“அவுஸ்திரேலியா போனால் போதும், பிழைத்துக் கொள்வோம்”! தமிழ் அகதிகளின் நம்பிக்கை

சட்டத்திற்குப் புறம்பாக ஒரு நாட்டிற்குள் குடிபுக எண்ணுபவர்களும், சட்டப்படி அனுமதி கோரி அடுத்த நாடுகளை அண்டுபவர்களின் வாழ்வும் வலிமிக்கதே.

625.70.560.350.160.300.053.800.100.160.80 (9)இந்தப் போராட்டத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இன்றைய நாளில், உலக அளவில் சுமார் ஆறு கோடி மக்கள் அகதிகளாக இருக்கின்றனர்.

இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்த ஏராளமான தொப்புள் கொடி உறவுகள், இங்கிருக்கும் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலர், அன்றாடக் கூலித் தொழிலாளிகளாக தங்கள் வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர். எங்கு வேலைக்குப்போனாலும் அவர்கள் மாலையில் முகாமிற்கு திரும்பி விடவேண்டும் என்கிற சட்டத்தின்படி வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.

ஒரு சிலர், தங்களுடைய தாயகமான இலங்கைக்கே மீண்டும் திரும்பிச் செல்லும் முனைப்பிலும், அவுஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட தமிழர் ஆதரவு நாடுகளில் புகலிடம் தேடியும் பயணப்பட்டு விடுகின்றனர்.

படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரி வருவோரை நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை என்றும், வெளியே ‘பாப்புவா நியூகினியிலுள்ள முகாமுக்கு அவர்களைத் திருப்பி அனுப்பிவிடுவது என்றும் அவுஸ்திரேலிய அரசு, முடிவு செய்ததைக் கண்டித்து, அந்த நாட்டில் பல இடங்களில் போராட்டங்கள் கூட நடைபெற்றுள்ளன.

ஆனாலும் அகதிகள் தஞ்சம் அடைவதும் பிடிபடுவதும் தொடருகிறது. படகுகளில் ஏறி அவுஸ்திரேலியாவுக்கு வருவோர் உண்மையான தஞ்சம் கோருபவர்கள் என்று கண்டறியப்பட்டால் கூட, அவர்கள் இனி நாட்டுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அவுஸ்திரேலியப் பிரதம அமைச்சகமும் அறிவிப்பு செய்திருந்தது.

ஆபத்தான படகுப் பயணம் மூலம் வரும்போது கடலில் விழுந்து அகதிகள் உயிரிழக்கின்றனர். இவர்களுக்கு பின்னால் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் இருக்கின்றன ” என்பதே அவுஸ்திரேலிய அரசின் குற்றச்சாட்டு.

அகதிகளுக்கான நடவடிக்கை கூட்டமைப்பின் முக்கிய நபரான இயன் ரிங்ச்சல், ” அரசின் இந்த வாதம் உண்மையல்ல, படகுப் பயணத்தை ஒழுங்கு செய்வர்கள் பலர் முன்னாள் அகதிகள்தான்.

ஆப்கானில் இருந்தும் பர்மாவில் இருந்தும் வெளியேறியுள்ள அகதிகள், தம்மைப் போலவே தமது நாட்டில் இருந்து வெளியேற முற்படும் மக்களை வெளிக் கொண்டுவர உதவுகின்றனர்.

இந்தோனேசியாவில் நடைபெற்ற காவல்துறை நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டவர்களில், கணிசமானோர் முன்னாள் அகதிகள்தான்” என்கிறார்

அகதிகளுக்கு அவுஸ்திரேலியா அபயம் அளிக்க வேண்டுமா’ என்ற கேள்வியைக் கருத்துக் கணிப்புகளில் முன்வைத்தபோது, 75 சதவீதம் பேர்கள் ‘ஆம், அவர்களுக்கு உதவியளிக்க வேண்டும்’ என்று கூறினாலும், படகில் தப்பித்து வருவோர் குறித்துக் கேட்டால் மூன்றில் ஒருவர்தான் அவர்களுக்கு சாதகமாக இருக்கின்றனர்” என்கிறார், இயன் ரிங்ச்சல்.

