ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது ஆயுட்காலம் முழுவதும் நிறைவேற்று ஜனாதிபதியாக இருப்பார் ‐ பேர்டி பிரேமலால்
-
இவ் விடயம் 24. 06. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 21:27க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது ஆயுட்காலம் முழுவதும் நிறைவேற்று ஜனாதிபதியாக இருப்பார் என என்று வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அடுத்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இலங்கையின் ஆயுட்கால ஜனாதிபதியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வருவதை எவராலும் மாற்ற முடியாதிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சேருவிலவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் அவர் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற பின் நாங்கள் அரசியலமைப்பை மாற்றுவோம். அதன்பின் இந்த நாட்டின் ஆயுட்கால ஜனாதிபதியாக ஜனாதிபதி ராஜபக்ஷ விளங்குவார் என்பது மிகத் தெளிவானது என்றும் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க கூறியுள்ளார்.
அரசியலமைப்பில் எந்தவொரு மாற்றத்தை ஏற்படுத்துவதாயினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம். எதிர்கால பாராளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறும். ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிப்பதாயின் சர்வசன வாக்கெடுப்பின் மூலம் அதற்கு அங்கீகாரத்தைப் பெறமுடியும் என்ற நம்பிக்கையை வட மத்திய மாகாண முதலமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின்றி ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க அரசு திட்டமிடுவதாக உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் முதலில் கூறியிருந்ததும், அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக தகவல்துறை அமைச்சருமான அனுர பிரியதர்சன யாப்பா பின்னர் அறிக்கையொன்றை விடுத்திருந்ததும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.