நியுயோர்க்கில் கொமன்வெல்த் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டம் – பீரிசுக்கு காத்திருக்கும் நெருக்கடி

GL.peris-12கொமன்வெல்த் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டம், வரும் 26ம் நாள் நியுயோர்க்கில் நடைபெறவுள்ளது. 

இந்தக் கூட்டத்தில், சிறிலங்காவில் நடக்கவுள்ள கொம்ன்வெல்த் மாநாடு தொடர்பாக, உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் விளக்கிக் கூறவுள்ளார்.

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க கொமன்வெல்த் வெளிவிவகார அமைச்சர்கள் நியுயோர்க் செல்கின்றனர்.

இதன்போது ஐ.நா தலைமையகத்தில் கொமன்வெல்த் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், கொமன்வெல்த் மாநாடு சிறிலங்காவில் நடத்தப்படுவதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வரும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட்டும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிந்த ஐந்து நாட்களின் பின்னர், இந்தக் கூட்டம் நடக்கவுள்ளதால், சிறிலங்கா வெளிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு மாகாணசபைத் தேர்தலைக் கண்காணிக்க கொமன்வெல்த் அமைப்பு, நான்கு கண்காணிப்பாளர்களை அனுப்பி வைக்கவுள்ளதாக கொமன்வெல்த் செயலர் கமேலேஸ் சர்மா அறிவித்துள்ளார்.

இந்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவராக, கென்யாவின் முன்னாள் துணை அதிபர் ஸ்டீபன் கலோன்சோ முஸ்யோகா நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவுஸ்ரேலியாவின் விக்ரோரியா மாகாண தேர்தல் அதிகாரி ஜென்னி, மக் முல்லன், பங்களாதேஸ் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளர் கலாநிதி சம்சுல் ஹுடா, கரிபியன் நாடுகளின் தேர்தல் செயலர் செயின்ட் லூசி ஆகியோரும் கொமன்வெல்த் கண்காணிப்புக்குழுவில் இடம்பெறவுள்ளனர்.

சிறிலங்காவில் மிகவும் முக்கியமான தேர்தலாக கருதப்படும் வடக்கு மாகாணசபைத் தேர்தல் நீதியாகவும், சுதந்திரமாகவும் நடக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள கமலேஸ் சர்மா, கொமன்வெல்த் கண்காணிப்புக் குழு சிறிலங்காவில் வரும் 14ம் நாள் தொடக்கம், 28ம் நாள் வரை செயற்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இந்தக் குழு குறிப்பாக யாழ் மாவட்டத்தில் செயற்படும் என்றும்,, கண்காணிப்புக் குழுவுக்கு உதவியாக கொமன்வெல்த், கொமன்வெல்த் செயலகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான பிரிவின் தலைவராக உள்ள மார்ட்டின் கசிர்யே தலைமையிலான மூன்று பேர் கொண்ட உதவிக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.