சிறிலங்காவில் ஆழமாகும் இராணுவமயமாக்கல்

பொது மக்கள் மற்றும் இராணுவத்தினரை உள்ளடக்கும் வகையில் அபிவிருத்தி நிறுவனம் ஒன்றை உருவாக்குவதற்கான அனுமதியை சிறிலங்காவின் அமைச்சரவை அண்மையில் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பை கொழும்பிலுள்ள அமைச்சரவைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக வெளியிட்டார்.

sri-lanka-army-300x200சிறிலங்கா அமைச்சரவையின் இந்த தீர்மானமானது,  சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் மீளிணக்கம் மற்றும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு எதிராக மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விட, மேலும் மோசமான நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதையே சுட்டிக்காட்டுவதாக கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் ஊடகவியலாளரான குசல் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவலானது மங்கள சமரவீரவால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்துடன் ஒப்பிடும் போது முரண்பாட்டைத் தோற்றுவிக்கின்றது. சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இம்மாத ஆரம்பத்தில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகக் கருத்தரங்கில் ‘2018 அளவில் சிறிலங்கா முற்றுமுழுதாக இராணுவமயமாக்கல் ஒழிக்கப்பட்ட ஒரு நாடாக விளங்கும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இது உண்மையில் ஒரு சிறந்ததொரு திட்டமாகக் காணப்படுகின்ற போதிலும், இராணுவத்தினரை அகற்றும் நடவடிக்கை இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. மங்கள சமரவீரவின் இக்கருத்தானது சிறிலங்கா மீது ஏற்கனவே இருந்த நம்பிக்கையீனத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

சிறிலங்காவில் இராணுவமயமாக்கல் என்பது புதிய விடயமல்ல. கடந்த சில ஆண்டுகளாக, சிறிலங்கா வாழ் மக்களின் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் அன்றாட வர்த்தக மற்றும் சமூகச் செயற்பாடுகளில் இராணுவத்தினரின் தலையீடு காணப்படுகின்றது.

போர் முடிவடைந்த போதிலும் கடந்த சில ஆண்டுகளாக இராணுவத்தினர் தொடர்ந்தும் தமிழ் மக்களின் அன்றாடச் செயற்பாடுகளில் தலையீடு செய்து வருகின்றனர். பொதுமக்கள் ஈடுபடும் சுற்றுலாத்துறை, விவசாயம் போன்ற துறைகளிலும் சிறிலங்கா இராணுவத்தினர் தமது தலையீட்டை மேற்கொள்கின்றனர். இராணுவத்தினரின் இத்தலையீடானது மக்கள் மத்தியில் பல்வேறு சமூகப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கக் காரணமாகியுள்ளது.

சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேன, இராணுவத்தினரின் பிரசன்னத்தைத் தொடர்ந்தும் அனுமதிப்பதன் மூலம் ராஜபக்சக்களை விடவும் தான் தூய சிங்கள பௌத்தன் என்பதைக் காண்பிக்க விரும்புகிறார் என ஊடகவியலாளர்  குசல் பெரேரா நம்புகிறார்.

அனைத்துலக சமூகமானது தொடர்ந்தும் சிறிலங்கா அரசாங்கத்தைப் புகழ்ந்துரைக்கும் அதேவேளையில், இராணுவமயமாக்கலும் மேலும் நெருக்கமாகக் கண்காணிக்கப்படுகிறது.

சிறிலங்காவில் தொடரும் இராணுவமயமாக்கலானது, அந்நாட்டில் கட்டியெழுப்பப்படும் நிலையான நீதிப் பொறிமுறையானது பலவீனமான அடித்தளத்திலேயே கட்டியெழுப்பப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.