தமிழீழம் மலருவதற்கு தமிழ் ஆர்வலர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் ராமதாஸ்
-
இவ் விடயம் 11. 06. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 17:03க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
இலங்கையில் தமிழீழம் மலருவதற்கு தமிழ் ஆர்வலர்களுடனும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களுடனும் சேர்ந்து ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் என்று டாக்டர் ராமதாஸ் பேசினார்.
தமிழ்படைப்பாளிகள் பேரியக்கம் சார்பில் ஈழத்தில் தமிழின அழிப்பில் ஈடுபட்ட, துணை நின்ற இனப்பகைவர்களை அடையாளம் காண்போம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு, அந்த இயக்கத்தின் இணை பொது செயலாளர் ஓவியர் வீர.சந்தனம் தலைமை தாங்கினார்.
கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,
இலங்கை பிரச்சினைக்காக எத்தனையோ போராட்டங்கள், பேரணிகள், உண்ணாவிரதங்கள் நடத்தினோம். தனித்தனியாக, கூட்டாக, இயக்கமாக செய்தோம். ஆனால் ஒன்றும் பலன் அளிக்கவில்லையே. எங்கள் கண் முன்னாலேயே தமிழினம் அழிந்தது.
கிராமத்திற்கு போய் கேட்டால், யாருக்கும் இலங்கைத் தமிழர் பிரச்சினை என்ன என்பதே தெரியவில்லை. தேர்தல் நேரத்தில் நாங்கள் பேசாத பேச்சா? ஆனால் யாருக்கும் தமிழன் என்ற உணர்வில்லையே. தமிழன், தமிழச்சிகள் எங்கே இருக்கிறார்கள்? அவர்களுக்கு எப்படி உணர்வுகளை ஊட்ட போகிறோம். சினிமா கொட்டகையிலும், குடிபோதையையும் கொடுத்து இளைஞர்களை சீரழிக்கும் இந்த கொடுமைக்கு எப்போது முடிவு கட்ட போகிறோம்.
தமிழீழம் மலரும், ஒரு காலத்திற்கு மேல் உருவாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதை சாத்தியமாக்க ஒரு நாள் முழுவதும் உட்கார்ந்து பேசுவோம். பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், தமிழ் ஆர்வலர்களை அழைத்து அவர்களுடன் ஆலோசனை செய்வோம் என்றார்.