பிரித்தானியாவில் ஆறு தமிழ் மக்களின் 168 மணித்தியால பட்டினி போராட்டம் நிறைவுபெற்றது
-
இவ் விடயம் 20. 05. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 19:12க்கு பதிவு செய்யப்பட்டது
- புலத்தமிழர் செய்திகள்
தமிழீழ விடுதலைப் புலிகள் அழிந்தனர். தமிழீழ போராட்டம் நிறைவு பெற்றது என சிறீலங்க சிங்கள அரசு கூச்சலிடம் நேரத்தில் இலண்டனில் தமிழ் மக்களின் தொடர் போராட்டம் வீறுகொண்டு “நாங்கள் தமிழ் புலிகள் நாங்கள் எங்கள் சுதந்திரத்திற்காக போராடுகின்றோம்” என கோசங்கள் எழுப்பும் அளவிற்கு எழுச்சி கொண்டுள்ளது.
வழமைபோல் இன்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் நாடாளுமன்ற சதுக்கத்தில் கூடி தங்கள் எழுச்சியை பிரித்தானிய அரசாங்கத்திற்கு வெளிப்படுத்தினர்.
கடந்த 7 நாட்களாக பட்டினி போராட்டத்தை மேற்கொண்ட 2 பெண்கள் உட்பட ஆறு தமிழ் மக்களின் உண்ணாநிலை போராட்டத்தை நேற்று இரவு 7 மணிக்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பீற்றர் பழச்சாறு கொடுத்து நிறைவுசெய்தார்.
அவர்களில் ஒருவரான நிமலன் கருத்து தெரிவிக்கையில்
“ அமெரிக்கா மற்றும் பிரித்தானிய அரசாங்கங்களால் மட்டுமே தமிழர்களுக்கு ஒரு விடிவை பெற்று தர முடியும். ஆகவே ஐரோப்பிய வாழ் தமிழர்கள் அனைவரும் பிரித்தானிய நோக்கியும், கனடாவில் வாழ்பவர்கள் அமெரிக்கா நோக்கியும் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும். தமிழரின் போராட்டம் இப்போது தான் ஆரம்பித்துள்ளது. நிச்சயம் ஒரு முடிவு காணும” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலண்டனில் அமைந்திருக்கும் அமெரிக்க தூதரகத்தின் முன்றலில் மனிதநேய ஆர்வலரும், தமிழீழ தாயகத்தில் தொண்டர் நிறுவனத்தில் சேவையாற்றியவருமான ரிம் மாற்றின் உடனடியாக சர்வதேசத்தின் செயற்கை கோள் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கையை பெற்று தரவேண்டும்,
- சர்வதேச ஊடகங்கள் மற்றும் அமைப்புகள் எதுவித தடையுமின்றி சிறிங்காவில் பணி புரிய அனுமதிக்கவேண்டும்,
- அகதிகளாக்கப்பட்டு பாடசாலைகளிலும் தடுப்பு முகாம்களிலும் வாழும் தமிழர்களுக்கு உ;டனடியாக மருத்துவ வசதி செய்யவேண்டும்,
- ஐ.நா செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியான விஜய் நம்பியார் மீது பொது விசாரணை செய்யவேண்டும்
என்ற 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இந்த போராட்டதில் இணைந்துகொண்டு இவருக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றார்.







