உலக நாடுகளும் உற்று கவனித்துக்கொண்டு இருப்பது சார்லஸ் என்கிற 23 வயது இளம் புலியைத்தான்!”

2007032712010101”புலிகளுக்குக் கூடுதல் நெருக்கடிகள் ஏற்பட்டால், சிங்கள ராணுவத்துக்குப் பேயடி கொடுக்க நினைக்கும் தன் மகன் சார்லஸ் ஆண்டனிக்கு பிரபாகரன் அனுமதி வழங்குவார். அதனால் இன்றைக்கு சிங்கள ராணுவம் மட்டுமல்லாது உலக நாடுகளும் உற்று கவனித்துக்கொண்டு இருப்பது சார்லஸ் என்கிற 23 வயது இளம் புலியைத்தான்!” -கடந்த 28.01.09 தேதியிட்ட ஜூ.வி-யில் ‘பதுங்குவதா, பாய்வதா… மகனோடு புலித்தலைவரின் பாசப் போராட்டம்!’ என்ற தலைப்பில் நாம் வெளியிட்டிருந்த கவர் ஸ்டோரியின் இறுதி வரிகள் இவை.

இன்றைக்கு அனைத்து மீடியாக்களிலும் சார்லஸ் ஆண்டனி பற்றிய செய்திகள் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றன. தற்போது புலிகளின் படைகளுக்கு சார்லஸ் ஆண்டனிதான் தலைமை தாங்கி நடத்துகிறார் என்றும், சிங்கள ராணுவத்தை வீழ்த்த பல வியூகங்களை அவர் வகுத்திருக்கிறார் என்றும் அடுத்தடுத்து செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

தற்போது பதிலடித் தாக்குதலில் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கும் புலிகள் தரப்பின் கருத்தறிய கொழும்புவில் வசிக்கும் விவரமறிந்தவர்களிடம் பேசினோம். ”சார்லஸ் ஆண்டனி, புலிகளின் தொழில்நுட்பக் குழுவின் தலைவர். சென்னையில் பயிற்சி பெற்ற கர்னல் சங்கர்தான் ஆரம்பத்தில் விமானப் படைக்குத் தலைவராக இருந்தார். 2001-ல் அவர் இறந்துபோனார்.

அந்த இடத்தில் சார்லஸ் நியமிக்கப்பட்டார். பிரபாகரனை ஒழித்துக்கட்டிவிட்டால் புலிகள் அமைப்பே அவ்வளவுதான் என்று நினைத்த சிங்கள ராணுவம், விமானத் தாக்குதல்களை வன்னிப் பகுதியில் தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தது. அதி நவீன ரேடார்கள் மூலமாகவும், போன் பேச்சுகளை ஒட்டுக்கேட்பதன் மூலமாகவும் பிரபாகரனின் இருப்பிடத்தை அறிய சிங்கள அதிகாரிகள் பல்முனை முயற்சிகளையும் எடுத்தார்கள். ஆனால், அவை கொஞ்சமும் பலனளிக்கவில்லை.

அதனால் நீர்மூழ்கிக் கப்பல் மூலமாக பிரபாகரன் தலைமறைவாகி விட்டதாகவும், அவர் பதுங்கியிருந்த இடங்களை வளைத்துவிட்டதாகவும் கற்பனைக் கதைகளைக் கட்டிவிட்டார்கள். இதன்மூலமாக பிரபாகரனைப் பற்றிய தவறான அபிப்பிராயங்களை உருவாக்கி, தமிழ் மக்களின் நம்பிக்கையைக் குலைக்கவேண்டும் என்பதுதான் சிங்கள அதிகாரிகளின் திட்டம். இந்நிலையில், இப்போது பிரபாகரனின் மகனான சார்லஸ் ஆண்டனியைப் பற்றி சிலதகவல் களைப் பரப்பத் தொடங்கியிருக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாகவே போரில் சார்லஸ் களமாடிக் கொண்டிருக்கிறார். கிளிநொச்சி புலிகளின் வசமிருந்தபோது விமானங்கள் மூலமாக சிங்கள ராணுவத்துக்குப் பேரடி கொடுக்கும் திட்டம் சார்லஸ் வசமிருந்தது. ஆனால், சிங்கள மக்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவே அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. கரும்புலிகள் படைதான் சிங்கள ராணுவத்துக்கு எப்போதுமே பெரும் பயத்தைக் கொடுக்கும் படையணி.

இப்போது அவர்களுக்கு புலிகளின் விமானப்படையும் சிம்ம சொப்பனமாக கிலியூட்டிக் கொண்டிருக்கிறது. அதனால் சிங்கள அரசின் மொத்தக் குறியும் இப்போது சார்லஸை நோக்கித்தான். சிங்கள ராணுவத்தின் டாங்கிகளை துவம்சம் செய்து தாக்குதல் நடத்திய நாளில், புலிகளின் விமானப்படையும் வானில் சிறுவலம் வந்தது.

மொத்த ஓடுதளங்களையும் கைப்பற்றிவிட்டதாக சிங்கள ராணுவம் கொக்கரித்துக்கொண்டிருந்த நிலையில் புலிகளின் விமானம் எப்படிப் பறந்தது என்று சிங்கள சாதுர்யங்களுக்குப் புலப்படவில்லை. இந்நிலையில், சங்கர், தமிழ் அலை என்கிற இரு கரும்புலிகள் தங்களிடம் சரணடைந்ததாகவும், அவர்கள் சார்லஸின் அபாயத் திட்டங்கள் குறித்துச் சொன்னதாகவும் சிங்கள ராணுவம் தங்கள் தரப்பு பத்திரிகைகள் மூலமாக செய்தி பரப்பத் தொடங்கியது.

