சுதந்திரம் ஜனநாயகம் மாற்றுக் கருத்து….சில கேள்விகள்:

vanni_20090218006ரணகளமாய் மாறியுள்ள வன்னிப்பகுதியிலிருந்து வவுனியாவை நோக்கி மக்கள் சிறிது சிறிதாக இடம்பெயர ஆரம்பித்து விட்டனர். கிளஸ்ரர் குண்டுகளிலிருந்து வான் தாக்குதல்கள் எறிகணைத் தாக்குதல்கள் என பலவிதமான கொடூரத் தாக்குதல்களில் இன்றுடன் 800க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு 3000 வரையான மக்கள் காயமடைந்து யுத்தத்தின் அகோரத்தை தாங்க முடியாத மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி நகருகின்றார்கள்.

சர்வதேச மன்னிப்புச்சபை சர்வதேச மனித உரிமைகள் ஸ்தாபனங்கள் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச நாடுகள் என பல தரப்பினரும் மக்களை மனிதக் கேடயங்களாகப் பாவிக்காது புலிகள் அவர்களை விடுவிக்க வேண்டும் எனக் கோருகின்றனர். இருப்பினும் விடுதலைப் புலிகள் அவர்களை சுதந்திரமாக வெளியேறுவதற்கு அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் பலமாக எழுப்பப்பட்டுள்ளன.

யுத்த பிரதேசத்திலிருந்து அகப்பட்டுள்ள மக்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் வெளியேறுவதாக இருந்தால் அவர்களைத் தடுத்து நிறுத்துவது மனிதாபிமான அல்லது மனித உரிமைகள் தொடர்பான அல்லது ஜனநாயக விழுமியங்கள் தொடர்பான கடப்பாடுகளை விடுதலைப்புலிகள் மீறுகின்றார்கள் என்பதனை மறுக்க முடியாது. அது குறித்து விடுதலைப்புலிகள் விமர்சிக்கப்பட வேண்டியவர்களே.

ஆனால் இங்கு ஊடக தர்மம் பற்றி மக்கள் நலன் பற்றி நடுநிலைமை பற்றி சகட்டு மேனிக்கு கத்தித் திரிகின்ற நண்பர்களும் சமூக நல விரும்பிகளாக தம்பட்டம் அடிப்பவர்களும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிரவேசித்துள்ள மக்களின் வாழும் உரிமை பற்றியோ அவர்களின் வாழ்வாதார பிரச்சினை பற்றியோ அவர்களுக்கு இன்றியமையாத ஆகக் குறைந்தளவான அடிப்படை உரிமைகள் பற்றியோ அவர்கள் படும் அல்லல்கள் பற்றியோ பேசாது மௌனித்திருப்பது வேதனைக்குரியது.

இன்று வரை வன்னிப் பகுதிகளிலிருந்து 13000 பேர் வரை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்திருப்பதாக வவுனியா அரச அதிபர் வழங்கியுள்ள புள்ளிவிபரத் தகவலின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினத்திற்கு முன்பாக கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் பிரவேசித்த 8 ஆயிரத்து 300 பேர் வரை மெனிக்பாம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள விசேட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவற்றை இடைத்தங்கல் முகாம்கள் எனக் கூறுவதை விட திறந்த வெளித் தடுப்பு முகாம்கள் என்றே கூறலாம் என இங்கு வாழும் சிலர் கூறுகின்றனர். இன்னும் சிலர் கூறுகிறார்கள் வன்னியில் பரந்த பிரதேச சிறைச்சாலையில் வாழ்ந்த தாம் இப்பொழுது சிறியளவில் சிறைச்சாலைகளில் வாழ்வதாக கூறுகின்றார்கள். வேறு சிலர் கூறுகின்றார்கள் அடுப்பிலிருந்து சட்டிக்குள் விழுந்த கதையாகிப் போனதென.

ஆம் வன்னியிலே யுத்தத்தின் அகோரத்தில் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து இழப்பதற்கு எதுவுமற்று அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் தஞ்சமடைந்த இந்த மக்கள் மிகவும் மோசமான முறையில் சமூகத்திலிருந்து புறம் ஒதுக்கப்பட்ட நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களது சுதந்திர நடமாட்டம் முற்றுமுழுதாக தடைப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியாவில் இவர்களில் பலரின் மிக நெருங்கிய உறவினர்கள் இருந்தும் அவர்களுடன் இணைந்து வாழ்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள்.

