வன்னிக் களமுனை – கேள்விகளால் ஒரு வேள்வி – குளோபல் தமிழ்ச் செய்தியாளரின் செய்தி ஆய்வு
-
இவ் விடயம் 17. 05. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 5:30க்கு பதிவு செய்யப்பட்டது
- கட்டுரைகள், தாயக, இலங்கைச் செய்திகள்
இலங்கைப் பாதுகாப்புப் படைகளின் 58 ஆவது 59 ஆவது அணிகள் வடகிழக்கே கடற்கரை வழியாக ஒன்று சேர்ந்து விட்டன. விடுதலைப் புலிகளின் கடற்பரப்பு ஆதிக்கம் 26 ஆண்டுகளுக்கு பின் தமது கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக இலங்கைப் படையினர் அறிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக தொடர்ந்த கடுமையான மோதலின் பின் இன்று அதிகாலை கடல் ஆதிக்கத்தை அரச படைகள் தமதாக்கிக் கொண்டதாக ஊடகங்களுக்கு விடுத்த செய்திக் குறிப்பில் இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் ஜோர்டானில் இருந்து அரசாங்கப் படைகளின் வெற்றியை அறிவித்துள்ளார். பயங்கரவாதத்தை தோற்கடித்த நாட்டிற்கு மீள திரும்பிச் செல்லப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் மிகமுக்கிய தளபதிகளான பிரிகேடியர் சொர்ணம் மற்றும் பிரிகேடியர் சசி மாஸ்ரர் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதாக படையினர் அறிவித்துள்ளனர்.
வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்களும் இவர்கள் சாவு அடைந்திருக்கலாம் என்ற ஊகங்கள் எழுந்திருப்பதாக தெரிவித்துள்ளன. ஏற்கனவே புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் கடும் காயத்திற்கு உள்ளான நிலையில் மரணித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. பின்னர் இல்லை அவர் மரணிக்கவில்லை ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக விடுதலைப் புலிகள் தரப்புத்தகவல்கள் தெரிவித்தன.
கடற்புலிகளின் தளபதி சூசையின் மனைவி பிள்ளைகள் படையினரிடம் சரணடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆயினும் முன்னர் இவர்களைத் தாம் கடலில் வைத்து கைது செய்ததாக படையினர் தெரிவித்திருந்தனர்.
இத்தகைய பாரிய பின்னடைவுகளைப் புலிகள் சந்தித்து வரும் நிலையில் ஜனாதிபதியும் அரசாங்கமும் கூறுகின்ற பயங்கரவாதம் உண்மையில் இன்றுடன் முழுமையாக தோற்கடிக்கப்பட்டுள்ளதா? அல்லது அரசாங்கம் கூறுகின்ற கடற்பகுதி முழுமையாக புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டதா? ஆயின் நந்திக்கடலின் ஒருபக்கம் இப்பொழுதும் யார்வசம் உள்ளது? இதுவரை எத்தனை புலிகள் படையினரிடம் சரணடைந்தார்கள்? எத்தனை புலிகளை படையினர் கைது செய்தனர்? புலிகளில் கொல்லப்பட்டதாக அரசாங்கம் அறிவித்த மற்றும் புலிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சாவுகளைத் தவிர ஏனைய அவர்களின் தளபதிகள் எங்கே? விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் கடற்புலிகளின் தளபதி சூசை, கேணல் பானு, கேணல் ஜெயம் உள்ளிட்ட தளபதிகள் அவர்களுடன் நிற்கும் புலிஉறுப்பினர்கள் எங்கே? கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் தவிர்ந்த ஆயுதங்கள், அழிக்கப்பட்ட கைப்பற்றப்பட்ட டோரா படகுகள் தவிர்ந்த தாக்குதல் படகுகள் எங்கே? என்ற பல கேள்விகள் பலரிடமும் எழுவது நியாயமானதே.
இவை ஒருபுறமாக இருக்க இன்று அல்ஜசீராத் தொலைக்காட்சி செய்தியாளர் லண்டன் நேரம் அதிகாலை 4.15ற்கு பிரிகேடியர் உதய நாணயக்காரவிடம் கேட்ட சிக்கலான கேள்விகளுக்கு தட்டுத் தடுமாறி பதிலளித்த அவர் இன்னும் 2 கிலோமீற்றர் சுற்றளவுப் பிரதேசம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்திருந்தார். அப்போது அல்ஜசீரா செய்தியாளர் கேட்ட 48 மணி நேர கால அவகாசம் என்ன ஆயிற்று எனக் கேட்டதற்கு மக்கள் அதிகமாக இருப்பதனால் அவர்களை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு அரசிடம் இருப்பதாக கூறினார். பின்னர் மாலை பீ.பீ.சீக்கு வழங்கிய செவ்வியில் இன்னும் எஞ்சியிருக்கும் பகுதிகளை விரைவில் படையினர் கைப்பற்றி விடுவர் என இராணுவப் பேச்சாளர் கூறினார்.
