அமைச்சர்கள் பலர் மீதான நில அபகரிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ஆகியவை அரசுக்கு எதிரான அம்சங்களாக உள்ளன. மேலும் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. அணியில் இடம்பெற்றிருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், பா.ம.க., ம.தி.மு.க. ஆகியவை இப்போது அ.தி.மு.க. அணியில் இடம்பெற்றுள்ளன. விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமே தி.மு.க. அணியில் நீடிக்கிறது. ஆனால் அந்தக் கட்சியும் கூட இலங்கைப் பிரச்சினையில் காங்கிரஸை கடுமையாக எதிர்த்ததை மக்கள் இன்னும் மறந்திருக்க வாய்ப்பில்லை. குறிப்பாக, “காங்கிரஸ் கட்சியை அழிப்பதுதான் இனி என் வேலை” என்று சொன்ன திருமாவளவன் இப்போது காங்கிரஸுடன் இணைந்திருப்பது மிகப்பெரிய முரண்பாடாகக் கருதப்படுகிறது. ஆக தி.மு.க. தரப்பில் கூட்டணி பலம் குறைந்துள்ள நிலையில், அ.தி.மு.க. பலம் பெற்றுள்ளது. மாநில அரசு குறித்த குற்றச்சாட்டுகளை அ.தி.மு.க அணியினர் மக்கள் மத்தியில் கடுமையான முறையில் எடுத்துக்கூறி வருகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், பிரசாரக் களத்தில் இரு அணி வேட்பாளர்களும் எவ்வளவு வேகமாகவும் திறமையாகவும் செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தே வெற்றி தோல்வி அமையும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
யாருக்கு கிட்டும் அதிக இடங்கள்?
மாநில அளவில் பல்வேறு கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. சென்னை லயோலா கல்லூரி, நக்கீரன் புலனாய்வு இதழ் நடத்திய கணிப்புகளில் தி.மு.க. அணிக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கணிப்புகள் தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய நிலையில் வெளியானவை. அச்சமயத்திலேயே அ.தி.மு.க. அணிக்கு மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் சுமார் பதினைந்து இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும், தி.மு.க. அணிக்கு 24 இடங்கள் கிடைக்கும் என்பதாகவும் கூறப்பட்டிருந்தது. பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டிப் பிடித்திருக்கும் நிலையில், மேற்கண்ட எண்ணிக்கைகள் இடம்மாறிச் செல்லும் என்கிறார்கள் நிபுணர்கள். இருதரப்பிலுமே வாக்காளர்களுக்கு இலவசப் பொருட்களைக் கொடுப்பது, பண விநியோகம் செய்வது தீவிரமடைந்திருப்பதாக ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டிக் கொள்கிறார்கள். விஜயகாந்த் தனித்துப் போட்டியிடுவது தி.மு.க.வுக்குதான் சாதகமாக இருக்கும் என்கிற கருத்து நிலவுகிறது. மூன்றாவது அணியாக பா.ஜ.க. தலைமையில் கூட்டணி சேர்ந்துள்ள கட்சிகளால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றாலும், இந்த அணியும் கணிசமான ஓட்டுப் பிரிப்பை செய்யும் என்பது திண்ணம். காங்கிரஸ் வேட்பாளர்களின் பிரச்சார யுக்தி சரியாக இல்லை என்று தி.மு.க.வினரே குறைகூறுகிறார்கள். தி.மு.க.வைப் பொறுத்தவரையில் தென்மண்டலப் பொறுப்பாளரான அழகிரியின் செல்வாக்கு கைகொடுக்கும் என்று தெரிகிறது. தென்மண்டலத்தில் உள்ள பத்து தொகுதிகளில் குறைந்தபட்சம் ஆறு தொகுதிகளில் அவர் வெற்றியைத் தேடித் தருவார் என்று கூறப்படுகிறது. கலைஞரால் இம்முறை தீவிர பிரசாரம் மேற்கொள்ள இயலவில்லை. ஆனால் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிரசாரக் களத்தில் பம்பரமாகச் சுற்றிச் சுழன்று தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இது வாக்காளர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் அரசியல் நிபுணர்களின் கருத்து. தற்போதுள்ள சூழ்நிலையில், தி.மு.க. அணிக்கு பதினைந்து இடங்கள் கிடைக்கும், அ.