பத்தாயிரம் உயிர்களை பலி கொடுத்து பாதுகாப்பு சபைக்கு போகவேண்டி இருக்கிறது !
-
இவ் விடயம் 16. 05. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 4:09க்கு பதிவு செய்யப்பட்டது
- கட்டுரைகள்
ஐ.நாவின் பாதுகாப்பு சபையின் முடிவும் அமெரிக்க அதிபரின் கருத்தையும் நன்றாகக் காய்ச்சி வடித்து காயவைத்தால் கிடைக்கும் கடைசிப் பனங்கட்டி இதுதான். இந்தப் பனங்கட்டி இன்று எவருடைய நாக்கிற்குமே இனிக்கவில்லை. ஆனால் வெளிப்படையாக ஆகா என்ன இனிப்பென்று கூறி நம்மை நாமே ஏமாற்றி வருகிறோம்.
பராக் ஒபாமா ஒரு கருத்தக் கூறுவதற்கும், பாதுகாப்பு சபையில் உத்தியோக பூர்வமாக ஈழத் தமிழர் விவகாரம் எடுத்துக் கொள்ளப்படுவதற்குமாக கடந்த சில மாதங்களில் பத்தாயிரம் ஈழத் தமிழர் உயிர்களை பலி கொடுத்திருக்கிறார்கள். உலக வர்த்தகக் கட்டிடங்களில் விமானங்களை மோதி மூவாயிரம் பேரை கொன்றதற்காக அமெரிக்கா இரண்டு நாடுகளின் மீது படையெடுத்திருக்கிறது. சதாம் உசேனை தூக்கில் போட்டும் அதன் கோபம் ஆறவில்லை. ஆனால் பத்தாயிரம் உயிர்களுக்கு அமெரிக்காவும், ஐ.நாவும் கொடுத்த மதிப்பை கிழே பாருங்கள்.
01. விடுதலைப் புலிகள் ஆயுதங்களை போட்டு சரணடைய வேண்டும் !
02. பொது மக்களை பணயக் கைதிகளாக வைக்காது உடன் விடுவிக்க வேண்டும் !
03. சிறாரை படையணிக்குச் சேர்க்கக் கூடாது !
இவைகள் விடுதலைப் புலிகளுக்கு பராக் ஒபாமாவும், பாதுகாப்பு சபையும் சொன்ன புத்திமதிகள்.
01. உடனடியாக யுத்தத்தை நிறுத்த வேண்டும் !
02. பொது மக்கள் வாழிடங்களின் மேல் இனிமேல் கனரக ஆயுதங்களை பாவித்தல் கூடாது !
03. பேச்சு வார்த்தை மூலம் தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வு வழங்கவேண்டும் !
இவைகள் சிறீலங்கா அரசுக்கு அவர்கள் சொன்ன புத்திமதிகள்.
இந்த இரண்டு கருத்துக்களின் தொகுப்புரை பின்வருமாறு அமையும்.
நாடற்ற இனங்கள் சுதந்திரத்திற்காக ஆயுதம் ஏந்தினாலும், எத்தகைய தியாகங்களை புரிந்தாலும் கவலையில்லை ! அத்தனையும் கொச்சைப் படுத்தப்பட்டு, பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு வேரோடு பிடுங்கி எறியப்பட வேண்டும்.
ஆட்சியில் உள்ள இனங்களுக்கு உயிர்க் கொலை செய்ய திறந்தவெளி லைசென்ஸ் வழங்கப்படும். இனிமேல் கனரக ஆயுதங்களை பாவித்து கொலை செய்யக்கூடாது என்றால், இதுவரை செய்த கொலைகளுக்கு தண்டனையில்லை என்ற தகவல் அதில் இருப்பதை சிறு குழந்தையாலும் உணர்ந்து கொள்ள முடியும். இன்று சிங்கள அரசு உக்கிரமான தாக்குதலை மேற்கொள்ள இந்த பொறுப்பற்ற உரைகள்தான் காரணம்.
