நாடு கடந்த அரசாங்கம் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என த.தே.கூட்டமைப்பு தெரிவித்துள்ளது
-
இவ் விடயம் 22. 06. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 14:57க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் இலங்கைத் தமிழர் எவரும் இல்லை எனத் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராஜ இன்று தெரிவித்தார். கூட்டமைப்பினரை கலந்தாலோசிக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் எந்த ஒரு பதவியிலும் இலங்கை வாழ் தமிழர்கள், அல்லது த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்பட இல்லை எனக் கூறியுள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நடைமுறைக்கு ஒத்துவருமா என நிருபர்கேட்டபோது பதிலளித்த மாவைசேனாதிராஜா பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் எனக் கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்தில் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த மறைந்த சு.ப.தமிழ்ச்செல்வன், பல கட்சிகளை இணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பாக 22 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஒரு மாபெரும் சக்தியாக மாற்றியிருந்தார்.
தற்போது உள்ள சூழ்நிலையில், இலங்கையில் செயல்பட்டுவரும் த.தே.கூட்டமைப்பினர் ஈழத்தில் வாழ்கின்ற அனைத்துத் தமிழர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாகத் திகழ்கிறது. இந்த வேளையில் இவர்களை புறம்தள்ளி அரசியல் தீர்வொன்றை காணமுடியாது என்பதே தற்போதைய யதார்த்த நிலையாகும். த.தே.கூட்டமைப்பினரிடையே தற்போது சில கருத்து முரண்பாடு காணப்படுவதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அவற்றை விடுத்து ஒன்றுபட்டு செயல்படுவதே, சமகாலத்தில் பயன் தரும், அல்லது ஒரு அரசியல் தீர்வை எட்ட வழிசமைக்கும்.
த.தே.கூட்டமைப்பினர் உடைவதையோ, அல்லது உறுப்பினர்கள் பிரிவதையோ புலம்பெயர் தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.