அனைத்துலக இராஜதந்திரிகளை அவசரமாக சந்தித்து உண்மைக்கு மாறான தகவலை வழங்கியுள்ள போகல்லாகம

rohitha_bogollagama010வன்னிப்பெரு நிலப்பரப்பில் சிறிலங்கா படையினரால் பொதுமக்கள் கொல்லப்படுவதாக இரா.சம்பந்தன் தெரிவித்த கருத்துக்கள் பிழையானவை என கொழும்பில் உள்ள அனைத்துலக இராஜதந்திரிகளை  வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம அவசரமாக சந்தித்து உண்மைக்கு மாறான தகவல்களை வழங்கியுள்ளார்.

நேற்று புதன்கிழமை மகிந்த ராஜபக்சவின் உத்தரவுக்கு அமைய கொழும்பில் உள்ள அனைத்துலக இராஜதந்திரிகளுக்கு அவசர அவசரமாக அழைப்பு விடுத்து ஊடகவியலாளர் மாநாட்டை நாடாத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்த கருத்துக்கள் பிழையானவை என தெரிவித்துள்ளார்.

மகிந்த அரசாங்கத்தின் படுகொலை தொடர்பான உண்மைகளை வெளியிட்டமையினால் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனை மறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்கம் பொய்யான பிரசாரங்களை செய்யவில்லை. விடுதலைப் புலிகளுக்காக சம்பந்தன் அனைத்துலக நாடுகளிடம் மண்டியிடுகின்றார், மக்கள் கொல்லப்பட்டு காயமடைகின்ற புகைப்படங்கள் இணையத்தளங்களில் திரிவுபடுத்தப்படு வெளியாகின்றன என்றும், இராஜதந்திரிகளிடம் அமைச்சர் ரோகித போகல்லாகம கூறியதாக கொழும்பு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் 2,000 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 4,500 பேர் காயமடைந்தும் உள்ளதாக சம்பந்தன் தெரிவித்திருந்தார்.

இதேவேளை சம்பந்தன் தெரிவித்த கருத்து விடுதலைப் புலிகளுக்கு சார்பானவை. இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும் என அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் கெஹலிய தெரிவித்திருந்தார்.

சிறிலங்கா அரசாங்கத்தில் உண்மையைச் சொன்னால் சம்பந்தப்பட்டவர்களை புலிச் சாயம் பூசுவார்கள். அல்லது அந்த அமைப்பை தடை செய்வார்கள். அதுவும் இல்லாவிட்டால் உண்மையைத் தெரிவிக்கும் ஊடகவியலாளர்களை சுட்டுக் கொல்வதுதான் மஹிந்த சிந்தனையின் தேர்தல் விஞ்ஞாபனமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.