பிரித்தானியா வெளியேறும்முடிவு! எமக்கான கேள்விகளும், பாடங்களும்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என்று ஏறத்தாள 52 வீதமான மக்கள் முடிவெடுத்து, அதனை அரசும் ஏற்றுள்ள ஒரு பொழுதில் அவை எமக்கான சில கேள்விகளையும் சில பாடங்களையும் விட்டு சென்றுள்ளதையும் கவனித்தே ஆகவேண்டும்.

625.70.560.350.160.300.053.800.100.160.80 (8)வரலாற்றின் ஒவ்வொரு சின்னம் சிறிய, பெரிதிலும் பெரிதான நிகழ்வுகள் எல்லாமே எப்போதும் எமக்கு சில, பல கேள்விகளையும் அதற்கு ஊடாக பாடங்களையும் தந்த வண்ணமே சென்று கொண்டு இருக்கின்றன.

கவனிப்பது நம் பொறுப்பு. இந்த பிரித்தானியா வெளியேற்ற முடிவுக்கு பின்னால் உள்ள அரசியல் பொருளாதார தரவுகள், புள்ளிவிபர பெருங்கணக்குகளை அலசுவது இந்த கட்டுரையின் நோக்கமன்று.

இப்போது நாம் பார்ப்பது என்னவெனில். விடுதலைக்கான ஒரு பெரும் கனவை, ஒரு மாபெரும் அவாவை மனதுள் நெடுங்காலமாகவே சுமந்து வைத்திருக்கும் ஸ்கொட்லாந்து மக்களும், அயர்லாந்து மக்களும் இங்கிலாந்து மக்களும் எடுத்த முடிவுக்கு, நேர் எதிரான ஒரு முடிவை எடுத்துள்ளதை பார்த்தால், ஒரு மத்திய ஆளும் கட்டமைப்பு தனது நலனுக்காக நடாத்தும் பொதுவாக்கெடுப்பைக் கூட, விடுதலைக்கான மக்கள் எவ்வாறு தமது இலட்சியத்தை வெளிப்படுத்த, தமது சுதந்திர எண்ணத்தை வெளிக்காட்ட உபயோகித்திருக்கிறார்கள்.

எப்போதுமே, விடுதலைக்காக நகரும் தேசிய இனங்கள் தத்தமது அரசியல் இலட்சியம், நோக்கு, சுதந்திரமான வாழ்வுமுறை என்பனவற்றுக்கான தமது விருப்புகளாகவே தமது வாக்குசீட்டுகளை பயன்படுத்துவதுதான் முறைமை. அதுவே ராஜதந்திரமும்கூட.

அதனை மிகச்சிறப்பாக இம்முறை ஸ்கொட்லாந்து மக்களும், அயர்லாந்துமக்களும் தமது வாக்களிப்பு மூலம் தெரிவித்துள்ளார்கள்.

தமிழீழ தேசமும் பல தாப்தங்களாகவே சிங்கள பேரினவாத தேர்தல்களில் எல்லாம் முழுக்க முழுக்க சிங்கள இனத்தின் வாக்களிப்புக்கு நேர் எதிரான தெரிவுகளுக்கு வாக்களித்திருப்பது தெரிகிறது.

ஆனால் 2009க்கு பின்னர் அந்த நேர் எதிர்வீதம் படிப்படியாக குறைந்து வருகிறது. அதற்கான உபயம் அடிப்பணிவு அரசியலை நியாயப்படுத்தும் மிலேச்சத்தனமான தமிழ் அரசியல்வாதிகள் சிலரே. இதுதான் நல்லிணக்கமோ..?

ஆனாலும் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறும் பட்சத்தில் தாமும்பிரித்தானியாவை விட்டு வெளியேறும் முடிவை எடுக்க நேரிடும் என்றும், அதற்கான ஒருபொதுவாக்கெடுப்பை ஸ்கொட்லாந்து மக்களிடம் நடாத்த வேண்டும் என்றும் ஸ்கொட்லாந்துமுதன்மை அமைச்சர் நிக்கொலா ஸ்ரேகன் குறிப்பிட்டு இருந்தது பல கேள்விகளை எமக்குள் ஏற்படுத்துகின்றது.

இலங்கைத்தீவுக்கு பிரித்தானியர் சுதந்திரத்தை கொடுத்தபோதும் கூட அது ஒரு டொமினீயன் முறையிலான அரசாகவே தொடர்ந்தது.

பல தொடர்புகளால் அது பிரித்தானியாவின் ஆயுதப்படைகளுடனும், பிரித்தானியாவின் நீதி அமைப்பினுள்ளும், பிரித்தானியாவின் ராணி முறைமைக்குள்ளும் இருந்தே வந்தது.

