ஹிலாரி கிளிண்டன் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற புதிய வரலாற்றை படைப்பாரா?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பில் 4 முக்கிய மாகாணங்களில் ஹிலாரி கிளிண்டன் முன்னிலை பெற்றுள்ளார்.

625.70.560.350.160.300.053.800.100.160.80 (22)அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால், அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8ம் திகதி நடக்கிறது.

அங்கு ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியின் சார்பில் பெரும் கோடீஸ்வரர் டொனால்டு டிரம்பும் மோதுவது உறுதியாகி விட்டது.

இதன் காரணமாக தேர்தல் களம் சூடு பிடித்து விட்டது. இருவரும் தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் 4 முக்கிய மாகாணங்களில் கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளன.

கொலராடோ, புளோரிடா, வடக்கு கரோலினா, வெர்ஜீனியா ஆகிய 4 மாகாணங்களில் என்.பி.சி. நியூஸ், வால் ஸ்டிரீட் ஜர்னல், மாரிஸ்ட் போல் ஆகியவை இந்த கருத்துக்கணிப்புகளை நடத்தியுள்ளன.

இந்த மாகாணங்கள், ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கிற மாகாணங்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

கொலராடோ மாகாணத்தில் ஹிலாரியை 43 சதவீதம் பேரும், டிரம்பை 35 சதவீதத்தினரும் ஆதரிக்கின்றனர்.

புளோரிடாவில் ஹிலாரியை 44 சதவீதத்தினர் ஆதரிக்கின்றனர். டிரம்புக்கு 37 சதவீதத்தினரின் ஆதரவுள்ளது.

வடக்கு கரோலினாவிலும் ஹிலாரிக்கு 44 சதவீத ஆதரவும், டிரம்புக்கு 38 சதவீத ஆதரவும் இருக்கிறது.

வெர்ஜினியாவில் ஹிலாரிக்கு 44 சதவீத ஆதரவுள்ளது. டிரம்புக்கு 35 சதவீதத்தினரின் ஆதரவிருக்கிறது.

இந்த வார தொடக்கத்தில் குயினிபியாக் பல்கலைக்கழகம், புளோரிடா, பென்சில்வேனியா, ஓஹியோ, இயோவா மாகாணங்களில் நடத்திய கருத்துக்கணிப்புகளில் ஹிலாரிக்கும், டிரம்புக்கும் இடையே இழுபறி ஏற்பட்டிருப்பதாக தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி வேட்பாளருக்கான தகுதியை அடைந்து வரலாறு படைத்துள்ள ஹிலாரி, அந்த நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி என்ற புதிய வரலாறை படைப்பாரா என்பது நவம்பர் 8ம் திகதி நடக்கவுள்ள தேர்தலுக்கு பின்னர் தெரியவரும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.