சென்னை ஐகோர்ட் வளாகத்தில் வக்கீல்கள் பொலிஸார் மோதல்:100 க்கு மேற்பட்ட வக்கீல்கள் காயம்; பொலிஸ் ஸடேஷனுக்கு தீ வைப்பு

court2சுப்ரமணிய சாமி மீது முட்டை வீசிய வழக்கு இன்று நடைபெற இருந்தது. இவ்வழக்கில் நேரில் ஆஜராக இருந்தார் சுப்பிரமணியசாமி. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பொலிஸாருடன் வழக்கறிஞர்கள் நேருக்கு நேர் மோதலில் ஈடுபட்டனர். இதனால் ஐகோர்ட் வளாகம் போர்க்களம் போல் காட்சியளித்தது.

முட்டைவீச்சு சம்பவம் போல் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸாரும், அதிரடிப்படையும் குவிக்கப்பட்டிருந்தனர்.

சுப்பிரமணியசாமி மீது முட்டை வீசிய சம்பவத்தன்று(17.2.09) கோர்ட் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ஏ.சி. காதர் மொய்தீன், தன்னை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக பொலிஸில் புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார்.

அவரின் புகாரைத் தொடர்ந்து 19 வக்கீல்கள் மீது வழக்கு தொடர்ந்தது சென்னை காவல்துறை. குற்றம் சாட்டப்பட்ட 19 பேரில் வக்கீல் சங்க முன்னாள் செயலாளர் கினி இம்மானுவேல் உள்ளிட்ட இருவரை சென்னை பொலிஸ் நேற்று கைது செய்துள்ளது.

முதல் குற்றவாளி எனக் குறிப்பிடப்பட்டுள்ள வக்கீல் ரஜினிகாந்த் உள்ளிட்ட மற்றவர்களை பொலிஸ் தேடி வந்தது. குற்றம்சாட்டப்பட்ட மற்ற வழக்கறிஞர்கள், தாங்களாகவே முன்வந்து சரண் அடைவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் இன்று சுப்பிரமணியசாமி வழக்கு நடைபெறும் சமயத்தில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞர்களை கைது செய்ய பொலிஸார் உயர்நீதிமன்றத்திற்குள் நுழைந்தனர். அப்போது வழக்கறிஞர் ரஜினிகாந்த், தான் கொடுத்த புகாரின் படி முதலில் சுப்பிரமணியசாமியை கைது செய்யச்சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  பொலிஸாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் வாக்குவாதம் முற்றியது. பின்னர் இது கைகலப்பானது. இரு தரப்பினரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர்.

வழக்கறிஞர்கள் கல்வீச்சில் இறங்கினர். செருப்புகளை வீசினர். பொலிஸார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். பின்னர் அதிரப்படையினரும் வழக்கறிஞர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த மோதல் சம்பவத்தில் இரு தரப்பினருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இரத்தம் சொட்டச் சொட்ட வழக்கறிஞர்கள் அங்கும் இங்கும் ஓடினர்.

இரு தரப்பு மோதலில் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் நின்றிருந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நொறுங்கிப்போயின. அங்கிருந்த முக்கிய ஆவணங்களை கிழித்து எறிந்தனர். அப்படியும் ஆத்திரம் தாங்காமல் முக்கிய ஆவணங்களை தீயிட்டு கொளுத்தினர்.

பின்னர் ஓடிவந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினருடன் வெகு நேரமாய் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

பத்திரிகையாளர் ஒருவரின் கார் எரிக்கப்பட்டது. நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர் வழக்கறிஞர்கள் சிலர்.

வழக்கறிஞர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்திய சம்பவத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை, கோவை, மதுரை பகுதிகளில் வழக்கறிஞர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

1 மணி நேரத்திற்கு இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது. இதனால் போர்க்களமானது உயர்நீதிமன்ற வளாகம்.

இச்சம்பவம் குறித்து மூத்த வழக்கறிஞர் பிரபாகரன்

‘’சுப்பிரமணிய சாமி மீது முட்டை வீசி தாக்கப்பட்ட வழக்கில் பல்வேறு வழக்கறிஞர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் ஒரு வழக்கறிஞர் நேற்று கைது செய்யப்பட்டார்.

