அனைத்துலக போர்க்குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

neder_20090219006நெதர்லாந்தில் உள்ள அனைத்துலக போர்க் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக நேற்று புதன்கிழமை (18.02.09) தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

தமிழினப் படுகொலைகளை புரியும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து தண்டிக்குமாறு கோரி பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

தமிழின அழிப்பை மேற்கொள்ளும் மகிந்த, கோத்தபாய, சரத் பொன்சேகா ஆகியோரின் உருவப்பொம்மைகளும் நீதிமன்றத்தின் முன்பு தூக்கில் தொங்கவிடப்பட்டு இறுதியில் மக்கள் காலால் மிதித்தும் செருப்பால் அடித்தும் தங்கள் கோபத்தை தீர்த்துக்கொண்டனர்.

மேலும், இங்கு, தமிழினம் பலமான நிலையில் உள்ளபோது சமாதானம் பேசிய இந்த அனைத்துலகமானது, இன்று போர்க் குற்றங்களைப் புரிந்து தமிழின அழிப்பை மேற்கொள்ளும் சிங்களப் பேரினவாத அரசை தடுக்க இயலாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதை பொறுக்க முடியாமல், இந்த உலகிடம் நீதி கேட்டு தங்கள் உயிரை தீக்குளித்து அர்ப்பணித்த ‘வீரத் தமிழ் மகன்’ முத்துக்குமார், முருகதாசன்  மற்றும் குண்டுவீச்சில் கொல்லப்பட்ட  ‘நாட்டுப்பற்றாளர்’ சத்தியமூர்த்தி ஆகியோர்களினது உருவப்படங்களிற்கும் ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டும் மலர்வணக்கம் செலுத்தியும் அங்கு திரண்டிருந்த மக்கள் தமது வணக்கங்களை செலுத்திக்கொண்டனர்.

இதில் வழங்கப்பட்ட மனுவில்

– அனைத்துலகத்தால் போர்க் குற்றங்கள் எனத் தெரிவிக்கப்படுகின்ற மருத்துவமனைகளின் மீது குண்டுகளை வீசுவது

– தடை செய்யப்பட்ட கிளஸ்ரர், பொஸ்பரஸ் குண்டுகளை பாவிப்பது

– அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினை வெளியேற்றியது

போன்ற போர்க் குற்றங்களைப் புரிந்து தமிழின அழிப்பை மகிந்த அரசானது தொடர்ந்து புரிவதாக ஆதாரங்களுடன் இந்த நீதிமன்றத்தின் உள்ளே வழக்கைத் தொடுக்கும் அதிகாரியிடம் இந்த மனுவும் ஒப்படைக்கப்பட்டு மகிந்த அரசு மீது வழக்கைத் தொடுத்து அவர்களை இங்கு அழைத்து விசாரிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

காணாமல் போதலுக்கு எதிரான அமைப்பின் நெதர்லாந்து கிளை ஒழுங்கு செய்த இந்த ஆர்ப்பாட்டமானது பிற்பகல் 1:00 மணியில் இருந்து 3:00 மணி வரை நடத்தப்பட்டு நிறைவு செய்யப்பட்டது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.