சரணடைய வந்த விடுதலைப் புலிகளைக் கொன்றிருப்பதாக சுட்டிக்காட்டினார் நவநீதம்பிள்ளை

navaneethampillaiஇலங்கையின் இறுதிக்கட்ட மோதல்களின் போது பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து சர்வதேச விசாரணைகள் அவசியம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

“பொதுமக்கள் இரண்டு தரப்பினராலும் அடிப்படை உரிமைகளுக்கு அமைய நடத்தப்படவில்லையென்பதற்கான சரியான காரணங்கள் இருக்கின்றன என்று நம்புகிறோம்” என இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கூட்டப்பட்டிருக்கும் விசேட அமர்வில் அவர் கூறினார்.

அங்கு நடந்த மோதல்களில் புரியப்பட்ட வன்முறைகளின் தன்மை மற்றும் சர்வதேச மனித நேயச் சட்டங்கள் மீறப்பட்டனவா என்பது தொடர்பாக சர்வதேச ரீதியிலும் பக்கச்சார்பற்றமுறையிலும்; விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென நவநீதம்பிள்ளை கோரிக்கைவிடுத்தார்.

போர் வலயங்களிலிருந்து பொதுமக்களை வெளியேறவிடாது அவர்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டை அவர் மீண்டும் வலியுறுத்திக் கூறியிருந்தார்.

அதேநேரம், பொதுமக்கள் அரசாங்கம் கனரக ஷெல் தாக்குதல்களை நடத்தியதுடன், சரணடைய வந்த விடுதலைப் புலிகளைக் கொன்றிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“இந்தத் தகவல்களை உறுதிப்படுத்த அனைத்துத் தரப்பினரிடமும் நேரடியான வாக்குமூலங்கள் பெறப்படுவது அவசியம்” என அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் விசேட அமர்வொன்றைக் கூட்டி அதில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கையொன்றை சமர்ப்பிக்க சில நாடுகள் முயற்சியெடுத்தன. இதற்கமைய நேற்று செவ்வாய்க்கிழமை விசேட அமர்வு நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே நவநீதம்பிள்ளை மேற்கண்டவாறு கூறினார்.

இதேவேளை, இலங்கைக்கு ஆதரவு வழங்கும் விடயத்தில் பல நாடுகள் ஸ்திரமான தீர்மானமொன்றை எடுக்கவில்லையெனத் தெரியவருகிறது. இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக முன்னர் கூறிய நாடுகள் சில தற்பொழுது அதற்கு மறுப்புத் தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.