சென்னை மெரீனாவில் மே-18 இன அழிப்பு நாள் நினைவேந்தல்!

merina_may18_002தமிழர் பண்பாட்டு நடுவம் ஒருங்கிணைப்பு செய்த மே-18 நாளில் இன அழிப்பு நாள் நினைவேந்தல் கூட்டம் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது.

2009 ஆம் ஆண்டில் உலகின் மிகப் பெரிய இனப்படுகொலை தமிழீழத்தில் சாட்சிகளே இல்லாமல் அரங்கேறியது. இந்தியாவும் உலக நாடுகளும் வேடிக்கை பார்க்க இந்த தமிழ் இனப் படுகொலையை இலங்கை அரசு நடத்தியது.

இதில் 1.5 லட்சம் மக்கள் துடிதுடித்து செத்தனர். இந்த இனப் படுகொலையை தொடர்ந்து தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு, அவர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு, உள்நாட்டிலேயே அகதிகளாக கைதிகளாக மாற்றப் பட்டனர் தமிழர்கள்.

இது ஒரு இன அழிப்பாகவே பார்க்க முடிகிறது. எனினும் ஐ.நா மன்றமோ, உலக நாடுகளோ இந்த இன அழிப்பை ஏற்கவில்லை. ஈழத்தில் நடந்தது இனப் படுகொலை தான் என அங்கீகரிக்க வில்லை.

தமிழக அரசு ஈழத்தில் நடந்தது இனப் படிகொலை தான் என சொல்லிய பிறகும் இந்திய அரசு அதை ஏற்கவில்லை. இந்நிலையில் 2009 மே 18 ஆம் நாளில் மாபெரும் இனப் படுகொலைக்குப் பின் போரை நிறுத்தியது இலங்கை அரசு.

இந்த நாள் தமிழர்களின் கருப்பு தினமாக உலகத் தமிழர்களால் கருதப்படுகிறது. இந்த நாளை இலங்கை அரசு தமிழர்களை கொன்று வெற்றி வாகை சூடிய நாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகிறது. அதற்கு எதிர்வினையாக தமிழர்கள் இந்த நாளை சர்வதேச இனப்படுகொலை நாளாக அனுசரிக்கிறார்கள்.

அந்த வகையில், அதே மே 18 ம் நாளில் தமிழர் பண்பாட்டு நடுவம் ஒருங்கிணைப்பு செய்த நினைவேந்தல் கூட்டம் சென்னை மெரினா கடற்கரையில் நடந்தது.

இதில் மாணவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், தமிழ் உணர்வாளர்கள் பலரும் கலந்து இறந்த தமிழ் சொந்தகளுக்கு கைகளில் பதாகை ஏந்தியும் , மெழுகுவர்த்தி ஏந்தியும் இறந்த சொந்தங்களை நினைவு கூர்ந்தனர்.

தமிழீழமே ஈழத் தமிழர்களுக்கு ஒரே தீர்வு என முழக்கமிட்டனர். படுகொலை செய்யப்பட்ட ஈழ உறவுகளுக்கு மௌன அஞ்சலியும் வீரவணக்கமும் செலுத்தப்பட்டது.

ஆயிரக் கணக்கான மக்களுக்கு இந்த தினத்தை பற்றி விழிப்புணர்வு கொடுக்க துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது. காவல்துறை இறுதி வரை இந்த நினைவேந்தல் கூட்டத்திற்கு எந்த தடையும் சொல்லாமல் துணை இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.