19-05-2009: யேர்மனியில் பதினேழாவது நாளாகத்தொடரும் பட்டினிப்போராட்டம்

sdc10853கிரி மற்றும் ராகுல் ஆகியோரால் டுஸில்டொர்ப் பாராளுமன்றின் முன்பாக முன்னெடுக்கப்படும் பட்டினிப்போராட்டம் இன்றுடன் பதினேழாவது நாளை நிறைவுசெய்கிறது.

எமது தாயகப்பகுதிகளில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் மேற்பார்வையில் தடைமுகாம்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்மக்கள் அனைவரையும் உடனடியாக ஐக்கியநாடுகள் சபை பொறுப்பெடுப்பதன் மூலம் அவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும்.

ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்டுவருகின்ற இனப்படுகொலையை கண்கூடாகக்கண்டுகொண்டுள்ள சர்வதேசமானது,இவ்வினப்படுகொலையைத் தடுத்துநிறுத்தி தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவேண்டும்.

“தமிழர்களது விடுதலை இயக்கம் மீதான தடையை நீக்கவேண்டும்” என்ற புதியகோரிக்கைகளோடு உறுதியாக இவர்களது பட்டினிப்போராட்டம் தொடர்கிறது.

இன்று மதியம் மணியளவில் டுஸில்டொர்ப் நகரில் அமைந்திருக்கும் பிரித்தானியத்தூதுவராலயத்தின் முன்பாகக் கவனயீர்ப்புப்போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. கிரி மற்றும் ராகுல் ஆகியோரது கோரிக்கைகளை முன்வைத்தே இக்கவனயீர்ப்பு நடாத்தப்பட்டது. இறுதியில் யேர்மனியமக்கள் சார்பாக மனுவொன்றும் மகளிர்அமைப்பினரால் தூதரக அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது.பின்னர் 16.00 மணியளவில் அங்கிருந்து பேரணியாகப் புறப்பட்டு 17.40 மணியளவில் மக்கள் பட்டினிப்போராட்டத்திடலை வந்தடைந்தனர்.

இன்று உண்ணாநோன்புப் பந்தலுக்கு வருகைதந்த Hamm நகரத்தைச் சேர்ந்த கிறிஸ்தவப்பாதிரியார் Heim Vethanke அவர்கள் கிரி மற்றும் ராகுல் ஆகியோரை ஆசீர்வாதம் செய்தார். தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டம் பற்றிய செய்திகளை ஆர்வத்துடன் கேட்டறிந்த அவர், பட்டினிப்போராட்டத்தின் கோரிக்கைகள் மிகவும் நியாயத்தன்மை கொண்டவையென்றும் தெரிவித்தார்.

மாலை மணியளவில் சுடர்வணக்கத்துடன் ஆரம்பித்த ஒன்றுகூடல்நிகழ்வில் கிரி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு,
கடந்த பதினைந்து நாட்களாக நாம் பட்டினிப்போராட்டத்தினை மேற்கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் அதிகமாகச் சாதிக்கவில்லை. எம்மை வந்து அதிகமானோர் சந்தித்துச் செல்கிறார்கள். ஆனால் யேர்மனிய அரசாங்கத்திற்கும், இந்தப் பாராளுமன்றத்திற்கும் எமது பட்டினிப்போராட்டம் பற்றி எதுவித கரிசைனையும் இருப்பதாகத் தெரியவில்லை. விடுதலைப்புலிகள் என்ற அமைப்பின் மீது தடை ஏற்படுத்தப்படுவதற்கான உண்மையான காரணம் என்று எதுவுமில்லை. ஆனால் அதை மட்டுமே சாட்டாக வைத்துத் தமிழ்மக்களின் உரிமைப்போராட்டத்தை ஏற்பதற்குப் புலம்பெயர்நாடுகள் மறுத்துவருவது எமக்கு மிகவும் வேதனையை உண்டுபண்ணுகிறது. இந்நிலையை மாற்ற எமது இளையோர்களுடன் இணைந்து அனைவரும் போராட முன்வரவேண்டும். எமது உடல் தளர்ந்திருக்கிறதே தவிர, உறுதி தளரவில்லை. நாம் உயிர்கொடுக்கத் தயார். நீங்கள் குரல் கொடுக்கத்தயாராகுங்கள். இன்று எமது தலைமைப்பீடம் பற்றிய வதந்திகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் பரப்பி வருகிறது. நாம் இந்த வதந்திகளுக்கு முடிவு காண்பதற்கு எதிர்வரும் மாவீரர்தினம் வரை பொறுத்திருக்க வேண்டும். ஆனால் அதற்குமுன் நாம் செய்யவேண்டிய விடயங்கள் நிறையவே இருக்கின்றன.எனவே அனைவரும் இணைந்து போராடத்தயாராகுங்கள் என்று கூறினார்.

இறுதியில் மக்களனைவரும் பட்டினிப்போராட்டத்திடலில் வரிசையாக அணிவகுத்து நின்றபடி, போரினால் உயிர்நீத்த மக்களுக்காக கையில் மெழுகுதிரிச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தினர்.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.