இதற்கு உதாரணமாக முதன் முதலில் இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவத்துக்குவிண்ணப்பித்தபோது அதனை வீட்டோ முறைமூலம் சோவியத் ரஷ்யா நிராகரித்தது.

அதற்கான காரணமாக இலங்கை பெயரளவில் சுதந்திரம் பெற்றிருந்தாலும் இன்னமும் பிரித்தானியகாலனிய ஆட்சியே அங்கு தொடர்வதாகவும், பிரித்தானிய அதிகாரிகளே இலங்கையை இன்னமும்நிர்வகிப்பதாகவும் சொல்லப்பட்டதை கூறலாம்.

மேலும் 1949 ஏப்ரல் 11ம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட ஆயுதப்படை சட்ட இலக்கம் 17 என்பது கூட 1947ஆம் ஆண்டு உருவான ஆங்லோ – இலங்கை பாதுகாப்பு சட்ட ஒப்பந்தத்தின் வடிவமே.

அது 1949ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி இலங்கை வர்த்தமானியில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.

இலங்கைக்கு ஆபத்து என்றுணரும் பட்சத்தில் பிரித்தானிய படைகள் வந்திறங்குவதற்கு இந்த சட்டமூலம் உத்தரவாதமளிப்பது போன்ற பல சட்டங்கள் இலங்கை என்பது பல வழிகளிலும் ஒருவிதமான டொமீனியன் முறையிலான அரசாகவே இருந்துள்ளதை காட்டுகின்றது.

எல்லாவற்றிலும் மேலாக, 1958ஆம் ஆண்டு தமிழர்களின் மீதான இனப்படுகொலை தாக்குதல்கள்தென்னிலங்கை எங்கும் எழுந்தபோது அதனை தடுப்பதற்கு முதல் ஐந்து நாட்களும் ஏதும் செயலற்று இருந்த பண்டாரநாயக்கா அரசுக்கு அப்போதைய கவர்னர் ஜெனரலாக இருந்த சேர் ஒலிவர் எர்னஸ்ட் குணதிலகா உடனடியாக அவசர நிலையை பிரகடனபடுத்தி அறிவித்தது ஒரு உதாரணம்.

கவர்னர் ஜெனரல் என்பவர் பிரித்தானிய முடியாட்சியின் பிரதிநிதியா இருப்பவர். இனப்படுகொலையை கைகட்டி பார்த்து நின்ற பண்டாரநாயக்கா, அதற்கு எதிராக அவசர நிலையை பிறப்பிக்கும் அதிகாரம் பிரித்தானிய முடியாட்சியின் கைகளில் இருந்தது.

இலங்கைக்கு சுதந்திரம் வழங்க முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட பல தரப்பான பரிந்துரைகளையும், சுதந்திரத்தின் பின்னர் இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டிய அவசர தேவை இருப்பதை பிரித்தானியா கூறிக்கொண்டே வந்திருக்கிறது.

இதனை புறந்தள்ளி விடமுடியாதவாறு இலங்கைக்கான டொமீனியன் முறையும் ஒரு இடைஞ்சலாகசிங்கள பேரினவாதிகளுக்கு இருந்து வந்திருந்தது.

இத்தகைய அமைப்பு முறையில் இருந்து முற்றாக விலகி குடியரசு என்ற பெயரில் சிங்கள பேரினவாத அரசு ஒன்றை அமைப்பதற்கான முன்னேற்பாடாக, கால்கோளாக புதிய குடியரசு யாப்பு உருவாக்கப்பட்டது.

இந்த யாப்பை உருவாக்குவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட நிர்ணயசபையில் தமிழர் கட்சிகள் சிங்கள கட்சிகளை மட்டுமே நம்பி சேர்ந்தது ஒரு பெரிய வரலாற்று தவறு.

இதற்கு முந்தைய வருடங்களில் தமிழர் தரப்புடன் செய்யப்பட்ட எல்லா உடன்படிக்கைகளும் சிங்கள தரப்பால் கிழித்து குப்பைக்குள் வீசப்பட்ட பின்னரும் கூட எந்தவொரு முகாந்தரமும் இன்றி சிங்கள தரப்பை மடடுமே நம்பிய வரலாற்று துரோகத்தை குடியரசு யாப்புக்கான அரசியல் நிர்ணயசபையில் இணைந்ததன் மூலம் மீண்டும் செய்தனர்.

வெகுவிரைவிலேயே இவர்கள் கொடுத்த பரிந்துரைகள் அனைத்தும் சிங்கள தரப்பால் முழுதாக நிராகரித்து விடப்பட அதில் இருந்து வெளியேற வேண்டிய தருணத்துக்கு வந்து சேர்ந்தனர்.

