வன்னியில் முளைவிடும் பௌத்த விகாரைகள்!

phnom phen buddhist templeவன்னிப் பெருநிலபரப்பில் பௌத்த விகாரைகளை நிறுவும் நடவடிக்கைகளில் முழுவீச்சுடன் சிறீலங்கா அரசு ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜாதிக ஹெல உறுமியவின் தலைவர் எல்லாவெல்ல மேதானந்த தேரர் தலைமையிலான பௌத்த தொல்லியல் ஆய்வுக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில், கட்சியின் கொள்கை வகுப்பாளரும், சிறீலங்கா சுற்றாடல்துறை அமைச்சருமான சம்பிக்க ரணவக்கவின் மேற்பார்வையின் கீழ் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது. இவற்றை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளில் சிறீலங்கா சமய விவகார அமைச்சர் பாண்டு பண்டாரநாயக்கவும், தேச நிர்மாணத்துறை அமைச்சர் ஒருவரும் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் மக்களின் தொன்மைமிக்க வரலாற்று நகராக விளங்கும் கிளிநொச்சியில், கடந்த மாதம் லும்பினி விகாரை என்ற பெயரில் பௌத்த விகாரை ஒன்று திறந்து வைக்கப்பட்டமை போன்று, தற்பொழுது முல்லைத்தீவு மாவட்டத்திலும் பௌத்த விகாரைகளை நிறுவும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிய வருகின்றது. கடந்த மே மாதம் 18ஆம் நாளன்று வட்டுவாகல் பாலத்தின் ஊடாக நெடுங்கேணிப் பகுதியின் திசையில் வவுனியா நோக்கி சிறீலங்கா படைகளால் பிடித்துச் செல்லப்பட்டு, தற்பொழுது வதைமுகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் சிலர் வழங்கிய தகவல்களின் படி, தாங்கள் கொண்டு செல்லப்பட்ட பாதையில் உள்ள வீடுகள் முற்றாக தரைமட்டமாக்கப்பட்டு அங்கு பௌத்த விகாரை ஒன்று கட்டியெழுப்பப்படுகின்றது.

இதனிடையே, சிறீலங்கா படையினரின் உள்ளக சுற்றறிக்கைகளில், கிராணிக்க என்ற பெயரில் கிளிநொச்சி நகரமும், மூலதூவ என்ற பெயரில் முல்லைத்தீவு நகரமும் அழைக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.