இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சினை நீடிக்கக் கூடாது: இந்தியத் துணைத் தூதுவர்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதைத் தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை இந்திய மத்திய அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாணத்தக்கான இந்தியத் துணைத் தூதுவர் என்.நடராஜன் தெரிவித்தார்.

625.70.560.350.160.300.053.800.100.160.80 (13)இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை மீண்டும் பூதாகரமாக உருவெடுத்துள்ள நிலையில் இது குறித்துக் கருத்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

கடல் வளத்தை அழிக்கும் இழுவைப் படகுகளை இந்திய மீனவர்கள் பயன்படுத்துவதை தடை செய்வதுடன் மாற்றுத் தொழிலாக ஆழ்கடல் மீன்பிடியை அவர்களிடையே அறிமுகப்படுத்தி இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.

இந்த இரண்டு நாட்டு மீனவர்களும் பேசுவதன் ஊடக இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வை ஏற்படுத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கடல் வளத்தை அழிக்கும் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளை தடைசெய்யுமாறு வட பகுதி மீனவர்கள் கோரி வருகின்றனர்.

இழுவைப் படகுகளால் வடபகுதி மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை ஏற்றுக் கொண்டு இந்த இழுவைப் படகுகளை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று இந்திய மீனவர்களிடம் கோரியுள்ளதாக துணைத் தூதுவர் நடராஐன் மேலும் தெரிவித்தார்.

இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சினை என்பது பெரும்பாலும் தமிழக – வட மாகாண மீனவர்களின் பிரச்சினையாகவே உள்ளது.

சாதாரண கடற்தொழிலாளர் பிரச்சினை என்பதற்கப்பால் நாம், உறவுகளுக்கு இடையில் உள்ள பிரச்சினையாகவே இதனைக் கருதலாம்.

இரு தரப்புப் பிரச்சினைகளும் நீடிக்கக் கூடாது என்பதே எனது நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

போருக்குப் பின்னர் இப்பொழுது தான் வடக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள் தடைகள் இன்றி கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களின் வாழ்வாதாரம் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். வட மாகாணத்தில் வாழும் கடற்தொழிலாளர்களும் எங்களது உறவுகள் தான். அவர்களையும் கவனிக்க வேண்டியது எமது பொறுப்பு.

எனவே இந்திய – இலங்கை மீனவர்களும் சந்தித்துக் கலந்துரையாடி இரு தரப்புக்களையும் பாதிக்காதவாறு ஒரு முடிவுக்கு வரவேண்டும் எனவும் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் மேலும் கூறினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.