குற்றம் சுமத்தப்பட்ட மற்ற வழக்கறிஞர்கள் தாங்களாகவே சரண் அடைவதாக அறிவித்தனர்.

அவர்களை கைது செய்ய பொலிஸார் உயர்நீதிமன்றத்திற்குள் வந்தனர். அப்போது வழக்கறிஞர் ரஜினிகாந்த், தான் சுப்பிரமணிய சாமி மீது சுமத்தப்பட்ட வழக்கில் முதலில் அவரை கைது செய்யுங்கள். அப்புறம் எங்களை கைது செய்யுங்கள் என்று வாக்குவாதம் செய்தார்.

பொலிஸார் அதை காதில் வாங்காமல் வழக்கறிஞர்களை கைது செய்வதில் மும்முரமாக இருந்தனர். மேலும் ஐந்து பெண் வழக்கறிஞர்களையும் கைது செய்யப்போவதாக முற்பட்டனர். இதனால் பொலிஸாருடன் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டோம்.

அந்த நேரத்தில் தூரத்தில் கலர் சட்டை போட்ட ஒருவர் அருகில் இருந்து கல்லை எடுத்து பொலிஸார் மீது வீசினார். உடனே தயாராகவே இருந்த பொலிஸார் கண்மூடித்தனமாக வழக்கறிஞர்களை தாக்கினர்.

வழக்கறிஞர்களின் வாகனங்களை எல்லாம் தேடித்தேடி காவல்துறையினர் அடித்து நொருக்கினர். உயர்நீதிமன்றத்திற்குள் காவல்துறை திட்டமிட்டே ஒருவரை நிற்கச்சொல்லி, கற்களை தயாராக வைத்திருக்கச் சொல்லியிருக்கிறது.

இது காவல்துறை முன்கூட்டியே திட்டமிட்டு அரங்கேற்றிய வன்முறை நாடகம். இந்த நாடகத்தால் வழக்கறிஞர்கள் சமுதாயம் திட்டமிட்டு தாக்கப்பட்டது.

100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்தார்.

டிஜிபி, கமிஷனர் விரைந்தனர்:

உயர்நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட பெரும் வன்முறை குறித்து தகவல் அறிந்ததும் டிஜிபி ஜெயின், போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் விரைந்து வந்தனர்.

அதிரடிப்படை போலீஸாரும் வரவழைக்கப்பட்டனர். உயர்நீதிமன்ற வளாகத்தில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.

துணை ஆணையர் உள்பட 20 போலீஸார் காயம்:

இந்த வன்முறையில் துணை ஆணையர் சாரங்கன் உள்பட 20 போலீஸார் காயமடைந்திருப்பதாக காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சில வக்கீல்கள் போலீஸாரின் தடியடியில் சிக்கி மண்டை உடைந்ததாக வக்கீல்கள் தரப்பில் கூறப்பட்டது.

நீதிமன்ற கேட்டை மூடிய மதுரை வக்கீல்கள்:

சென்னையில் நடந்த தடியடி, மோதல் சம்பவம் குறித்துத் தகவல் பரவியதும் மதுரை உயர்நீதி்மன்ற வக்கீல்களும் போராட்டத்தில் குதித்தனர்.

உயர்நீதிமன்றக் கிளை வாசல் கேட்டை இழுத்து மூடி அங்கு ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் குதித்தனர். இதனால் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்ளிருந்து யாரும் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் போலீஸாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே இன்று மாலை மூண்ட இந்த பெரும் ரகளையால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

சுவாமி மீது தாக்குதல்-பாராட்டி போஸ்டர்கள்:

இதற்கிடையே சுப்பிரமணியம் சுவாமி தாக்கப்பட்டதை பாராட்டி சென்னை நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

சுப்பிரமணியம் சுவாமி செல்லும் இடம் எல்லாம் இதுபோல ‘சிறப்பு செய்யுங்கள்’ என்று அந்த போஸ்டர்களில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.