விஷ ஊசி விவகாரம்! எச்சரிக்கும் சிவாஜிலிங்கம்

புனர்வாழ்வளிக்கப்பட்டு மற்றும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டிருப்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.

625.70.560.350.160.300.053.800.100.160.80 (2)இந்தக் குற்றச் சாட்டு நிரூபிக்கப்படுமெனில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் இனப் படுகொலைக் குற்றங்களில் பாரதூரமான குற்றமாகச் சேர்க்கப்படும்.

வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் இதனை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

 

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இவ்வாறான நாசவேலை திட்டமிடப்பட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்டிருந்தால், போராளிகளை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை முனனெடுக்கவுள்ளோம்.

பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் முதலமைச்சர் அலுவலகத்தில் தங்களுடைய பெயர் விபரங்களைப் பதிவு செய்ய வேண்டுமென்ற அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

அதனைத் தொடர்ந்து தமது விபரங்களை அனைத்து முன்னாள் போராளிகளும் தவறாது பதிவு செய்ய முன்வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் வெளிநாட்டு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டுமெனில் அதற்குப் பெருமளவு பணம் தேவைப்படும்.

இதற்கான பணத்தைத் தொண்டர் அமைப்புக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்புக்களிடம் இருந்து பெற்றாவது அவசியம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதனை விடுத்து ஒவ்வொருவரும் தங்களின் சொந்தச் செலவில் மருத்துவப் பரிசோதனை செய்கின்ற நிலை உருவானால் பாதிக்கப்பட்டவர்களுடைய ஒட்டு மொத்த தரவுகளையும் நாம் திரட்ட முடியாத நிலை ஏற்படும்.

எனவே, விசேட மருத்துவப் பரிசோதனைகள் அவசியம் தேவை எனக் கருதும் நிலை உருவானால் அவர்களுடைய இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, உரிய மருத்துவப் பரிசோதனைகளுக்காக அனுப்பப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.