‘வெள்ளை மாளிகை’ முன்பாக வட அமெரிக்க தமிழர்கள் நாளை பிரமாண்டமான பேரணி: எல்லோரையும் அணிதிரள வேண்டுகோள்!

whitehouseஇலங்கையில் போரை நிறுத்தி, வன்னி மக்களைக் காப்பாற்றுமாறு அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவைக் கோரும் பிரமாண்டமான தமிழர் பேரணி அமெரிக்கத் தலைநகர் வோஷிங்டன் டி.சி.யில் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. காலத்தின் தேவையும், கட்டாயமும் கருதி இந்தப் பேரணியில் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு வட-அமெரிக்கத் தமிழர்கள் எல்லோரையும் பேரணி ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றார்கள்.

“அரச தலைவர் பராக் ஒபாமாவையும் அமெரிக்க வெளியுறவு ராஜாங்கச் செயலர் ஹிலாறி கிளிண்டனையும் நாம் வேண்டிக் கேட்கவுள்ளோம்” என இந்த பேரணி ஏற்பாட்டின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பராக் ஒபாமா, அமெரிக்காவின் அரச தலைவராக மட்டுமன்றி, இந்த உலகத்தின் தலைவராகவும் நீதி மறுக்கப்பட்ட மக்களின் ஒரே நம்பிக்கை ஒளியாகவும் இன்று விளங்குகின்றார். எனவே எமக்கான நீதி கிடைக்க வழி செய்யுமாறு கேட்டு நாங்களும் அவரிடம் செல்கின்றோம்

அதுமட்டுமல்லாது –

அமெரிக்காவின் முன்னைய நிர்வாகத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற கொள்கை தான், அரசியல் அபிலாஷைகளுக்கான நியாயமான எங்கள் விடுதலைப் போரை, ‘பயங்கரவாதம்’ எனத் தவறாகக் கொச்சைப்படுத்தித் தமிழர்களை இன்றும் சீரழிக்கின்றது.

பழைய அமெரிக்க நிர்வாகத்தின் அந்தக் கொள்கையை அடிப்படையாக வைத்துத்தான் இலங்கை அரசாங்கம் போரை நடத்தி வருகின்றது. அந்த வகையில் தமிழர்கள் மீது பூசப்பட்டுள்ள இந்த ‘பயங்கரவாத’ச் சாயத்தை அகற்றி – எமக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டிய ஒரு தார்மீகக் கடமையும் அதிபர் ஒபாமாவுக்கு உண்டு. அதனால்தான் நாம் அவரை நாடிச் செல்கின்றோம்” எனக் குறிப்பிட்டார்.

அமெரிக்காவிலும், கனடாவிலும் – எல்லா மாநிலங்களிலும் உள்ள தமிழ் செயற்பாட்டாளர்கள் இந்த பேரணிக்கான பயண ஏற்பாடுகளை மேற்கொள்கின்றனர் எனவும், அதனால், பயண உதவி தேவையான தமிழர்கள் அந்தந்த மாநிலங்களில் உள்ள செயற்பாட்டாளர்களை நேரடியாகவோ, அல்லது info@tamilsagainstgenocide.org என்ற மின்னஞ்சல் முகவரியிலோ, பேரணி ஏற்பாட்டின் மையச் செயலகத்திலோ தொடர்பு கொள்ளுமாறும் அவர் வேண்டிக்கொண்டார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.