வவுனியாவை சொந்த இருப்பிடமாகக் கொண்டு வன்னியில் தம் அரச தொழில் நிமித்தம் சென்று யுத்தத்தில் அகப்பட்டுத் திரும்ப முடியாது இருந்து இப்பொழுது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ள அரச உத்தியோகத்தர்கள் சிலர் தமது குடும்பத்தினருடன் இணைய முடியாது தடுக்கப்பட்டுள்ளனர். இவர்களைச் சந்திப்பதற்கு குடும்பத்தவர் பல அனுமதி முறைகளைப் பெற்று தூரே நின்று கத்திப் பேசுவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவை ஒருபுறமாக இருக்க முகாமில் இருப்பவர்கள் தமது உணவை தாமே சமைத்து உண்ண முடியாது தடுக்கப்பட்டுள்ளார்கள். அரச செயலகத்தின் ஏற்பாட்டில் சமைத்து வழங்கப்படும் உணவுப் பொதிகளையே உண்ண வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். சிலர் முற்பகல் 11 மணிக்கு உணவுப் பொதிகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். இன்னும் பலர் மாலை 5மணிக்கு உணவுப் பொதிகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். இவ்வாறு பெறப்படும் உணவுப் பொதிகள் புளித்த நிலையில் பழுதடைந்த நிலையில் வருவதாக பலரும் கூறுகின்றனர்.

இவை மட்டுமல்ல அங்கு வாழும் மக்களின் பிரச்சனை, இயற்கைக் கடமைகளைக் கூட குறித்த நேரங்களில் செய்ய முடியாதவர்களாக தவிக்கின்றனர். போதிய மலசலகூட வசதிகள் இல்லை. சூரிய உதயத்திற்கு முன் அல்லது சூரிய அஸ்தமனத்தின் பின் இருள்சூழ் நேரங்களிலேயே பெண்கள் தமது இயற்கைக்கடமைகளை கழிப்பதற்கு செல்கின்றார்கள். அதுவும் திறந்த வெளிகளிலேதான் அவற்றையும் செய்ய வேண்டியிருக்கின்றது.

பரந்த வயல்வெளிப் பிரதேசங்களில் அமைக்கப்பட்ட கூடாரங்களின் கீழ் இந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வவுனியாவின் அகோர வெயிலில் பரந்த வெளிகளில் அமைக்கப்பட்ட இந்தக் கூடாரங்களில் எப்படி அந்த மக்கள் பகல் வேளையைக் கழிக்க முடியும்.

மாணவர்களுக்கு முகாம்களிலேயே கற்பிக்கப் போகிறார்களாம். வன்னியில் இருந்து வந்த ஆசிரியர்களே இவர்களுக்குக் கற்பிக்கவுமுள்ளார்களாம். உயர்தர வகுப்பு மாணவர்களை விசேட பஸ் வண்டியொன்று ஏற்றிச் சென்று பாடசாலையில் இறக்கி மீண்டும் அவர்களை ஏற்றிச் சென்று முகாம்களில் இறக்கி விடுமாம்.

என்ன கொடுமை. புலிகளின் பிடியில் இருந்து வன்னியில் இருந்து சுதந்திர தேசத்தை நோக்கி வருமாறு அழைத்து விட்டு அவர்களை ஒரு அகதிச் சமூகமாக சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாக புலிப்பிரதேச மக்களாக நடத்துவதாக இருந்தால் அதுவா ஜனநாயகம். அதுவா வன்னி மக்களின் சுபீட்சம். இதுவா வன்னி மக்களுக்கான விடுதலை.

ஹிட்லரின் காலத்தில் யூதர்களைத் தடுத்துவைத்த இதே வகையான முகாம்கள் பற்றி, பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஏற்படுத்திய இதே மாதிரியான முகாம்கள் பற்றி பேசும் போது எழுதும் போது அவை தடுப்பு முகாம்கள் என்றும் மக்களின் சுதந்திரமான நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எனவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த நன்பர்களே – வவுனியாவில் மெனிக் பாம் முகாம் மன்னாரில் களிமோட்டை முகாம்கள் மட்டும் எப்படி மக்களின் விடுதலைக்கான அல்லது அவர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்கான முகாம்கள் என வர்னிக்க முடிகிறது?

எம் கண்முன்னே தெரியும் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஏற்படுத்திய முகாம்களிலும் சுற்றிவர படையினரின் பாதுகாப்பு. மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க விசேட ஏற்பாடுகள், தனியான அடையாள அட்டைகள் என யாவுமே தனியானவையாக்கப்பட்டுள்ளன. வவுனியாவிலும் மன்னாரிலும் இவைதானே நடைபெறுகின்றது. மக்களின் விடிவுபற்றி வானளாவ கத்தும் நன்பர்களே எப்படி உங்களால் முடிகிறது இவற்றை நியாயப்படுத்த?

கூறுங்கள் நண்பர்களே…. புளித்த பழுதடைந்த சாப்பாட்டுப் பொதியை படம் படித்துக் காட்டினால்தான் நம்புவீர்களா? அல்லது அந்தப் பொதியொன்றை நீங்கள் ருசித்துப் பார்த்தால்தான் ஏற்றுக் கொள்வீர்களா? சொல்லுங்கள் நண்பர்களே… வன்னிப் பெண்கள் இருள் கூ10ழ் நேரத்தில் வானம் பார்த்து இயற்கைக் கடமைகளை கழிப்பதனை எப்படி உங்களுக்கு ஆதாரம் காட்ட முடியும். அல்லது தொழிலுக்காக வன்னிக்குச் சென்று மீண்டும் தனது குடும்பத்துடன் சேர்வதற்கும் முடியாது தவிக்கின்ற சோகத்தை எப்படி நண்பர்களே உங்களுக்கு ஆதாரம் காட்ட முடியும்.இல்லவே இல்லை. மூடப்பட்ட தேசத்துள் பேனாக்கள் பிடுங்கி எறியப்பட்ட தேசத்துள் வாய் திறந்தால் தேசத் துரோகம் எனும் தேசத்துள் எதனை எப்படி ஆதாரம் காட்ட முடியும்.