ஐ.நாவின் பாதுகாப்பு சபையின் முடிவும் அமெரிக்க அதிபரின் கருத்தையும் நன்றாகக் காய்ச்சி வடித்து காயவைத்தால் கிடைக்கும் கடைசிப் பனங்கட்டி இதுதான். இந்தப் பனங்கட்டி இன்று எவருடைய நாக்கிற்குமே இனிக்கவில்லை. ஆனால் வெளிப்படையாக ஆகா என்ன இனிப்பென்று கூறி நம்மை நாமே ஏமாற்றி வருகிறோம்.
பராக் ஒபாமா, பாதுகாப்புச் சபை ஆகிய இரு தரப்புக் கருத்துக்களும் மதிப்பிற்குரிய கருத்துக்களாக இருந்திருந்தால் மடியும் மக்களுக்கு குடிக்க ஒரு மிடறு தண்ணீராவது மேலதிகமாக கிடைத்திருக்க வேண்டும். அமெரிக்காவே அட எங்கள் அய்நாவே என்று அலறியவர்களின் வாயில் மரணக் குழியின் ஒரு பிடி மண்தான் விழுந்திருக்கிறது.
இந்த நிமிடம்வரை உலகத்தின் எந்தவொரு அணியும் இந்தப் பிரச்சனையை தீர்க்கும் பாத்திரத்தை உறுதியாக கையில் எடுக்கிறோம் என்று பொறுப்புடன் தெளிவாகக் கூறவில்லை. பற்றிப்பிடிக்க முடியாத பனிக்கட்டி போல குளிர்ந்து பின் மெல்ல வழுகிச் செல்லும் கருத்துக்களையே அனைவரும் கூறி வருகிறார்கள்.
நெருப்பாக எரியும் உண்மையின் கருவில் துணிந்து கையை வைக்க எல்லோருமே பயப்படுகிறார்கள்.
யாராவது உண்மை நெருப்பில் விழுவார்களா என்று காத்திருப்பதால் எல்லோருமே உண்மைய சுற்றிச்சுற்றித்தான் வருகிறார்கள். உண்மையின் கருவை தொடப் பயப்படுவோரிடையே பொய்ச் செய்திகளே விலைபோகும். அதனால்தான் இவ்வளவு பொய்ச் செய்திகள் பொலபொலத்து கொட்டுப்படுகின்றன.
பல நூறு கைகளை வீசி, பல்லாயிரம் கோடி எஃகு நாக்குகளை சுழற்றி பொய் வீதி வலம் வருகிறது.
பொய்கள் குப்பை போல பெருகிய தோட்டத்தில் உண்மை அருகி இப்போது பிடுங்கி வீச வேண்டிய களையாக மாறியிருக்கிறது.
எத்தனை பொய்களை எவர் சொன்னாலும்,
வன்னியில் கொடுமையான முறையில் மடியும் தமிழர்களின் மரண ஓலம் மட்டும் பொய்யானதல்ல !
உலகத்தின் மூஞ்சையில் கடைசி மூச்சை இழுத்து காறித் துப்பிவிட்டு மரணக்குழியில் விழும் ஈழத் தமிழனின் கண்ணீருக்கு முன்னால், அரசியல்! அதிகாரம்! ஆயுதம்! பொய்ச் செய்திகள் மட்டுமல்ல உலக நாடுகளின் மமதைக்குக் காரணமான அணு குண்டுகளும் தோல்வியடைந்து நிற்பது தெரிகிறது.
உண்மையாக இந்தப் பிரச்சனையை எப்படித் தீர்ப்பது என்று கேட்கிறீர்களா ?
அந்தக் கேள்வியிலேயே அதற்கான பதிலும் இருக்கிறது !
எல்லோரும் உண்மையை பேசுங்கள் ! அதையே செய்யுங்கள் !
ஏனென்றால் ஈழத் தமிழனின் இறப்பு பொய்யானதல்ல அது உண்மையானது !