பிரித்தானியாவில் நடந்த பேரணியில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு
-
இவ் விடயம் 21. 06. 2009, (சனி),
தமிழீழ நேரம் 14:52க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள், புகைப்படங்கள், புலத்தமிழர் செய்திகள்
வன்னியில் இனப்படுகொலையை நிகழ்த்தியோரும் அதனை மூடிமறைப்போரும் நீதியின் முன்நிறுத்தப்படவேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து லண்டனில் நேற்று சனிக்கிழமை மாபெரும் பேரணி ஒன்று நடாத்தப்பட்டது. இப் பேரணியில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
லண்டன், ஹைட் பார்க் கோணர் எனும் இடத்தில் ஆரம்பமான இம்மாபெரும் பேரணியில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
தமிழர் அல்லாத வேற்று இன நண்பர்கள் பலரையும் இங்கு காணக்கூடியதாக இருந்தது.
பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் பேரணி இன்று பிரித்தானியாவில் மதியம் ஆரம்பமாகியது.
- காணாமல் போயுள்ளவர்கள் மீட்கப்பட வேண்டும்
- முகாம்களில் வாழும் மக்கள் இயல்பு நிலை வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும்
- இனப்படுகொலையை நிகழ்த்தியோரும் அதனை மூடிமறைப்போரும் நீதியின் முன்நிறுத்தப்படவேண்டும்.
பேரணியில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் கறுப்பு உடை அணிந்து, கைகளில் கறுப்புக் கொடிகளை ஏந்தி தமது சோகத்தை வெளிப்படுத்தினார்கள்.
ஊர்வலத்தின் முன்னால் தமிழர் கலைக்குழுவினர் வன்னி வதைமுகாம்களின் கொடூரத்தை சித்தரிக்கும் காட்சிகளை தத்ரூவமாக நிகழ்த்திச் சென்றனர்.
மூடி மறைக்கப்பட்ட இரும்புத்திரையின் பின்னால் கொல்லப்பட்ட மக்களின் உருவப்படங்களை தாங்கிய உறவுகள் பேரணியின் முற்பகுதியில் நிறைந்து காணப்பட்டனர்.
ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுள்ளதாக இலங்கை அரசு அறிவித்தபின்னர், நடைபெறும் இப்பேரணி மேற்குலக அரசுகளினாலும் ஊடகங்களினாலும் உற்று நோக்கப்படுகின்றன.
பிரித்தானியாவின் மூத்த அரசியல்வாதி டொனி பென் , பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜெரமி கொபன், சைமன் ஹுஸ், கொலம்பியன் இனத்தவரும் கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் மனித உரிமை விரிவுரையாளர் அன்டி ஹிகின்பொட்டம், இடது சாரி சோசலிஸ்ட் கட்சியின் தேசிய அமைப்பாளர் டான் மெயர், அக்ட் நொவ் அமைப்பின் ரிம் மாட்டின் ஆகியோர் உரையாற்றினர்.
இதேவேளை, இன்றைய மாபெரும் பேரணி, ஈழத்தமிழருக்கு நீதியானதும் நியாயமானதுமான ஒரு அரசியல் தீர்வு கிட்டும் வரை பிரித்தானியத் தமிழர் உறங்கப்போவதில்லை என்ற செய்தியை உலக நாடுகளுக்கு உரக்க கூறி நிற்கிறது.


































