தி.மு.க இருபத்து நான்கு இடங்களில் வெற்றி பெறும் என்கிற பேச்சு தமிழகத்தில் வலுத்து வருகிறது. ஆனால் பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி, கருணாநிதி ஆகிய மூவரின் இறுதிக்கட்ட பிரசாரத்திற்குப் பிறகு இந்த எண்ணிக்கையில் மாற்றம் உண்டாகும் என்று தி.மு.க.வினர் உறுதியாக நம்புகிறார்கள். குறிப்பாக இலங்கை பிரச்சினை குறித்து இம்மூவரும் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவதன் மூலம், வாக்காளர்கள் மத்தியில் தங்கள் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியை குறைக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.இதை நோக்கியே கலைஞர் காய்களை நகர்த்தி வருகிறார் என்று சொல்லும் தி.மு.க. பிரமுகர்கள், “பல தேர்தல் களங்களைச் சந்தித்துள்ள கலைஞர் தனது கடைசி அஸ்திரமாக சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார். அவரது அரசியல் சாணக்கியத்தனம் இறுதிக்கட்டத்தில் கைகொடுக்கும். அதன் மூலம் மீண்டும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறுவோம் என்று அடித்துச் சொல்கிறார்கள்.
நாடும் நமதே! நாற்பதும் நமதே!
ஒட்டுமொத்தத்தில் நாடும் நமதே, நாற்பதும் நமதே என்று தி.மு.க. அ.தி.மு.க. இருதரப்பிலும் இதுநாள் வரை ஒலித்த கோஷம் தற்போது அர்த்தமற்றதாகிவிட்டது தெளிவு. எத்தரப்புக்கும் புதுச்சேரியை உள்ளடக்கிய நாற்பது தொகுதிகளிலும் முழுமையான வெற்றி கிடைக்க வாய்ப்பில்லை என்பதே தேர்தல் களத்தின் தற்போதைய நிலைவரம். நாற்பது வருடங்களுக்கு முன்பு தமிழ் மொழியைப் புறக்கணித்ததால் காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியை இழந்தது. இப்போது தமிழினத்தையே புறக்கணிக்கிறார்கள். இதற்கான பலனை இந்தத் தேர்தலில் அனுபவிப்பார்கள் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இது உண்மையாகும் பட்சத்தில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள தி.மு.க.வும் அந்தப் பலனை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
அடுத்த பிரதமர் யார்?
பொதுவாக நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் பிரதமர் வேட்பாளரை முன்வைத்தே மக்கள் வாக்களிப்பார்கள் என்று கூறப்படுவதுண்டு. இம்முறை தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்பே அத்வானிதான் பிரதமர் வேட்பாளர் என்று தெளிவான அறிவிப்பை வெளியிட்டது பா.ஜ.க. தரப்பு. ஆனால் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அன்றுதான் மன்மோகன்சிங்கை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியது காங்கிரஸ். கடந்த ஒன்றரை மாதங்களில் அவ்வப்போது சில காங்கிரஸ் தலைவர்கள், “நாட்டின் பிரதமராவதற்கு ராகுல்காந்தி அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளார்” என்று கருத்து தெரிவித்து வந்தனர். போதாத குறைக்கு மன்மோகன்சிங்கும்கூட அண்மைய பேட்டியில் இதே கருத்தை வலியுறுத்தினார். காங்கிரஸின் இந்தத் தெளிவற்ற தன்மை வாக்காளர்கள் மத்தியில் ஓரளவு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பது உண்மை. மேலும் அண்மைக்காலமாக ராகுல்காந்தி கூறி வரும் சில கருத்துக்கள் கூட்டணிக் கட்சியினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அ.தி.மு.க, இடதுசாரிகள், தெலுங்கு தேசம் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் குறித்து அவர் கடந்த வாரம் கூறிய கருத்துக்கள் பெரும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளன. எனவே பிரதமர் பதவிக்கான ஓட்டப்பந்தயத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி அத்வானிதான் முன்னிலையில் இருக்கிறார் எனலாம்.