ஆக விடுதலைப் புலிகள் பாரிய பின்னடைவைச் சந்தித்து இருக்கிறார்கள், நிலப்பகுதிகளை இழந்திருக்கிறார்கள் பல அதி முக்கிய தளபதிகளை போராளிகளை இழந்திருக்கிறார்கள் என்ற உண்மைகளுக்கு அப்பால் அவர்கள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டார்கள் ‐ யுத்தம் முடிவுக்கு வந்து விட்டது – புலிகளின் பலம் சிதைக்கப்பட்டுவிட்டது – அவர்களால் தொடர்ந்து எதனையுமே செய்ய முடியாது என அரசாங்கமும், அவர்கள் சார்பானவர்களும், மற்றும் புலி எதிர்ப்பாளர்களும் கூறுகிறார்கள்.
படையினர் சுற்றி வளைத்திருக்கும் பகுதிக்குள் உள்ள புலிகள் பலர் சயனைட் விழுங்கி விட்டார்கள், தற்கொலை செய்துவிட்டார்கள் என்றெல்லாம் அரசாங்கம் பாரிய பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.
இவையெல்லாம் எந்த அளவிற்கு யதார்த்தமானது என்ற ஐயமும் கேள்வியும் எழத்தான் செய்கின்றன. இந்தச் செய்தியில் முன்னர் குறிப்பிட்டது போன்று இவையாவும் உண்மையானால் புலிகளினுடைய வளங்கள் யாவும் எங்கே? நேற்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு விடுத்த ஒரு செய்தியில் புலிகள் தம்மிடம் இருந்த ஆதாரங்கள் ஆவணங்களை அழிப்பதாகவும் நேற்று முன்தினம் கரைமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இவ்வாறு பெருமளவு ஆவணங்களை அழித்துள்ளதாகவும் பெரும் வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் செய்தி வெளியிட்டது.
அப்படியாயின் இங்கே இன்னுமொரு கேள்வியைக் கேட்க வேண்டும். புலிகள் தம்மைத் தாமே அழித்துக் கொள்கிறார்கள் சயனைட் குடிக்கிறார்கள் அழிந்து போகிறார்கள் என்றால் இந்த ஆவணங்களை ஏன் அழித்து நேரத்தை வீணாக்க வேண்டும்? தமக்கு யார் யார் உதவி செய்தார்கள் என்று வெளியில் தெரிவதால் அழிந்து போகிறவர்களுக்கு என்ன அக்கறை? என்று எவருக்கும் கேள்வி எழத்தான் செய்யும்?
ஆக இன்று களத்தில் நடக்கும் சாட்சிகள் அற்ற ஆயுத யுத்தத்துடன் ஒரு பிரமாண்டமான ஊடக யுத்தம் இடம்பெறுகின்றது. இந்த ஊடக யுத்தத்தில் முன்பெல்லாம் புலிகளே வெற்றி கண்டு இருந்தார்கள். இப்போ புலிகள் கையாண்ட அதே யுக்திகளை அரசாங்கம் கையாண்டு ஊடகயுத்தத்தில் வெற்றிபெறுகிறது.
மறுபுறத்தில் படையினர் உட்புகாத எஞ்சிய நிலப்பரப்பில் உள்ள மக்கள் 14 ஆயிரம் பேர் வரை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்திருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் படையினர் கைப்பற்றிய கரேயோரப் பகுதியில் இருந்த 10 ஆயிரம் பேர்வரை கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிரவேசித்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அரசாங்கம் கூறும் 14 ஆயிரம் பேர் வவுனியாவுக்கோ அல்லது யாழ்ப்பாணத்திற்கோ செல்லவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக வவுனியாவுக்கு 5 ஆயிரம் பேர்வரையே வந்திருப்பதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயின் அரசாங்கம் கூறும் எண்ணிக்கையில் மிகுதியானவர்கள் எங்கே?
மறுபுறம் பாதுகாப்பு வலையத்துள்ள குறைந்தது 80 ஆயிரம் முதல் 1 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் உள்ளதாக சுயாதீனத் தகவல்கள் தெரிவித்துள்ளன. ஐநா சபையோ குறைந்தது 50 ஆயிரம் பேர் இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆயின் இந்த மக்களுக்கு என்ன நடந்தது? படையினர் விடுதலைப் புலிகளிடம் இருந்து முழுமையான பகுதிகளைக் கைப்பற்றி இருந்தால் அங்கிருந்த மக்களை என்ன செய்தார்கள்?
ஆக விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டார்கள் இனி யுத்தநிறுத்தம் சமாதானப் பேச்சுவார்த்தை, அரசியல் தீர்வு என்பவை பற்றிப் பேசத் தேவையில்லை எனக் கூறுகின்ற அரசாங்கமும் அரச ஆதரவாளர்களும் புலி எதிர்ப்பாளர்களும் இந்தக் கேள்விகளுக்கு பதில் கூறுவார்களா?