யேர்மனியில் கொத்துக்குண்டு தடை மாநாடு: சிறீலங்கா எதிர்ப்பு
-
இவ் விடயம் 27. 06. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 19:43க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
கிளஸ்ரர் (Cluster) என அழைக்கப்படும் கொத்துக்குண்டைத் தடை செய்யும் முயற்சிக்கு சிறீலங்கா உட்பட பல நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
கொத்துக்குண்டை தடை செய்வது பற்றி ஆராயும் இரண்டு நாட்கள் (நேற்றும், இன்றும்) மாநாடு யேர்மனியின் தலைநகர் பேர்லினில் நடைபெற்று வருவதுடன், இதில் 80 இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதை சிறீலங்கா, அமெரிக்கா, இஸ்ரேல், ரஸ்யா, மற்றும் ஜோர்ஜியா போன்ற நாடுகள் தவிர்த்திருப்பதன் மூலம், அவை தடைக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறீலங்கா அதிபராக மகிந்த ராஜபக்ச பதவியேற்ற பின்னர், தமிழ் மக்கள் மீது ஆரம்பிக்கப்பட்ட இன அழிப்புப் போரின் உச்சக் கட்டமாக, வன்னியில் பொதுமக்களின் நிலைகள் மீது ரஸ்ய தயாரிப்புக் கொத்துக் குண்டுகள் சிறீலங்கா அரசினால் வீசப்பட்டிருந்தன.
எதிர்காலத்திலும் இவ்வாறான குண்டுகளை தமிழ் மக்கள் மீது பாவிக்க வேண்டியேற்படும் என சிறீலங்கா அரசு கருதியதால், கொத்துக் குண்டுகளின் தடைக்கு எதிராகச் செயற்பட்டிருப்பதாக நம்பப்படுகின்றது.
ஆட்டிலறி, மற்றும் வான் தாக்குதல் மூலம் வீசப்படும் ஒரு குண்டில் இருந்து பல நூற்றுக்கணக்கான குண்டுகள் வெடித்துச் சிதறி, பரந்தளவில் பாரிய சேதம் விளைவிக்கவல்ல இவ்வாறான குண்டுகளால், தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறான குண்டுகள் உடனே வெடித்துச் சிறதி சேதங்களை ஏற்படுத்தும் அதேவேளை, பல ஆண்டுகள் வெடிக்கும் தன்மையுடன் இருக்கக்கூடியவை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1943ஆம் ஆண்டுட பிரித்தானியாவுக்கு எதிரான போரில் யேர்மனி முதல் முதலில் கொத்துக் குண்டுளைப் பாவித்ததுடன், அதே ஆண்டு அமெரிக்க அரசு, வியட்னாம் மற்றும் கம்போடியாவிலும் இந்தக் குண்டுகளைப் பாவித்திருந்தது.
2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் நாள் முதன் முதலாக வன்னியில் இந்தக் குண்டு பாவிக்க ஆரம்பிக்கப்பட்டதுடன், வன்னி மக்கள் கொத்துக் குண்டுகளால் செத்து மடிந்து கொண்டிருந்தபோது, கடந்த ஆண்டு டிசம்பரில் நோர்வேயில் இந்தக் குண்டை தடை செய்வதற்கான இதே மாநாடு நடைபெற்றிருந்தமை நினைவூட்டத்தக்கது.