28வயதான சிவராசா சுபகிருஷ்ணன் தற்கொலைதாரியா?
-
இவ் விடயம் 26. 06. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 14:06க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை கொலை செய்யும் நோக்கில் கொழும்புக்கு சென்று மறைந்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் தற்கொலைதாரி, தாக்குதல் திட்டம் தொடர்பாக பல தகவல்களை வழங்கியுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
28வயதான சிவராசா சுபகிருஷ்ணன் என்ற இந்த தற்கொலை குண்டுதாரி, மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர் எனவும் ஜனாதிபதியின் பயணங்கள் குறித்த பல தகவல்களை இவர் திரட்டியிருந்ததுடன், ஜனாதிபதி பயணிக்கும் சந்தர்ப்பம் ஒன்றில் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்தாகவும் பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.
புலிகளின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டம்மானின் உத்தரவின் பேரில் இவர் கடந்த ஜனவரியில் கொழும்புக்கு சென்றுள்ளார். தாம் விடுதலைப்புலிகளின் தலைவருடன் இறுதி விருந்துபசரிப்பில் கலந்துகொண்டதாகவும் அதன் பின்னர், மேலும் 10 தற்கொலை போராளிகளுடன் வவுனியாவுக்கு சென்றதாகவும் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் குறிப்பிட்டு;ளளார்.
கடந்த டிசம்பர் 15ம் திகதி புலனாய்பு பிரிவின் தலைவர் பொட்டம்மானுடன் உணவருந்தியதாகவும் அவர் தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியதாகவும் சந்தேக நபர் விசாரணைகளின் போது கூறியதாக பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கொலைத் தொடர்பான திட்டத்திற்கு புலிகளின் தளபதியான கபில் அம்மான் பொறுப்பதாக இருந்துள்ளார்.
கைதுசெய்யப்பட்டுள்ள சுப கிருஷ்ணன் என்ற சந்தேக நபர் கடந்த 2002 ஆம் ஆண்டு புலிகள் அமைப்பில் இணைந்துள்ளார். இதன் பின்னர் கரும்புலி அணியில் பயிற்சிகளை பெற்றுக்கொண்டுள்ளார்.
திருகோணமலையை சேர்ந்த இவர் உயர்தரம் வரை படித்துள்ளார். சிங்கள மொழியல் நன்கு தேர்ச்சிப் பெற்றுள்ள இவர், கடந்த 2002 ஆம் ஆண்டு பல தடவைகள் கொழும்புக்கு சென்று திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.