தமிழர்களின் மனங்களை வெல்வதே மேலானது

இலங்கை தேசத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்றக் கூட்டம் ஒன்றை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கூட்டியிருக் கின்றார். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஒன்றில் ஜனா திபதி தலைமை வகித்து உரையாற்றுவதற்கு வசதி யாக நாடாளுமன்றம் நேற்றுமுன்தினம் நள்ளிரவோடு இடைநிறுத்தப்பட்டிருகின்றது.

புதிய கூட்டத் தொடரை இன்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கும்போது, தமது தலைமையில் நாடா ளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் வாய்ப்பு ஜனாதிப திக்குக் கிடைக்கிறது.

ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந் திப் போராடிய விடுதலைப் புலிகளின் தலைமையை அடியோடு அழித்து, அதனை நீக்கியதோடு, நாட்டில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதான அரசின் அறிவிப்பை இன்று நாட்டு மக்களுக்கு விடுப்பதற்கா கவே ஜனாதிபதி இந்த உரையை நாடாளுமன்றில் நிகழ்த்துகின்றார் என்றும், அதற்காகவே நாடாளு மன்றம் இடைநிறுத்தப்பட்டு புதிய கூட்டத் தொடரின் ஆரம்ப வைபவம் இன்று நடத்தப்படுகின்றது என்றும் அரசுத் தரப்பில் கூறப்பட்டது.
விடுதலைப் புலிகளின் தலைமை கூண்டோடு அழிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசுநேற்று நண் பகல் அறிவித்தது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த அரசு”மனிதநேய மீட்புப் போர்”என்ற பெயரில் நடத்தி வந்த யுத்தம் நேற்றுடன் முடி வுக்கு வந்துவிட்டதாக இலங்கை இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார். “இந்த யுத்தத்தை எனக்குப் பின்வரும் இராணுவத் தளபதி ஒருவர் தொடர் வதற்கு நான் விட்டுச் செல்லமாட்டேன். எனது காலத் திலேயே அதை முடிவுறுத்துவேன்”என்று ‹ளு ரைத்துத் தென்னிலங்கையின் மக்களின் பேரபிமானத் தைப் பெற்றுக்கொண்ட அவர், அந்த வகையில் தென் னிலங்கை பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் மேலும் ஒருபடி இன்று உயர்ந்து மேன்மை பெற்றிருப்பார் என் பது நிச்சயம்.

பிரிட்டிஷ் பிடியிலிருந்து இலங்கை விடுவிக்கப் பட்ட பின்னர், தென்னிலங்கை மக்கள் இவ்வளவு மகிழ்ச்சி ஆரவாரத்துடனும், சிறுபான்மையினரான தமிழர்கள் அதற்கு முற்றிலும் மாறான மனநிலையுடனும் திகழும் ஒருநாள் இப்போதுதான் வந்திருக்கின்றது என்று கூறலாம்.

“பயங்கரவாதிகளான புலிகள் அழிக்கப்பட்டால், ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும்” எனக் கூறி வந்த உள் ளூர், உள்நாட்டு மற்றும் சர்வதேசத் தரப்புகள் இனி அந்த நீதியை எப்படிப் பெற்றுக்கொடுக்கப் போகின்றன என்பதை வெறுமனே பார்த்து வாளாவிருப்பதைத் தவிர, தமிழர்களுக்கு அதிக பங்களிக்கக் கூடிய விடயங்கள் பெரும்பாலும் இல்லை.

தெற்கின் இந்த மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள், ஆர வாரங்களுக்கு மத்தியில் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டி நினைவூட்டுவதும் பொருத்தமானதுதான்.
இன்று முழு இலங்கைத் தீவின் சகல பிரதேசங்க ளையும் அரசின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து புலிகளின் பிடியை முற்றாக சிதறடித்ததாக இந்த அரசுபுளகாங்கிதம் கொள்கின்றமை போல, 1996 ஆம் ஆண்டு முற்பகுதியில் யாழ் குடாநாட்டைப் புலிகளிட மிருந்து மீட்டபோது அப்போதைய சந்திரிக்கா அரசும் அச்சமயம் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தது.

ஓர் எதிரியின் தேசத்தைக் கைப்பற்றித் தனது ஆளு கைக்குள் கொண்டு வந்தமையை ஒப்ப, குடாநாட்டு மீட்பைக் கொண்டாடியது அப்போதைய அரசு. குடா நாட்டை வெற்றிகரமாக மீட்ட தளபதியாக அப் போதைய பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அனு ருத்த ரத்வத்த, அது தொடர்பான “வெற்றிப் பட்டயத்தை”நாட்டின் தலைவியான சந்திரிக்கா குமாரதுங்கவிடம் சம்பிரதாயபூர்வமாக ஒப்படைக்கும் பெரும் நிகழ்வு அன்று ஆரவாரமாகக் கொண்டாடப்பட்டது.

பின்னர் தமது ஆட்சி முடிவுக்கு வந்த சமயம் அந்த நிகழ்வை அப்படி ஆர்ப்பாட்டமாக ஆடம்பரமாக நடத்தியமைக்காகப் பெரிதும் கவலை தெரிவித்தார் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க. “இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழர்களை எனது நிரந்தர எதிரியாக்கிக் கொண் டேன்”என்றும், “எனது அரசியல் வாழ்வில் நான் இழைத்த மிகப் பெரிய தவறு இது”என்றும் சாரப்பட பின்னர் அவர் கருத்து வெளியிட்டார்.

நன்மை தீமைகள், பிரதிபலன்கள், பிராயச்சித்தங் கள் போன்றவை குறித்தெல்லாம் சிந்திக்கும் தலை வர்களுக்கு காலம் கடந்தாவது இத்தகைய வேதனைகள், மன உளைச்சல்கள் ஏற்படுவதுண்டு.

தமிழரின் ஆயுத பலத்தை வெல்வதைவிட அவர்க ளின் மனதை வெல்வதே நிரந்தர அமைதிக்கும், நீடித்த சமாதானத்திற்கும் வழிவகுக்கும்.

நடந்து முடிந்தது அல்லது ஒப்பேறியிருப்பது ஆக்கிரமிப்பும், அடக்குமுறையும், மேலாதிக்கத் திணிப் பும்தான் என்ற கருத்து சிறுபான்மையினர் மனதில் ஆழமாகப் பதிந்து இருக்கும்வரை எது வெற்றி, எது சாதனை என்ற விடயங்கள் எல்லாம் கேள்விக் குறிகளே. எனவே, அவர்களின் மனங்களை வெல்வது பற்றிச் சிந்திப்பதே மேலானது; ஆக்கபூர்வமானது. அரசு இதனைச் சிந்தை யில் கொள்ளுமா?

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.