பொதுமக்கள் கோருவது போர்நிறுத்தமே – இந்தியாவுக்கு விடுதலைப் புலிகள் பதில்

lttelogoஇலங்கையின் வடக்கே போர்பிரதேசத்தில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களை வெளியே கொண்டுவருவதற்கு உதவதாம் தயாராக இருப்பதாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளித்த விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பா. நடேசன் அவர்கள், தம் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுமக்கள் இந்தியாவிடமும், சர்வதேச சமூகத்திடமும் போர் நிறுத்தத்தையே கோருவதாக தெரிவித்தார்.

பிபிசி தமிழோசைக்கு அவர் வழங்கிய சிறப்புச் செவ்வியில் விடுதலைப்புலிகள் போர் நடக்கும் பகுதியிலிருந்து வெளியேறும் பொதுமக்களை தடுப்பதாகவும், சிலரை சுட்டுக் கொல்வதாகவும் ஐநா மன்றம் கூறியிருந்ததை மறுத்ததுடன், இது குறித்து சர்வதேச நிறுவனங்கள் நேரில் வந்து பார்த்தால் உண்மை நிலைமை அவர்களுக்கு விளங்கும் என்றும் கூறினார்.

”எமது மக்கள் எங்களோடுதான் வாழ்ந்து வருகிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக இராணுவ தாக்குதல்கள் நடந்த சமயத்தில் மக்கள், விடுதலை புலிகளின் இன்ப துன்பங்களில் மட்டுமல்லாது போராட்டத்திலும் பங்குபெற்று வருகிறார்கள். அரசு பொய்யான பிரச்சாரத்தை செய்கிறது. சர்வதேச நிறுவனங்களோ ஒரு தலைப்பட்சமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன”, என்றார் நடேசன்.

ஐநா மன்ற ஊழியரை விடுதலைப்புலிகள் கட்டாயமாக ஆள்சேர்த்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேட்டபோது, தமது அமைப்பு யாரையும் கட்டாயப்படுத்தி ஆட்சேர்ப்பதில்லை என்றும், அதேசமயம் அரச படைகளின் அக்கிரமங்கள் அதிகரிக்கும்போது பொதுமக்களின் சகலதரப்பாரும் தமது இயக்கத்தில் தாமாக முன்வந்து இணைவதாகவும், அப்படி அந்த ஊழியரும் இணைந்திருந்தால் தமது இயக்கம் அவரை இணைத்துக்கொண்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.