ஏழு பேர் விடுதலை விவகாரம்! ஒரு வார காலம் அவகாசம் கோரிய தமிழக அரசு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையில் வாதத்தை முன்வைக்க தமிழக அரசுக்கு ஒரு வாரம் அவகாசத்தை உச்ச நீதிமன்றம் வழங்கியது.

625.70.560.350.160.300.053.800.100.160.80 (18)ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய ஏழு பேரும் ஆயுள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இவர்களை விடுவிப்பது தொடர்பாக அனுமதி கேட்டு, அண்மையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது.

இந்நிலையில், ராஜீவ் கொலைக் கைதிகள் விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.

இந்த மனு நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பிரஃபுல்லா சி.பண்ட், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன் வரும் ஜூலை 18ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றத்தின் வழக்குகள் விசாரணைப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் அடங்கிய அமர்வு முன் தமிழக அரசு வழக்குரைஞர் எம்.யோகேஷ் கண்ணா நேற்று வெள்ளிக்கிழமை ஆஜரானார்.

அப்போது, ராஜீவ் கொலைக் கைதிகள் தொடர்புடைய மனு மீதான விசாரணைக்கு ஆஜராக வேண்டிய மூத்த வழக்குரைஞர் ராகேஷ் துவிவேதிக்கு உடல்நிலை சரியில்லை. அதனால், 18ம் தேதி பட்டியலிடப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு அவரால் ஆஜராக இயலாது.

எனவே, அரசு வழக்குரைஞர் ஆஜராகி வாதத்தை முன்வைக்க, ஒரு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி தாக்குர், இது தொடர்பாக உச்ச நீதிமன்றப் பதிவாளரிடம் உரிய கடிதத்தைக் கொடுக்கவும் என்று கூறினார்.

இதையடுத்து, விசாரணையை ஒத்திவைக்கக் கோரும் கடிதத்தை உச்ச நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தில், தமிழக அரசுத் தரப்பு வெள்ளிக்கிழமை மாலையில் அளித்தது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.