சுயேச்சை வேட்பாளர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களால் தொலைபேசி மிரட்டல்கள் – ஆனந்தசங்கரி வருத்தம்
-
இவ் விடயம் 24. 06. 2009, (சனி),
தமிழீழ நேரம் 21:30க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், வடக்கில் ஆயுத கலாச்சாரம் நீடித்து வருவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி வருத்தம் வெளியிட்டுள்ளார்.
கடந்த 25 வருட காலமாக யாழ்ப்பாண மக்கள் துப்பாக்கி கலாச்சாரத்தினால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அதே நிலைமை நீடித்து வருகின்றமை பெரும் வேதனை அளிப்பதாகவும் ஆனந்த சங்கரி, ஜனாதிபதிக்கு கடிதம் ஊடாக தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம் தோற்கடிப்பட்டதன் மூலம் கிடைக்கப் பெறும் நன்மைகளை யாழ்ப்பாண மக்கள் இதுவரையில் அனுபவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட சிலரின் தனிப்பட்ட நலன் கருதிய செயற்பாடுகளே இதற்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இயங்கி வரும் சகல ஆயுதக் குழுக்களினதும் ஆயுதங்கள் பூரணமாக களைவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட்ட நபர்களுக்கு ஆயுதங்களை வழங்குவதனைவிடவும் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவது சாலச் சிறந்ததென அவர் தெரிவித்துள்ளார்.
சுயேச்சை வேட்பாளர்களுக்கும், மற்றும் அரசியல் கட்சிகளுக்கும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களால் தொலைபேசி மிரட்டல்கள்:
யாழ்.மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களுக்கும், மற்றும் அரசியல் கட்சிகளுக்கும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களால் தொலைபேசி மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அரசாங்கத்தை எதிர்க்கும் தமிழ்க் கட்சிகளுக்கோ அல்லது சுயேட்சைக் குழுக்களுக்கோ ஆதரவு வழங்கினால் கடும் விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என்றும் அவர்கள் தொலைபேசி மூலம் மிரட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஆளும் கட்சிகளுடனும் இலங்கை இராணுவத்துடனும் இணைந்து பல்வேறு படுகொலைக்குக் காரணமானவர்களையும், கடத்தல்கள் மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்டவர்களையும் அடையாளம் காணவோ அல்லது சட்டத்தின் முன் கொண்டு வரவோ சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களால் இதுவரை முடியாமலுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், சுயேட்சை வேட்பாளர்களுக்கும் மற்றும் தமிழ்க்கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் விடுக்கப்படும் அனாமதேய தொலைபேசி அச்சுறுத்தலானது அவர்களைப் பெரும் அச்சத்துள் ஆழ்த்தியிருக்கிறது.
இதேவேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குருநகரில் தனது ஆதரவாளர்களுடனான சந்திப்பின் போது, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தில் ஈபிடிபி போட்டியிடுமானால் தோல்வியைத் தழுவ வேண்டியேற்படும் என்றும், ஈபிடிபியின் சின்னமான வீணை சின்னத்தில் போட்டியிடுமாறும் அவருடைய கட்சி ஆதரவாளர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளார்.