சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு! – பார்வையாளர்களுக்குத் தடை

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும், பார்வையாளர்களுக்கு வருகின்ற 20-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது.

4வருகின்ற 15-ம் தேதி, நாடு முழுவதும் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக விமான நிலையம் உள்பட முக்கியமான பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

மேலும், விமான நிலைய போலீசார், மத்திய தொழிற்படையினர், பாதுகாப்பு படையினர் கொண்ட கூட்டு பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விமான நிலையத்தின் உள்பகுதிகளை மத்திய தொழிற்படையினர் கண்காணிப்பு கேமரா மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

விமான நிலையத்திற்கு வரும் பயணிகளிடம், நுழைவுப் பகுதியில் பலத்த சோதனை நடத்தப்பட்ட பிறகே, அவர்கள் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், விமான நிலைய நுழைவு வாயில் பகுதியில், அனைத்து வாகனங்களிலும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.

விமான நிலைய உள்பகுதிகளிலும், வெளிப் பகுதிகளிலும் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நேற்று மாலை 3 மணி முதல் பார்வையாளர்கள் யாரும் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பு நலன் கருதி விமான நிலையத்தில், பார்வையாளர்களுக்கு வருகின்ற 20-ம் தேதி நள்ளிரவு வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.