1972ஆம் ஆண்டு புதிய அரசியலைப்பு உருவாக்கப்பட்டு சிறீலங்கா குடியரசு உருவாக்கப்பட்டுதமிழர்களுக்கு அதுவரை இருந்த அற்ப சொற்ப அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பு கூடதுடைத்தெறியப்பட்ட நாளில் இப்போது ஸ்கொட்லாந்து முதன்மை அமைச்சர் வெளியிட்டது போன்ற ஒரு ஆணித்தரமான, துணிச்சலான, பிரகடனத்தை தமிழர் தரப்பு வெளியிடாதது ஏன் என்பதுதான் இப்போதைய கேள்வி?

அப்போது இதனை போன்ற ஒரு பிரகடனத்தை வெளியிட்டு எமது இறைமையை வலுக்கட்டாயமாகசிங்கள தேசத்துடன் இணைத்த பிரித்தானியாவை இதில் தலையிட கோராதது பெரும் வரலாற்றுதவறு.

புதிதாக உருவாக்கப்பட்ட சிங்களதேச அரசியலைப்பு எந்தவகையிலும் தமிழர்களை கட்டுப்படுத்தாது என்று தைரியமாக கூற, அந்த நேரம் எந்தவொரு பாராளுமன்ற கறுப்பு அங்கி அரசியல் வாதிக்கும் நெஞ்சுரம் வரவில்லையே.

1972ஆம் ஆண்டு மே ல் புதிய அரசியலைப்பும் குடியரசு முறைமையும் உருவாகிய பின்னரும் கூடபாராளுமன்ற கதிரைகளில் வழிந்து தூங்கி, சிங்கள பேரினவாதம் போட்ட சம்பள சலுகைகள் மற்றும் பாராளுமன்ற கோட்டாக்களை ஆற அமர அனுபவித்து வந்தது தமிழர் பிரதி வர்க்கம்.

ஒருவழியாக நான்கு மாதத்தின் பின்னர் 1972ஆம் ஆண்டு ஒக்டோபரில் தமிழரசுகட்சி தலைவர்செல்வநாயகம் தமது பாராளுமன்ற பதவியை துறந்தார்.

அப்போதுகூட எஞ்சிய உறுப்பினர்கள் பாராளுமன்ற கதிரைகளுடன் கட்டி பிடித்தபடியே கிடந்தனர்.அந்தநேரம் முழு தமிழர் பிரதிநிதிகளும் வெளியேறாதது மிகப்பெரிய வரலாற்று தவறுகளில் இன்னொன்று.

இத்தகைய கேள்விகளில் இருந்து பெரும் பாடம் என்னவெனில் கிடைக்கும் சிறு இடைவெளியையும் கூட எமது தேசிய அடையாளத்தை, எமது விடுதலைக்கான பெரு விருப்பை வெளிக்காட்ட உபயோகிக்க வேண்டும்.

அதுவும் அந்த தருணத்திலேயே செய்யப்பட வேண்டும் என்பதே படித்துக் கொண்ட பாடம். எங்களுக்கு வரலாற்றில் நேர் எதிரான இரண்டு தரப்புகளதும் பாடங்கள் ஒவ்வொரு தருணத்திலும் கிடைக்கின்றது.

கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பதிலும்கூட தமது செழிப்பான வாழ்வு, தமது பிள்ளைகளது வெளிநாட்டு கல்வி, தமது நீதிமன்ற வழக்குரைஞர் தொழிலின் சம்பாத்தியம் என்பனவற்றுக்காகவும் சிங்கள அரசு போட்ட சலுகைகளுக்காகவும் நல்லிணக்கம் என்று சொல்லி துரோக அரசியல் செய்த தமிழர் அரசியல்வாதிகள் மூலம் கிடைத்த பாடங்கள் ஒருபுறம்.

இன்னொரு புறம், தமது இளமை, தமது வாழ்வு, தமது அறிவு என்று அனைத்தையும் தமிழ் இனவிடுதலைக்காக அர்ப்பணித்து, கிடைத்த ஒவ்வொரு சிறுசிறு ஊசிமுனை சந்தர்ப்பங்களைக் கூட தேசிய இனத்தின் எழுச்சிக்காக முன்னெடுத்த எமது தேசியதலைவரும் அவரது தலைமையிலான அமைப்பின் ஒவ்வொரு மாவீர போராளியும் தரும் பாடங்கள்.

எப்படி நடக்ககூடாது என்பதை தமிழ் அரசியல்வாதிகள் மூலமும், எப்படி உறுதியாக, எவ்வாறு ஒவ்வொரு தருணத்தையும் தமிழீழ இறைமையை வலியுறுத்துவது என்பதை எமது தலைவனிடமும் இருந்து பெற்று கொள்வோம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.