இந்தோனேசியாவில் இருக்கும் அகதிகளில் ஆண்டுதோறும் 20 ஆயிரம் பேரை ஏற்பதாக அவுஸ்திரேலியா, ஐ.நா அகதிகள் ஆணையத்திடம் கூறியிருந்தும், மிகக் குறைந்த அளவிலானவர்களையே அது ஏற்கிறது” என்ன்கிறார்கள், அகதிகள் மறுவாழ்வை முன்னெடுத்துச் செல்லும் என்பது செயற்பாட்டாளர்கள்.

ஒருபக்கம் இந்திய அரசோ, “திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், பொலநறுவை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தின் விழுப்புரம், திருச்சி, திருவள்ளூர், திருவண்ணாமலை, மதுரை முகாம்களில் வசித்து வந்துள்ளனர்.

2011ஆம் ஆண்டு முதல் 1718 குடும்பங்களைச் சேர்ந்த 4733 பேர், தங்களின் தாயகம் செல்ல விரும்பியே முழுமனதுடன் திரும்பி உள்ளனர்” என்று தெரிவிக்கிறது.

சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளதால் அந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரி வருகின்றனர்.

கடல் மார்க்கமாக கிரீஸ், துருக்கி, இத்தாலி நாடுகளில் கரையேறும் அவர்கள், அங்கிருந்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு பயணமாகி வருகின்றனர்.

ஜெர்மனியில் குவிந்து வரும் (2 லட்சத்து 3000 அகதிகள்) அகதிகளைப் பராமரிக்க அந்த நாட்டு அரசுக்கு, நடப்பாண்டில் மட்டுமே ரூ.74,336 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் அகதிகளுக்காக ஜெர்மனி அரசு ரூ.17,844 கோடியை செலவிட்டுள்ளது.

ஜெர்மனி மட்டுமே அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதால், ஆயிரக்கணக்கான அகதிகள் துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளில் இருந்து மாசிடோனியோ, செர்பியா, ஹங்கேரி, ஆஸ்திரியா வழியாக ஜெர்மனியைச் சென்றடைகின்றனர்.

மாசிடோனியோ, செர்பியா, ஹங்கேரி ஆகிய நாடுகள் அகதிகள் விவகாரத்தில் கடும் கெடுபிடியைக் கடைப்பிடித்து வருகின்றன. இந்த நாடுகள் தங்கள் எல்லைகளில் அபாயகரமான வேலியை அமைத்து அகதிகளை விரட்டுகின்றன.

ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் இதுகுறித்து கூறியபோது, ” முஸ்லிம்களை அனுமதித்தால் ஐரோப்பிய நாடுகளின் கிறிஸ்தவ கலாச்சாரம் அழிந்துவிடும்” என்று பகிரங்கமாக வெறுப்புணர்வைக்கொட்டியுள்ளார்.

சிரியாவைச் சேர்ந்த அய்லான் கர்டி என்ற 3 வயது சிறுவனின் உடல் துருக்கியின் கோஸ் தீவில் கரை ஒதுங்கிய புகைப்படம் உலகை புரட்டிப் போட்டது.

இதனால் அகதிகள் விவகாரத்தில் பிடிவாதமாக இருந்த ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளின் அரசுகள், சொந்த நாட்டு மக்களின் நெருக்கடியால் தங்களது எல்லைகளைத் திறந்துவிட்டுள்ளன.

ஆஸ்திரியா அரசு அகதிகளுக்கு தஞ்சம் அளிக்க முன்வந்தாலும் வெகுசிலரே அந்த நாட்டில் தங்கியுள்ளனர்.

