சீனச் சறுக்கல்

ராஜதந்திரத் துறையில், சர்வதேச அளவில் ஒரு பெரும் சறுக்கலைச் சந்தித்திருக்கிறது சீனா. “தென் சீனக் கடல் மீது சீனாவுக்கு வரலாற்றுபூர்வமான உரிமை ஏதும் கிடையாது, தனது செயல்கள் மூலம் பிலிப்பின்ஸ் நாட்டின் இறையாண்மை உரிமையை மீறியிருக்கிறது” என்று நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நடுவர் மன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சீனா அசரவில்லை. முதலில் “இந்த வழக்கே ஒரு கேலிக்கூத்து” என்றது.

அடுத்து, “இந்தத் தீர்ப்பு தென்சீனக் கடல் பகுதியில் சீனாவுக்கு இருக்கும் உரிமையை எவ்விதத்திலும் பாதிக்காது. எந்த நேரத்திலும் தென்சீனக் கடல் பகுதியில் இருந்து கடற்படையை இயங்குவோம். தீர்ப்பு நகலை குப்பையில்தான் போட வேண்டும்” என்றது. எனினும், இந்தச் சறுக்கல் அவ்வளவு சாமானியமானது அல்ல என்கிறார்கள் ராஜதந்திர நிபுணர்கள். தென் சீனக் கடல் பிரச்சினை ஒரு கழுகுப் பார்வையாக இங்கே..

என்ன பின்னணி?

1947-ல் 11 சிறு கோடுகளைத் தன்னுடைய வரைபடத்தில் வரைந்தது சீனா. தென் சீனக் கடல் மீது தனக்குள்ள ‘உரிமை’யை இந்த 11 சிறுகோடுகள் மூலம் கோரியது சீனா. 1953-ல் டோங்கின் வளைகுடா வடக்கு வியத்நாமுக்குச் சொந்தம் என்பதை அங்கீகரிக்கும் வகையில், அவற்றில் இரு கோடுகள் நீக்கப்பட்டன. இதற்குப் பின் இந்த 9 சிறுகோடுகள் தனக்குரிய கடல் பரப்பைச் சுட்டிக்காட்டுவதாகச் சீனா சொல்ல ஆரம்பித்தது. அப்படிப் பார்த்தால் தென் சீனக் கடல் பரப்பு முழுக்க அதற்கே சொந்தம்; அந்த கோட்டைச் சுற்றியுள்ள 12 கடல் மைல் பரப்புக்குட்பட்ட தீவுகளும் நீர்ப் பகுதிகளும்கூட தம்முடையது என்றார்கள் சீனர்கள்.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானால் ஆக்கிரமிக்கப்பட்ட தீவுகள் தனக்குரியவை என்று சீனக் கடற்படையின் வரைபடப் புத்தகம் கோருகிறது. இங்கே பொருளாதாரரீதியிலும் ராணுவரீதியிலும் வியூக முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்களைக் கையில் வைத்திருக்கிறது சீனா. ஏனைய நாடுகளின் கடல் உரிமைகளை சீனத்தின் இந்த உரிமைக்கோரல் கேள்விக்குள்ளாக்குவதுதான் பிரச்சினையின் அடிநாதம்.

இந்தியா எதை, எப்படிப் பார்க்கிறது?

இந்தியாவின் கடல் வாணிபத்தில் 55%-க்கும் மேல் மலாக்கா நீரிணை வழியாகவே நடக்கிறது. தென் சீனக் கடலுக்கு இட்டுச் செல்லும் நீரிணை அது. இப்பகுதியில் கடல் வழியாகவும் வான் வழியாகவும் பயணம் போவதற்கு இந்தியாவுக்கு உரிமை உள்ளது. இந்த விவகாரத்தில் சூசகமாக கருத்து தெரிவித்திருக்கிறது இந்தியா. “சர்வதேசச் சட்டத்தின் கொள்கைகள் அடிப்படையில் சுதந்திரமான கடல் மற்றும் வான்வழி போக்குவரத்து, தடையில்லா வர்த்தகம் ஆகியவற்றுக்கு இந்தியா எப்போதும் ஆதரவு அளிக்கும்.

இரு நாடுகளுக்கு இடையே நிலவும் பிரச்சினையை அமைதி வழியில் தீர்ப்பது என்றால் மிரட்டலோ, ஆளுமையோ செலுத்தக் கூடாது. இதில் மாறுபட்டு நின்றால் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை வெகுவாக பாதிக்கும். எனவே சுதந்திரமான கடல் வழி போக்குவரத்தை உறுதி செய்ய கடல் வழி தொடர்பான ஐ.நா சட்டத்துக்கு அனைத்து நாடுகளும் மதிப்பு அளிக்க வேண்டும்” என்று சீனாவுக்கு மறைமுகமாகப் புத்தி கூறியிருக்கிறது இந்தியா. கூடவே, “தென்சீனக் கடல் பகுதியின் அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சி ஆகியவை இனி ஆபத்துக்குள்ளாகும்” என்றும் கூறியிருக்கிறது.

முக்கியத்துவம் என்ன?

