இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமது பணியாளர்களை விடுவிக்க ஐ.நா. முயற்சி
-
இவ் விடயம் 23. 06. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 13:53க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்டிருக்கும் உள்ளூர் பணியாளர்கள் இருவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுப்பது பற்றி வெளிவிவகார அமைச்சுடன் ஆராய்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
“வவுனியாவில் பணியாற்றிவந்த ஐ.நா.வின் உள்ளூர் பணியாளர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் குறித்து கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் பாதுகாப்பு அமைச்சிடமும், பொலிஸ் திணைக்களத்திடமும் விசாரித்துள்ளது” என வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
உள்ளூர் பணியாளர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லையென ஐ.நா. அலுவலகம் கூறுகிறது.
தமது இரண்டு உள்ளூர் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு சட்டநடவடிக்கைகள் எதுவும் எடுக்கமுடியமா என்பது பற்றி தாம் ஆராய்ந்து வருவதாக கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் பேச்சாளர் கோர்டன் வெயிஸ் தெரிவித்தார்.
எனினும், ஐக்கிய நாடுகள் சபைக்கும், அரசாங்கத்துக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி இவர்கள் கைதுசெய்யப்பட்டார்களா இல்லையா என்பது பற்றிக் கருத்துக் கூற அவர் மறுத்துவிட்டார்.
“ஐ.நா. விடயங்களை நேரடியாகக் கையாழும் வெளிவிவகார அமைச்சின் ஊடாக இந்த விடயத்தை நாங்கள் நீதி அமைச்சு உள்ளிட்ட ஏனைய தரப்பினருக்குத் தெரியப்படுத்தியுள்ளோம்.
எனினும், இதுவரை இந்தக் கைதுகள் தொடர்பாக எமக்கு எந்தவிதமான பதிலும் வழங்கப்படவில்லை. அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுப் பற்றி எமக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை” என்றார் கோர்டன் வெயிஸ்.