பெரும்பான்மை அகதிகள் அங்கிருந்து ஜெர்மனியின் முனிச், பிராங்க்பர்ட் நகரங்களை சென்றடைகின்றனர். அனைவருக்கும் ஜெர்மனி அரசு அடைக்கலம் அளித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள், ஜெர்மனிக்கு வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவுஸ்திரேலியா பிரதமர் டோனி அபோட், ” மூன்று வயது சிறுவன் அய்லானின் புகைப்படம் எனது மனதை வெகுவாகப் புண்படுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் 13,750 அகதிகளுக்கு ஆஸ்திரேலியா அடைக்கலம் அளிக்கிறது. இந்த ஆண்டு சிரியா மக்களுக்காக கூடுதலாக அகதிகளை ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளோம், இதில் பெண்கள், குழந்தைகள், சிறுபான்மை மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என சொல்லியுள்ளார்.

மனிதநேய அடிப்படையில் அகதிகளுக்குப் புகலிடம் கொடுக்கும் நாடுகளும் பொருளாதாரச் சுமையை சுமக்கின்றன.

பாகிஸ்தான் பிரிவதற்குக் காரணமாக இருந்த வன்முறையில் இருந்து தப்பிய கிழக்கு பாகிஸ்தான் அகதிகள், இந்தியாவில் குடியேறிய பொழுது, பொருளாதார சுமையில் இருந்து மீள அஞ்சல்களின் விலையை உயர்த்திய இந்தியா, ஐந்து பைசா அகதிகள் தபால்தலைகளை 1971 ல் இருந்து 1973 வரை வெளியிட்டது.

இந்நாளில் சிரியாவில் இருந்து உள்நுழையும் அகதிகளுக்கும், ஆப்பிரிக்காவில் இருந்து வரும் அகதிகளுக்கும் புகலிடம் கொடுத்துச் சமாளிக்கும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரச் சுமையாலும், அகதிகளுக்கு மறுவாழ்வளிப்பதால் ஏற்படும் உள்நாட்டு அரசியல் கொந்தளிப்பினாலும் தடுமாறுகின்றன.

ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி நல்ல முன்னோடியாக பெரும் சுமையைச் சுமந்து வருகிறது. பிற ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகும் அகதிகள், அந்நாடுகளின் அகதிகள் முகாம் வாழ்வை வெறுத்து மேற்கு ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் பெறுவதையே விரும்புகின்றனர்.

இந்த 2015ஆம் ஆண்டில், அகதிகளின் சோக வாழ்வுகள் குறித்த செய்திகள் பல தொடர்ந்து வெளியாகி, மக்களின் கவனத்தைக் கவர்ந்த வண்ணமே உள்ளன.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு அகதிகளின் எண்ணிக்கை உச்சநிலையை அடைந்திருப்பதாக “அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்” தெரிவிக்கிறது.

உலகம் முழுவதும் சுமார் 6 கோடி பேர் அகதிகளாக உள்ளனர். கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 83 லட்சம் பேர் அகதிகளாக மாறியுள்ளனர்.

இது குறித்து ஐக்கிய நாடுகள் அகதிகள் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “போர்கள், உள்நாட்டு கலவரம் உள்ளிட்ட காரணங்களால் அகதிகளின் எண்ணிக்கை மிகவும் வேகமாக உயர்ந்து வருகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு இறுதியில் எடுக்கப்பட்ட கணக்கின்படி, உலகம் முழுவதும் சுமார் 6 கோடி பேர் அகதிகளாக உள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டில் மட்டும் 83 லட்சம் பேர் அகதிகளாக மாறியுள்ளனர். உலகம் முழுவதும் 122 பேரில் ஒருவர் அகதியாக உள்ளார்.

இவ்வாறு உலகெங்கும் அகதிகளாக உள்ளவர்கள் ஒரு நாட்டில் இருந்தால், அது மக்கள்தொகையில் உலகின் 24வது மிகப் பெரிய நாடாக இருக்கும்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், கடந்த 2014ம் ஆண்டு இறுதிவரை எடுக்கப்பட்ட கணக்கின்படி, இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் 10,433 பேர் அகதிகளாகவும், 16,709 பேர் அடைக்கலம் கோரியும் விண்ணப்பித்துள்ளனர். இந்தியாவில் அகதிகளாக இருப்பதற்காக 1,99,937 பேரும், 5,074 பேர் அடைக்கலம் கோரியும் விண்ணப்பித்துள்ளனர்.