தங்களுக்கு எதிராகக் குலை நடுங்கவைக்கும் திட்டங்களை சார்லஸ் தீட்டி இருப்பதாகவும், அதற்காக அப்பாவி மக்களை அவர் மூளைச்சலவை செய்துகொண்டிருப்பதாகவும் சிங்கள ராணுவம் அவதூறு பரப்பிக் கொண்டிருக்கிறது. சார்லஸ் பற்றிய செய்திகளைப் பரப்புவதன் பின்னணியில் சிங்கள ராணுவத்தின் பெரிய அளவிலான சதிகள் இருக்கின்றன!” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

புலிகள் தரப்பில் நெருக்கமானவர்களிடம் இதுகுறித்துக் கேட்டோம். ”வன்னியில் வாழும் மக்கள், சிங்கள அரசை நம்பி அவர்கள் வசம் போக விரும்பவில்லை. அதனால் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது சிங்கள ராணுவம். பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட புதுமாத்தளன், அம்பலவன்பொக்கனை, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளிலேயே அடுத்தடுத்து பீரங்கி தாக்குதல்களை நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டவர்களை ராணுவம் கொன்று அழித்திருக்கிறது.

ராணுவ வற்புறுத்தலால் வன்னியிலிருந்து வவுனியாவுக்குப் போன கர்ப்பிணிகள் கொடுந்துயரத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். கொடூர ஆயுதங்களின் மூலமாக மக்களைக் கொத்துக் கொத்தாக அழிக்கத் திட்டமிட்டிருக்கும் சிங்கள அரசு, மீடியாக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவே சார்லஸ் பற்றிய தவறான தகவல்களைப் பரப்பிக்கொண்டிருக்கிறது.

மக்களுக்கு வேண்டிய விழிப்பையும் ஆறுதலையும் ஏற்படுத்த புலிகள் தரப்பிலிருக்கும் தலைவர்கள் மக்கள்வாழ் பகுதிகளுக்கே சென்று பேசுவார்கள். பாலகுமார், கவிஞர் ரத்தினதுரை ஆகியோர் வன்னிவாழ் தமிழ் மக்களிடம் ஆறுதலையும் அன்பையும் பகரும் பணியைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான் பாலகுமாருக்கு ராணுவத் தாக்குதலில் காயம் ஏற்பட்டது.

இப்போது சார்லஸ் ஆண்டனியே மக்களைச் சந்தித்துப் பேசுகிறார். சிங்கள ராணுவத்தின் ஆயுத வீச்சுக்கு ஆளாகாதபடி தப்பிக்கும் வழிகளையும், அவர்களுக்கு வேண்டிய ஆறுதலையும் தைரியத்தையும் சார்லஸ்தான் எடுத்துரைக்கிறார். அவருடைய வார்த்தைகள் ஈழ மக்களை வீறுகொள்ள வைத்திருக்கின்றன.

இதையெல்லாம் முறியடிக்கும் விதமாகவும், சார்லஸ§க்கு முடிவுகட்டும் விதமாகவும் தொடர்ந்து பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் மீதே ராணுவம் தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது. பிரபாகரனுக்கு அடுத்தபடியாக சார்லஸ் சகல பணிகளிலும் உச்சம் காட்டுவதை சிங்கள அரசால் ஜீரணித்துக்கொள்ள இயலவில்லை. மொத்த படையணிகளையும் ஒருசேரத் திரட்டி தாக்குதல் நடத்தினால் முல்லைத் தீவு மாவட்டத்தையே கணநேரத்தில் மீட்டெடுக்க புலிகளால் முடியும். இதற்கான திட்டங்களை சார்லஸ்தான் வகுக்கிறார் என்பதுதான் சிங்கள ராணுவத்தின் எண்ணம். அதோடு, புலிகளின் விமானங்கள் மேற்கொண்டு எவ்விதத் தாக்குதலும் நடத்தாதது ஏன் என்றும் அவர்கள் குழம்பிக் கிடக்கிறார்கள். ராணுவத்திடம் வெப்பம், சத்தம், வேகம் ஆகியவற்றை கணித்து இயங்கும் விமான எதிர்ப்பு பீரங்கிகள் கைவசமிருக்கின்றன.

புலிகள் பயன்படுத்தும் ‘ஸ்லின் -143′ ரக செக் நாட்டு விமானங்களை இனம் கண்டு அழிக்கும் ஃபார்முலாக்களோடு விமான எதிர்ப்பு பீரங்கிகளை சிங்கள ராணுவம் உருவாக்கி வைத்திருக்கிறது. ஆனால், அந்த ஃபார்முலாக்களுக்கு நேரெதிரான திட்டமிடலோடு புலிகளின் விமானங்கள் மாற்றி உருவாக்கப்பட்டு வருகின்றன. சார்லஸின் இத்தகைய யுக்திகள்தான் சிங்கள ராணுவத்தைப் பதறவைத்துக் கொண்டிருக்கின்றன. விமானப்படை தாக்குதலை மறுபடியும் புலிகள் தொடங்கும் நாளில்தான் சார்லஸின் மொத்த பலமும் சிங்கள ராணுவத்துக்குப் புரியும்!” என்கிறார்கள் புலிகளின் அனுமான, அனுபவங்களை அறிந்தவர்கள்.

ஈழ ஆர்வலர்கள் தரப்பில் சார்லஸ் ஆண்டனி குறித்து இப்படிச் சொல்லப்பட்டாலும், இலங்கை அரசோ ”சார்லஸ் செயல்பாடுகள் குறித்த தகவல்களை நாங்கள் பரப்ப வேண்டிய அவசியமில்லை!” என சொல்லிக் கொண்டிருக்கிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.