அரசாங்கத்தினால் பாதுகாப்புப் படையினரால் அவர்களின் முழுமையான கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்களினால் வெளியிடப்படும் ஒருபக்க செய்திகளை தகவல்களை அப்படியே ஏற்றுக் கொள்ளும் உங்களில் சிலரால் பல்வேறு இடர்களின் மத்தியில் கிடைக்கப்பெறும் மூலங்களின் இரகசியங்களைப் பேணி வெளியிடப்படும் தகவல்களை மட்டும் எப்படி உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாதிருகின்றது.

தூக்குத் தண்டனைக் கைதிக்கும் தன்பக்க நியாயத்தைக் கூறுவதற்கு உரிமை உண்டு என்பதே ஜனநாயகம். அன்பர்களே நீங்கள் கூறுகின்ற ஜனநாயகமும் அல்லது நீங்கள் கூறுகின்ற மாற்றுக் கருத்துக்களும் அதனைத்தானே வலியுறுத்துகின்றது. அப்படியாயின் விடுதலைப்புலிகள் தரப்பில் முக்கிய தளபதிகள் உள்ளிட்ட 100 பேர் கொல்லப்பட்டார்கள் அல்லது 27 பேர் கொல்லப்பட்டார்கள் 63 பேர் காயமடைந்தார்கள் அவர்களது விமானம் ஒன்று அழிக்கப்பட்டது அவர்களின் முக்கிய தளபதிகள் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடி விட்டார்கள.; இவற்றை புலிகளின் தொலைத் தொடர்பு உரையாடல்களை வழிமறித்துக் கேட்டதன் ஊடாக படையினர் அதனை உறுதிப் படுத்திக் கொண்டார்கள் என்ற செய்திகளை அப்படியே உங்களால் ஏற்றுக் கொள்ள முடியும் என்றால் அல்லது அவர்கள் கூறும் ஆதாரங்களை மூலங்களாக உங்களால் ஏற்றுக் கொள்ள முடியும் என்றால் எப்படி நண்பர்களே ஏனைய செய்திகள் தொடர்பாக உங்களால் விமர்சனங்களை எழுப்ப முடியும். இங்குதான் உங்களின் மாற்றுக் கருத்துக்களும் ஊடக தருமங்களும் ஜனநாயக விழுமியங்களும் வெட்கித் தலைகுனிகின்றன.

எனவேதான் நாங்கள் கூறுகின்றோம் எம்மால் வெளியிடப்படும் செய்திகள் இயன்றவரை உண்மைத் தன்மைகளைப் பேணி அவற்றைப் பொறுப்பேற்கும் தார்மீகத்துடன் வெளியிடப்படுகின்றன. அரசாங்கதரப்பு, ஜே.வீ.பீ, ஹெலஉறுமய, ரீ.எம்.வீ.பீ என எந்த வேறுபாடுகளும் இன்றி அவர்களின் கருத்துக்களையும் செய்திகளையும் பிரசுரிக்கிறோம். எங்கோ பதிவு செய்து எங்கோ இருந்து அனாமதேயங்களாக நாங்கள் உங்கள் முன் வரவில்லை. மீண்டும் கூறுகின்றோம். எமது தளத்தில் வெளியிடப்படும் கட்டுரைகளுக்கு ஆசிரியர்களே பொறுப்பாக இருந்தாலும் அவற்றைப் பிரசுரிப்பதற்கான தார்மீகப் பொறுப்பையும் நாமே ஏற்றுக் கொள்கிறோம்.

அது போலவே வாசகர்களாகிய உங்களுகளுக்கும் உங்கள் கருத்துக்களை கூறுவதற்கான முழுமையான சுதந்திரந்தை வழங்கியுள்ளளோம். ஆனால் அந்தக் கருத்துக்கள் தனிப்பட்ட தாக்குதல்களாகவோ சேறடிப்புகளாகவோ தரம் குறைந்த வார்த்தைப் பிரயோகங்களாகவோ அல்லது வேறு ஊடகங்கள் நிறுவனங்கள் முதலானவை தொடர்பான தாக்குதலாகவோ வருகின்ற பொழுது அவை பிரசுரிப்பதற்கான தகுதியை இழந்து விடுகின்றன. அந்த வகையில் ஆரோக்கியமான விமர்சனங்களோடு மாற்றத்தை நோக்கிய பாதையில் பயணிக்கும் எங்களுடன் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.