வாழ்வாதாரம் தேடி புலம்பெயர்ந்த தமிழர்கள், அகதிகளாக உரிமையுடன் இருக்கும் நாடுகளில் முக்கியமான இடத்தைக் கொண்டுள்ளது, இந்தியாவின் தமிழ்நாடு.

அதே சமயம் தமிழகத்திலிருந்தும் அகதிகள் அவ்வப்போது பல நாடுகளுக்குத் தப்பிச் செல்லும் முயற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

அந்த வகையில் கடந்த 1- ம் தேதி (ஜூன்-2016) படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு (தப்பிச்செல்ல) போய்ச்சேர நபர் ஒருவருக்கு தலா ஏஜெண்ட்டுகள் மூலமாக ரூ.1½ லட்சம் பணம் கொடுத்து அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி படகுகளும் பயணப்பட்டது.

கேரளா, ஆந்திரா, தமிழகத்தில் கன்னியாகுமரி, பழவேற்காடு ஆகிய இடங்களில் இருந்து கிளம்பிய இலங்கைத் தமிழர்கள் (அகதிகள்), முதலில் உள்ளூர் படகுகள் மூலம் கடலில் பயணம் சென்று அதன் பின்னர், நடுக்கடலில் முன்னரே செய்து வைத்திருக்கும் ஏற்பாடுகளின்படி வேறு படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு செல்வது என்பதே கடந்த 6 மாதங்களாக போடப்பட்டிருந்தத் திட்டம்.

இந்த தகவல் கியூ பிரிவு பொலிசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை போலீசார் கண்காணித்து வந்தனர்.

தமிழகச் சட்டமன்ற தேர்தலின் போது போலீசாரின் கெடுபிடியால் அகதிகள் தப்பிச்செல்லும் திட்டம் நிறைவேறவில்லை.

மே-28, 29 ஆகிய தேதிகளின் போது நடந்த முகாம் கணக்கெடுப்பில், அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கைக் குறைந்ததை கியூ பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து கியூ பிரிவு எஸ்.பி. மகேஸ்வரன், டி.எஸ்.பி.கள் ராமசுப்பிரமணியம், சரவணன், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், வேலவர் ஆகியோரைக் கொண்ட தனிப்படையினர் இலங்கை அகதிகளைக் கண்காணித்தனர்.

மாமல்லபுரத்திலுள்ள காட்டுப்பகுதியில் இருந்து 6 வேன்களில், ஜூலை 1-ம் தேதி நள்ளிரவு தேவையான துணிகள், உணவுப்பொருட்கள், ரொக்கப்பணத்துடன் புறப்பட்டவர்களை கியூ பிரிவு போலீசார், திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

6 வேன்களும் சோழவரம், பழவேற்காடு பகுதிக்கு செல்வது தெரியவந்தது. இதையடுத்து திருப்பாலைவனம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலாச்சி அம்மன் குளம் சோதனை சாவடி வழியாக வந்த 3 வேன்களை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அவர்கள் இலங்கை அகதிகள் என தெரியவந்ததால் 6 குழந்தைகள், 6 பெண்கள் உள்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர். வேன்களை ஓட்டி வந்த 3 டிரைவர்களும் கைதானார்கள். வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூர், புழல், கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாம்களில் இருந்த நோனிக்கா, தம்பா, மதுசெல்வி , சாயா, ஜெயராணி மற்றும் 3 குழந்தைகள், மேரி, சந்திரன், தர்ஷினி, மற்றும் 2 குழந்தைகளும், தயாபரன், நளினி, பிரவீனா, கண்ணன் என்கிற ரவிச்சந்திரன் மற்றும் ஒரு குழந்தை தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச்சென்று அங்கு நிரந்தர குடியுரிமை பெற வேண்டும் என்பதற்காக பழவேற்காட்டில் இருந்து நாட்டுப்படகில் தப்பிச்செல்ல முயன்றோம் என்றனர்.

