மிகுதியாக இருக்கும் விடுதலைப் புலிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது – இராணுவம் அறிவிப்பு
-
இவ் விடயம் 21. 06. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 19:26க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பதுங்கியுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக கிழக்கின் வனாந்திரப் பகுதிகளுக்குள் புலி உறுப்பினர்கள் ஊடுறுவியிருக்கக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.
எனவே, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளில் படையினர் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், தீவிர தேடுதல் வேட்டைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
பாதுகாப்பு காரணங்களினால் இராணுவத் திட்டங்கள் குறித்து எவ்விதத் தகவல்களும் வெளியிடப்படவில்லை.
கிழக்கு நோக்கி நகர்ந்து வரும் விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்வதே இந்த இராணுவ நடவடிக்கைகளின் பிரதான நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், இதுவரையில் கிழக்கு காட்டுப்பகுதிகளில் நடத்தப்பட்ட தேடுதல்களின் போது இரண்டு தடவைகள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்த இரண்டு தாக்குதல்களையும் படைவீரர்கள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்துள்ள போதிலும், சிறு சிறு குழுக்களாக புலிகள் மீண்டும் அணி திரளக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும், அதற்கு இடமளிக்கப்படக் கூடாது எனவும் உயர் இராணுவ அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.