இலங்கையர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்கக் கூடாதென உலக நாடுகளிடம் வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை
-
இவ் விடயம் 23. 06. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 0:05க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
இலங்கையர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்கக் கூடாதென உலக நாடுகளிடம் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்கள் உலகின் பல நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளதாகவும், இலங்கையர் களுக்கு புகலிடம் அளிக்க வேண்டிய அவசியமில்லை என சர்வதேச நாடுகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிகமாக இலங்கையர்கள் தஞ்சம் கோரும் நாடுகளது உரிய அதிகாரிகளுக்கு இது குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் எந்தவொரு பிரஜையும் அமைதியான முறையில் வாழக் கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.