இதே போல் சோழவரம் ஜனப்பன் சத்திரம் கூட்டுச்சாலை சந்திப்பில் 3 வேன்களில் வந்த வினோத்குமார், மணிகண்டன், சைமன், பார்த்திபன், மயூரான், விக்னேஸ்வரன், ஜஸ்டீப், பாலசுப்பிரமணி, சுதாகர் மற்றும் 2 சிறுவர்கள் சிக்கிக் கொண்டனர்.”

நாங்கள், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அகதிகள் முகாமில் இருந்தவர்கள், ஆஸ்திரேலியாவிற்கு பழவேற்காட்டிலிருந்து படகு மூலம் தப்பிச்செல்ல முயன்றோம்” என்கின்றனர் அவர்கள். 3 வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டு. 3 வேன் டிரைவர்களும் கைதாகினர்.

கைது செய்யப்பட்ட அகதிகள் தம்பா, சந்திரன், கண்ணன் என்கிற ரவிச்சந்திரன், தயாபரன் மற்றும் வேன் டிரைவர்கள் சங்கர், அசோக் என்கிற கணேசன், சுகுமாறன் ஆகியோர் பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட மற்றவர்கள், அவர்கள் தங்கி இருந்த அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள் என பொலிசார் தெரிவித்தனர்.

கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஜெயசுந்தர்ராஜ், பிரதீபன், புழல் அகதிகள் முகாமில் இருந்த சுசீதரன், கவுரிநாதன், சேலம் மாவட்டம் நாயக்கன்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்த ஒரு சிறுவன் ஆகிய 5 பேரும் கள்ளத்தனமாக பழவேற்காடு கடல் பகுதி வழியாக அவுஸ்திரேலியாவுக்கு

தப்பிச்செல்ல, கல்பாக்கத்தை அடுத்த பெருமாள்சேரியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்தபோது கடலோர காவல்படை போலீசார், அவர்கள் 5 பேரையும் பிடித்துச் சென்றனர்.

அவுஸ்திரேலியாவை ஏன் அகதிகள் விரும்புகிறார்கள் என்று இலங்கைத்தமிழ் அகதிகள் முகாமில் இருக்கும் சிலரிடம் பேசியபோது, “எப்படியாவது இங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்குப் போய் விட்டால் போதும்.

முதலில் அந்நாட்டில் அகதிகளாக நம்மை ஏற்க மறுத்து சிறைக்கு அனுப்பி வைப்பார்கள். சிறையில் நன்னடத்தையுடன் ஓராண்டு இருந்தால் போதும். அடுத்தாண்டு விடுதலை செய்வதோடு ‘தினக்கூலி’ வேலையில் சேர்ப்பார்கள்.

அதிலும் ஒழுங்கு முறையோடு நடந்து கொண்டால் அதற்கு சில மாதங்களிலேயே குடியுரிமை கொடுத்து அந்நாட்டு மக்களாக ஏற்றுக் கொண்டு விடுவார்கள்.

சொந்த நாட்டில் வெந்து வெந்து சாவதற்குப் பதில், கையில் இருக்கும் சேமிப்புகளை படகு ஏஜெண்டுகளுக்கு கொடுத்து விட்டுப் போவது எவ்வளவோ மேல் ஆயிற்றே.

அவுஸ்திரேலியாவைத் தொட்டு விட்டால் போதும், வாழ்க்கை நிச்சயம். எங்களில் பாதி தமிழினம் அந்த மண்ணை தொட்டு விட்டால் கூட போதும், எங்கள் இனம் காப்பாற்றப் பட்டு விடும்” என்கின்றனர், நம்பிக்கையாய்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.