தென் சீனக் கடல் பகுதி 35 லட்சம் சதுர கி.மீ. பரப்பைக் கொண்டது. உலகின் முக்கியமான கடல் வழிப் பாதைகளில் ஒன்று. சூயஸ் கால்வாயைவிட அதிக எண்ணிக்கையில் எண்ணெய்க் கப்பல்கள் இப்பகுதியைக் கடக்கின்றன. ஒவ்வோரு வருஷமும் 5 லட்சம் கோடி டாலர்கள் மதிப்புக்கும் மேற்பட்ட சரக்குகள் இக்கடல் பரப்பு வழியாகச் செல்கின்றன. உலக அளவில் நடைபெறும் கடல் வாணிப மதிப்பில், மூன்றில் ஒரு பகுதி இது. முக்கியமான விஷயம், சீனாவைப் போலவே, பிலிப்பின்ஸ், இந்தோனேசியா, மலேசியா, தைவான், வியத்நாம், புருணை போன்ற நாடுகளும் தென் சீனக் கடலுக்கு சொந்தம் கொண்டாடுகின்றன.

என்னதான் நடக்கும்?

கறார் தொனியில் நடுவர் மன்றம் தீர்ப்பளித்திருந்தாலும் அதை அமல்படுத்தும் நிர்வாக அமைப்பு ஏதும் அதனிடம் கிடையாது. கடலடிப் பாறைகளையெல்லாம் செயற்கையான தீவுகளாக மாற்றி போர் விமானங்கள் வந்திறங்க வசதியாக ஓடுபாதைகளையும் கடல்படைக் கப்பல்களுக்கான துறைமுகங்களையும் அமைத்திருக்கிறது சீனா. ஸ்பிராட்லி தீவுக்கூட்டப் பகுதியில், சீனா ஏற்படுத்தியுள்ள செயற்கையான தீவுகளை அது அகற்றப்போவதில்லை. அந்தப் பகுதியில் இருந்து அது விலகவும் போவதில்லை.

மாறாக, தன்னுடைய கடற்படையின் பலத்தையும் ரோந்துப் பணிகளையும் அதிகரிக்கும். எனினும், எதிர்கால சர்வதேசப் பேச்சுகளுக்கு இந்தத் தீர்ப்பு அடிப்படையாக இருக்கும். இதற்கு முன்னர், சர்வதேச நீதிமன்ற விசாரணையில் சீனா எப்போதுமே பங்கேற்றதில்லை என்ற வகையில் இந்த விசாரணையே முக்கியத்துவம் வாய்ந்ததுதான். தென் சீனக் கடலிலும் பசிபிக் பெருங்கடலிலும் கடல் பிரதேச உரிமை தொடர்பாக சர்ச்சைகள் எழுந்தால் இப்போதைய தீர்ப்பு ஓர் ஆதாரமாகக் கொள்ளப்படும். இவ்விஷயத்தில் சீனாவுடன் இதுவரை மோதிக்கொண்டிருந்த வியத்நாம், இந்தோனேசியா, மலேசியா, தைவான், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இத்தீர்ப்பு புதிய தெம்பை அளிக்கும்.

சர்வதேசச் சட்டம் என்ன சொல்கிறது?

கடல் சட்டம் தொடர்பாக 1984-ல் நடந்த ஐ.நா. மாநாட்டின் தீர்மான அடிப்படையில் பிலிப்பின்ஸ் புகார் செய்தது. அந்தச் சட்டத்தை சீனா, பிலிப்பின்ஸ் இரண்டுமே ஏற்றுள்ளன. எந்த நாட்டுக்கும் அதன் கரையில் இருந்து 12 கடல் மைல் தொலைவில் உள்ள பகுதி மீது இறையாண்மை உண்டு. கரையில் இருந்து 200 கடல் மைல்கள் தொலைவு வரையில் பொருளாதார நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் உரிமை உண்டு. சீனத்தின் 9 சிறு கோட்டு அடையாளப் பகுதி இந்த மண்டலங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது. வரலாற்று ரீதியிலான ஆதாரம் இருப்பதாக சீனா கூறுகிறது. வரலாற்று உரிமைகளை விதிவிலக்காகத்தான் ஏற்க முடியும் என்று சர்வதேச மாநாடு கூறியிருக்கிறது.

தீர்ப்பு சொல்வது என்ன?

சீனா முன்வைக்கும் கடல் எல்லை உரிமைகள், கடல் நீரை வெளியேற்றிவிட்டு நிலப் பகுதியாக்கி அந்த இடங்களைத் தன்னுடைய எல்லையுடன் சேர்க்கும் திட்டங்கள், தென் சீனக் கடல் முழுவதும் தனது ஆதிக்கத்துக்கு உட்பட்ட பகுதி என்று நிறுவும் முயற்சிகள் போன்றவற்றை அத்துமீறலாக்குகிறது இந்தத் தீர்ப்பு. 9 சிறு கோட்டு அடையாளங்களுக்கு உட்பட்ட கடல் பரப்பு தனக்குத்தான் சொந்தம் என்று சீனா கூறிக் கொள்வதற்கு சட்டபூர்வ ஆதாரம் ஏதுமில்லை என்று தீர்ப்பு சொல்கிறது. “சீனத்தின் செயல்கள் பிலிப்பின்ஸின் மீன்பிடி உரிமைகளை மறுப்பதாக உள்ளன. 200 கடல் மைல்கள் அளவுக்கு பரந்துபட்ட சிறப்புப் பொருளாதார மண்டலம் மீதும் சீனாவுக்கு உரிமை கிடையாது”என்று கூறிவிட்டது நடுவர் மன்றம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.