உலகில் இலங்கை என்ற ஒரு நாடு இல்லாது போன்று ஐநா செயல்ப்படுகின்றது
-
இவ் விடயம் 21. 06. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 15:26க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
இலங்கையில் ஐ.நா.வின் நிதியுதவியில் இயங்கும் முகாம்களுக்கு கமராக்கள், கையடக்கத் தொலைபேசிகளை ஐ.நா. அதிகாரிகள் கொண்டு செல்வது நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த விடயம் குறித்து கருத்துத் தெரிவித்த பான் கீ மூனின் பேச்சாளர், “இதனை ஐ.நா. ஏற்றுக்கொள்ளுமென்று நான் நினைக்கவில்லை’ என்று இன்னர் சிற்றி பிரஸுக்கு வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறார்.
இந்த வருட முற்பகுதியில் ஐ.நா. அலுவலர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை ஐ.நா. ஏற்றுக்கொண்டிருந்தது. ஆனால், தாங்கள் முகாம்களில் பார்க்கும் துஷ்பிரயோகங்களை வெளிக்கொணர்வதோ அல்லது அவற்றைப் படம் பிடிப்பதோ தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதை ஐ.நா. ஏற்றுக்கொள்கிறதா? என்பதில் தெளிவற்ற நிலை காணப்படுவதாக இன்னர் சிற்றி பிரஸ் கூறுகிறது.
இந்த விடயம் குறித்து தான் ஆராய்வதாக பேச்சாளர் கூறியுள்ளார். நாம் பொறுத்திருந்து பார்ப்போம் என்று இன்னர் சிற்றி பிரஸ் கூறியுள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகள் தொடர்பான செய்திகள் வெளிவந்திருக்கும் நிலையில்இ ஐ.நா.வின் உயர்மட்ட மனிதாபிமான விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி ஜோன் ஹோம்ஸ் பட்டினிக்கெதிரான செயற்பாட்டு அமைப்பின் 17 பணியாளர்கள் கொலை தொடர்பான விசாரணையை அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவந்திருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இன்னமும் பதிலளிக்கவில்லை.
“தற்போதைய தருணத்தில் முகாம்களுக்கு நாங்கள் முழு அளவில் செல்லக்கூடியதாக இருக்கின்றது’ என்று அவர் தெரிவித்ததாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
அப்படியானால் கையடக்கத் தொலைபேசிகள், கமராக்கள் இன்றியா முகாம்களுக்கு செல்வதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது? துஷ்பிரயோகங்கள் குறித்து அறியவரும் போது ஐ.நா. மனிதாபிமான ஒருங்கிணைப்பு அலுவலகம் என்ன செய்கிறது? தனது தடுத்துவைக்கப்பட்ட பணியாளர் தொடர்பாகத் தான் அமைதியான முறையில் கதைத்து வருவதாக அந்த அலுவலகம் கூறியுள்ளது. ஆனால், இந்தப் பிரச்சினை குறித்து ஒருதடவை மட்டுமே பிரஸ்தாபிக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐ.நா. வரவேற்பு நிகழ்வில் இலங்கையில் இந்த வருடம் இடம்பெற்றவை தொடர்பாக ஆபிரிக்கத் தூதர்கள் பலர் இன்னர் சிற்றி பிரஸுக்கு தமது கவலைகளை வெளிப்படுத்தினர்.
பாதுகாப்பதற்கான பொறுப்புக்கு என்ன நடந்தது என்று மைக்கிரப்பைச் சேர்ந்த தூதுவர் ஒருவர் கேள்வியெழுப்பினார். இறுதிக்கட்டத்தின் முன்னர் யாராவது தடுத்து நிறுத்தியிருக்க வேண்டுமே?
வெள்ளைக் கொடியை அசைத்துக்கொண்டு சரணடைய முயன்ற விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தொடர்பாக வெளிவந்த செய்திகள் குறித்து மற்றொரு கருத்து வெளியிடப்பட்டது. ஐ.நா. தூதுவர் விஜே நம்பியாருடன் தொடர்பாடல்களை மேற்கொண்ட பின்பே அவர்கள் வெள்ளைக் கொடியுடன் வந்ததாகவும் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
“அது நல்லதல்ல’ என்று நாடொன்றின் நிரந்தர பிரதிநிதியாக இருந்து வெளியேறவிருக்கும் தூதுவரொருவர் குறிப்பிட்டிருந்தார்.
அவருடைய நாடு இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட நாடாகும். தமது மேற்குலக சகாக்களிலும் பார்க்க இந்த ஆபிரிக்கத் தூதுவர்கள் அதிக அளவில் தமது கவலைகளை வெளிப்படுத்தினர். அவர்களுடைய கவலைகள் இதய சுத்தியுடனும் அதிக கரிசனையுடனும் காணப்பட்டது.
ஆனால், என்ன நடந்தது என்பதை அரசியலே நெறிப்படுத்துகின்றது. என்ன நடைபெற்றுக் கொண்டிருப்பதென்பதையும் அரசியலே நெறிப்படுத்துகின்றது என்று இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.