தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவியுங்கள்! – சுஷ்மா சுவராஜ்!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இலங்கை அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

625.70.560.350.160.300.053.800.100.160.80 (1)இது தொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில், ‘

கடந்த மாதம் 17–ம் தேதி தாங்கள் எழுதிய கடிதத்துக்காகவும், நான் குணமடைய தெரிவித்த வாழ்த்துகளுக்காகவும் தங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடவுள் அருளால் நான் குணமடைந்து எனது பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளேன்.

இந்தியா–இலங்கை மீன்வளத்துறை அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தை நிலுவையில் இருப்பது, எப்போதும் எனது நினைவில் உள்ளது.

நமது இரு நாட்டு அரசுகளும் இரு நாட்டு உறவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால்தான், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு நாம் தீர்வு காண முடிகிறது.

கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற இந்தியா–இலங்கை கூட்டு ஆணையத்தின் 9வது கூட்டத்தில், இலங்கை மீன்வளத்துறை அமைச்சரை பேச்சுவார்த்தைக்காக இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுப்பது என்று உடன்பாடு ஏற்பட்டது.

இதுபற்றி எங்கள் நாட்டு வேளாண் அமைச்சர் ராதா மோகன்சிங்குடன் நான் ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளேன்.

இலங்கை மீன்வளத்துறை அமைச்சருக்கு விரைவில் அழைப்பு விடுக்குமாறு அவரை கேட்டுக்கொண்டேன். அவரும் அதற்கான ஏற்பாடுகளை தொடங்கி விட்டார்.

அதே நேரம், இரு நாட்டு மீன்வளத்துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தைக்கு முன்பாக, இரு நாட்டு மீனவர் சங்க பிரதிநிதிகளிடையே இன்னும் ஒரு மாதத்துக்குள் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லது என்பது எனது யோசனை.

அதற்காக இருநாட்டு மீனவர் சங்கங்களை நாம் வலியுறுத்த வேண்டும்.இருநாட்டு மீனவர் சங்கங்களும் பேச்சுவார்த்தை நடத்தினால், அதன்பிறகு, இருநாட்டு மீன்வளத்துறை அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்த ஏதுவாக இருக்கும்.

இந்தியாவும், இலங்கையும் தாங்கள் கைது செய்யும் அடுத்த நாட்டு மீனவர்களை அவ்வப்போது விடுதலை செய்து வருகின்றன. இந்த சாதகமான சூழ்நிலையும், நல்லெண்ணமும் பாராட்டத்தக்கது.

இந்த நல்லெண்ண நடவடிக்கை, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில அரசுகளின் தலைமை மற்றும் மக்களின் மனதில் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை நிச்சயமாக ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

ஆகவே, இலங்கை சிறைகளில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிப்பது பற்றி தாங்கள் பரிசீலிக்க வேண்டும்.

அதுபோல், இந்திய சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிப்பது பற்றி நாங்கள் பரிசீலிப்போம்.

படகுகளும், மீன்பிடி சாதனங்களும் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு முக்கியமானவை என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், அவை வெயிலிலும், மழையிலும் தொடர்ந்து கிடந்தால், பயனின்றி போய்விடும்.

அத்துடன், இருநாட்டு கடல்சார் சுற்றுச்சூழலையும் சிதைத்து விடும். எனவே, எனது 2 யோசனைகளையும் தாங்கள் ஆக்கபூர்வமாக பரிசீலிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன் என்று கூறி உள்ளார்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.